வெள்ளி, 12 ஆகஸ்ட், 2011

வெளிநாட்டு விமான சேவைக்கு தயாராகிறது மதுரை விமான நிலையம்

விரிவாக்கப் பணிகள் முடிந்துள்ள நிலையில், மதுரை விமான நிலையத்தில் கஸ்டம்ஸ் பிரிவைத் துவக்க, மத்திய நிதி அமைச்சகம் அனுமதியளித்துள்ளது. இதைத் தொடர்ந்து, சர்வதேச விமான நிலையமாக மாற, மதுரை விமான நிலையம் தயாராகிறது.
தென்மாவட்டங்களின் முக்கிய நகரமாக மதுரை விளங்குகிறது. கடந்த 1957ம் ஆண்டு, மதுரையில் ஒரு விமான நிலையம் அமைக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக, தென்மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி கணிசமான அளவிற்கு அதிகரித்துள்ளது. தொழில் ரீதியாக நாட்டின் மற்ற நகரங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் செல்வோர் எண்ணிக்கை பெருகி வருகிறது. அதிகரித்து வரும் விமானப் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, மதுரை விமான நிலையத்தை விரிவுபடுத்தும் பணிகள் துவக்கப்பட்டன. முதற்கட்டமாக, 7,500 அடி நீளம் கொண்டிருந்த ரன்வேயை, பெரிய விமானங்களும் இறங்கும் வகையில் 12,500 சதுர அடி கொண்ட ரன்வேயாக விரிவுபடுத்தப்பட்டது. இதையடுத்து, அதிநவீனமான டெர்மினல்கள் உருவாக்கப்பட்டன.
தென்மாவட்டங்களில் நிலவும் வறட்சி காரணமாக, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி உள்ளிட்ட சில மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள், வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்கின்றனர். துபாய், சிங்கப்பூர், மலேசியா மற்றும் இலங்கை நாடுகளுக்கு செல்வோர் அதிகம். இவர்கள் அனைவரும் சென்னை, திருச்சி, கோவை விமான நிலையங்களையே பயன்படுத்த வேண்டியுள்ளது. மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவித்து, வெளிநாட்டு விமானச் சேவையைத் துவக்கினால் பெரும் பயன் கிடைக்கும்.
மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற வேண்டும் என்று நீண்ட நாட்களாக ஒரு கோரிக்கை இருந்து வருகிறது. இதை நிறைவேற்றும் வகையில், முதற்கட்டமாக மதுரை விமான நிலையத்தில் கஸ்டம்ஸ் பிரிவை துவக்க, மத்திய நிதி அமைச்சகம் அனுமதியளித்துள்ளது. இது குறித்து சமீபத்தில் சென்னையில் பேட்டியளித்த இந்திய விமான நிலைய ஆணையத்தின் தலைவர் அகர்வால், "மதுரை விமான நிலையத்தில் கஸ்டம்ஸ் பிரிவைத் துவக்க, நிதி அமைச்சகம் அனுமதியளித்துள்ளது. அடுத்த கட்டமாக, கஸ்டம்ஸ் கவுன்டர்கள் அமைக்கும் பணி துவக்கப்படும். சர்வதேச விமானங்கள் மதுரையிலிருந்து இயக்கப்படும் போது, கஸ்டம்ஸ் மற்றும் இமிகிரேஷன் பிரிவுகள் அவசியம். கஸ்டம்ஸ் பிரிவிற்கு அனுமதி கிடைத்துள்ள நிலையில், இமிகிரேஷன் பிரிவைத் துவக்க அனுமதிக்கும்படி தமிழக அரசிடம் கேட்டுள்ளோம்' என்றார்.
மதுரை விமான நிலையத்திற்கான கஸ்டம்ஸ் பிரிவு குறித்து, கஸ்டம்ஸ் உயர் அதிகாரி ஒருவரை கேட்டபோது, "மதுரையில் இருந்து எத்தனை விமானங்கள் வெளிநாடு சேவை நடத்தப் போகின்றன என்ற எண்ணிக்கையின் அடிப்படையில் தான் அங்கு கஸ்டம்ஸ் அதிகாரிகள் நியமிக்கப்படுவர். விமானங்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், நிரந்தரமாக கஸ்டம்ஸ் அதிகாரிகள் செயல்படுவர். குறைவாக இருந்தால், வெளிநாட்டு விமானங்களின் வருகை மற்றும் புறப்பாட்டின் போது மட்டும் பணியாற்றுவர். மதுரை விமான நிலையத்திற்கு திருச்சியில் இருந்து கஸ்டம்ஸ் அதிகாரிகளை அனுப்புவதா அல்லது மதுரையில் உள்ள கஸ்டம்ஸ் அதிகாரிகளையே பயன்படுத்தலாமா என்பது குறித்து, ஆலோசனை நடந்து வருகிறது' என்றார்.
விமான நிறுவனங்கள் ரெடி: மதுரை விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டுச் சேவையைத் துவக்க, பல விமான நிறுவனங்கள் தயாராக உள்ளன. மதுரையில் இருந்து சிங்கப்பூர், மலேசியா, இலங்கை மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்கான பயணிகள் மற்றும் கார்கோ போக்குவரத்து அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, மதுரை விமான நிலையத்தை, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அதிகாரிகள் குழு பார்வையிட்டு சென்றுள்ளது. ஏர் ஆசியா நிறுவனமும் மதுரையில் இருந்து கோலாலம்பூருக்கு விமான சேவை நடத்த விருப்பம் தெரிவித்துள்ளது. கஸ்டம்ஸ், இமிகிரேஷன் பிரிவுகள் துவக்கப்பட்ட அடுத்த நாளில் இருந்தே வெளிநாட்டு விமானச் சேவையை துவக்க, மதுரை விமான நிலையம் தயாராக உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக