புதன், 10 ஆகஸ்ட், 2011

அனிதா ராதாகிருஷ்ணன் கைது பழிவாங்கலின் தொடர்ச்சி


தூத்துக்குடி முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திடீரென கைது செய்யப்பட்டுள்ளார். அவர் எதற்காக கைது செய்யப்பட்டுள்ளார் என்பது தெரியவில்லை. இதையடுத்து தூத்துக்குடியில் உள்ள காவல் நிலையங்களுக்கு அவரது குடும்பத்தினர் அலைந்து வருகின்றனர்.
அதிமுகவில் தீவிரமாக செயல்பட்ட முக்கியஸ்தர் அனிதா. தூத்துக்குடி மாவட்ட அதிமுக செயலாளராக இருந்தவர். திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏவாகவும் இருந்தார்.
இந்த நிலையில் திமுக பக்கம் அனிதா சாய்வதாக வந்த தகவலைத் தொடர்ந்து அனிதாவை கட்சியை விட்டு நீக்கினார் ஜெயலலிதா. இதையடுத்து முறைப்படி திமுகவில் போய்ச் சேர்ந்தார். திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டு இடைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வென்றார்.
இந்த நிலையில் தற்போது ஆட்சிமாற்றம் ஏற்பட்ட நிலையில் அனிதா ராதாகிருஷ்ணன் சீக்கிரமே போலீஸ் வளையத்தில் சிக்குவார் என அதிமுக தரப்பில் கூறி வந்தனர்.
இந்தப் பின்னணியில் இன்று திடீரென அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். தூத்துக்குடியில் உள்ள காந்தி காலனியில் உள்ள வீட்டுக்கு வந்த போலீஸார் அவரைக் கைது செய்து கொண்டு சென்றனர்.
எந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார், என்ன புகார் வந்தது என்பது குடும்பத்தினருக்குத் தெரிவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அனிதாவின் குடும்பத்தினர் அதிர்ச்சியும், குழப்பமும் அடைந்துள்ளனர்.
அனிதாவை எந்தக் காவல் நிலையத்தில் வைத்துள்ளனர் என்பதை அறிவதற்காக ஒவ்வொரு காவல் நிலையமாக உறவினர்களும், திமுகவினரும் தேடி வருகின்றனர்.
சமீபத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் அனிதா ராதாகிருஷ்ணன் திருச்செந்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு வென்றார் என்பது நினைவிருக்கலாம்.
கொலை முயற்சி வழக்கில் கைது?
கடந்த மார்ச் மாதம் 1ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் சுரேஷ் என்பவரைக் கொல்ல முயற்சி நடந்தது. இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் தற்போது அனிதாவையும் போலீஸார் சேர்த்துள்ளதாக தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக