சனி, 13 ஆகஸ்ட், 2011

யாழ் மாணவர்களுக்கு பாலியல் கல்வி போதிக்க படவேண்டும்

யாழில் 5 மாதங்களில் 75 திருமணமாகாத இளம் பெண்கள் கர்ப்பம் தரிப்பு
யாழ். மாவட்டத்தில் இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரையான 5 மாதங்களுக்குள் பதினெட்டு வயதுக்குட்பட்ட 75 பிள்ளைகள் திருமணமாகாமலே கர்ப்பம் தரித்துள்ளதாக யாழ் பிராந்திய சுகாதாரத் திணைகள வைத்திய அதிகாரி திருமதி திருமகள் தெரிவித்தார். இவ்வாறான சம்பவங்களில் பாடசாலை மாணவிகளே அதிகளவில் இனங்காணப்பட்டுள்ளதாக வைத்திய அதிகாரி திருமதி திருமகள் தெரிவித்தார். இவர்கள் இவ்வாறான தவறான வழிக்குச் செல்வதற்கு பெற்றோர்களும், ஆசிரியர்களுமே காரணம் எனவும், பாடசாலை மாணவர்களுக்கு பாலியல் கல்வி தொடர்பாகவோ, அதனால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பாகவோ இவர்கள் போதிப்பதில்லை எனவும் அவர் கூறினார். இணையத்தளம், மற்றும் எஸ்.எம்.எஸ் மூலம் பாலியல் தொடர்பான தவறான தகவல்களைப் பெற்று அவற்றை நடைமுறையில் அணுக முற்படுவதனாலேயே இவ்வாறான பாரதூரமான விளைவுகள் ஏற்படுகின்றன என்றும் வைத்திய அதிகாரி திருமதி திருமகள் தெரிவித்தார். இளவயதுக் கர்ப்பங்களைத் தடுப்பதற்கான செயற்திட்டம் கடந்தவாரம் தம்மால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட வைத்தியர், முதற்கட்டமாக பாடசாலை ஆசிரியர்கள், அதிபர்களுக்குச் செயலமர்வை ஆரம்பிததுள்ளதாகவும், இதன்போது மாணவர்களுக்கு வாழ்க்கைத் தேர்ச்சிப் பயிற்சிகளை வழங்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார். தொடர்ந்து மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் தனித்தனியாக இந்தப் பயற்சிகளை வழங்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக