செவ்வாய், 9 ஆகஸ்ட், 2011

பிரிவினையை வலியுறுத்தும் திமுகவை இந்தப் புதிய மசோதா நேரடியாகப் பாதித்தது.

நெற்றியிலே மூன்று கோடுகள்!

கட்சி தொடங்கி பன்னிரண்டு ஆண்டுகள் முடிவதற்குள் பிளவைச் சந்தித்த திமுக, அந்தச் சுவடு மறைவதற்குள் பொதுத்தேர்தலைச் சந்திக்கத் தயாரானது. கடந்தமுறை குளித்தலையில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கருணாநிதிக்கு இம்முறை அண்ணா ஒதுக்கிய தொகுதி தஞ்சாவூர்.
கருணாநிதியின் சொந்த மாவட்டம் என்பது மட்டும் காரணமல்ல; அங்கு நடந்த ஒரு போராட்டத்தில் கருணாநிதியின் பங்களிப்பு. தஞ்சாவூரில் இருக்கும் எஸ்.எம்.டி. பேருந்து நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் சில கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டத்தில் குதித்தனர். மறியல் செய்ய முயன்ற தொழிலாளர்களை அரசு கைது செய்தது. பேச்சுவார்த்தைகள் நடந்தன. ஆனால் பலன் கிடைக்கவில்லை.
நிலைமையை உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருந்த திமுக உடனடியாகத் தொழிலாளர் பிரச்னையில் தலையிட்டது. தொழிலாளர்களுக்கு ஆதரவாகப் போராட்டம் நடத்துமாறு கருணாநிதியை அனுப்பினார் அண்ணா. அவர் களமிறங்கியதும் போராட்டம் அடுத்தக் கட்டத்தை அடைந்தது. ஆம். தொழிலாளர்களுடன் இணைந்து திமுகவினரும் போராட்டத்தில் கலந்துகொண்டனர். தஞ்சையில் மட்டுமே நடந்துகொண்டிருந்த போராட்டம் கும்பகோணம், பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி, திருவாரூர் என்று அக்கம்பக்கத்து ஊர்களுக்கும் பரவியது. போராட்டத்தில் ஈடுபட்ட ஐந்நூறுக்கும் மேற்பட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.
நிலைமை விபரீதமடைந்ததை அடுத்து அரசு இறங்கிவந்தது. தொழில்துறை அமைச்சர் ஆர். வெங்கட்ராமன் தொழிலாளர்களையும் நிர்வாகத்தையும் அழைத்துப் பேசினார். பிறகு நிலைமை சீரானது. 51 நாள்கள் நடந்த போராட்டத்தில் கிடைத்த வெற்றி கருணாநிதியை அந்தப் பகுதியில் மேலும் பிரபலமாக்கியது. இதுதான் தஞ்சாவூர் தொகுதியை கருணாநிதிக்கு ஒதுக்கியதன் பின்னணி.
தஞ்சாவூர் தொகுதியில் களமிறங்கத் தயாரானபோது கருணாநிதிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்தத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் பரிசுத்த நாடார். செல்வாக்கு நிறைந்தவர். பணபலம் கொண்ட தொழிலதிபர். போட்டி கடுமையாக இருக்கும் என்பது தொடக்கத்திலேயே தெரிந்துவிட்டது.
உண்மையில் கருணாநிதியை எதிர்த்து மட்டும் அல்ல; கடந்த தேர்தலில் திமுக வெற்றிபெற்ற பதினைந்து தொகுதிகளிலும் செல்வாக்கு மிக்க நபர்களையே களத்தில் இறக்கியிருந்தார் காமராஜர். அத்தனை பேரையும் தோற்கடிக்க வேண்டும் என்பதுதான் காமராஜர் வகுத்த வியூகம். முக்கியமாக, அண்ணா போட்டியிட்ட காஞ்சிபுரம் தொகுதியில் நடேச முதலியார் என்ற பேருந்து அதிபர் நிறுத்தப்பட்டிருந்தார்.
தஞ்சாவூர் தொகுதியில் வெற்றிவாய்ப்பு மிகவும் குறைவு என்று அனுபவசாலிகள் கூறியபோது கருணாநிதி நம்பிக்கையுடன் பிரசாரம் செய்தார். பேருந்துத் தொழிலாளர்களின் ஆதரவு கருணாநிதிக்கு இருந்தது. அவர்கள் மூலம் ஏராளமான வாக்காளர்களைக் கவரமுடிந்தது. ஒருவழியாகத் தேர்தல் முடிந்து முடிவுகள் வெளியாகின. மீண்டும் ஒரு அதிர்ச்சி வைத்தியம் காத்திருந்தது. ஆம். பதினைந்து இடங்களை வைத்திருந்த திமுகவுக்கு இம்முறை ஐம்பது இடங்கள் கிடைத்திருந்தன.
திமுகவைக் குறிவைத்து காமராஜர் வகுத்த திட்டம் வெகுவாகப் பலன் கொடுத்திருந்தது. கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற அனைத்து திமுக வேட்பாளர்களும் (அண்ணா உள்பட) தோல்வி அடைந்திருந்தனர், ஒருவரைத் தவிர. அவர், தஞ்சாவூரில் போட்டியிட்ட கருணாநிதி.
திமுக சட்டமன்றக்குழுவின் தலைவராக நெடுஞ்செழியன் தேர்வுசெய்யப்பட்டார். கடந்தமுறை கொறடாவாக இருந்த கருணாநிதிக்கு இம்முறை துணைத்தலைவர் பதவி கிடைத்தது. (காஞ்சிபுரத்தில் தோல்வியடைந்த அண்ணாவை தமக்கிருந்த ஐம்பது எம்.எல்.ஏக்கள் பலத்தைக் கொண்டு மாநிலங்களவை உறுப்பினராக்கியது திமுக)
தேர்தல் முடிந்த கையோடு தமிழ்நாட்டின் பிரதான பிரச்னையாக இருந்த விலைவாசி உயர்வைக் கையில் எடுத்தது திமுக. மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் நடந்தது. போராட்டத்தை ஒடுக்கும் வகையில் இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட திமுக தொண்டர்களைக் கைது செய்தது அரசு. தலைவர்களும் கைதாகினர். அண்ணா வேலூர் சிறையில். நெடுஞ்செழியன் சென்னையில். கருணாநிதிக்கு திருச்சி சிறை. அதுவும், மூன்று மாதங்கள், நான்கு மாதங்கள் என்று ஆளுக்கொரு தண்டனை.
திமுகவினர் சிறைப்பட்டிருந்த சூழலில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே மூண்டிருந்த யுத்தம் உச்சக்கட்டத்தை எட்டியிருந்தது.

பிரதமர் நேரு அனைத்துக்கட்சியினரின் ஆதரவையும் கோரினார். திமுகவுக்கும் அந்த அழைப்பு வந்தது.

திமுகவின் பதிலுக்கு தேசிய முக்கியத்துவம் தரப்பட்டது. காரணம், திராவிட நாடு பிரிவினையை வலியுறுத்தி வரும் கட்சி திமுக. எனினும், அண்ணா கொடுத்த பதில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.
‘சீனாக்காரனை விரட்டும் முயற்சியில் மட்டுமல்லாமல் யுத்தநிதி திரட்டும் பணியிலும் முழுமூச்சுடன் வேலைசெய்ய திமுகவினர் தயாராக இருக்கின்றனர். நாடு காக்கும் பணியில் ஈடுபடுகிறோம்’
சிறையில் இருந்து வெளிவந்ததும் யுத்தநிதி சேகரிக்கத் தயாரானது திமுக. அப்போது அண்ணாவுக்கு நினைவுக்கு வந்தவர் கருணாநிதி. கட்சியின் பொருளாளர் என்ற முறையில் நிதி திரட்டும் வேலையில் இறங்கினார் கருணாநிதி. சென்னை எஸ்.ஐ.ஏ.ஏ திடலில் யுத்தநிதி வசூலிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டார். மின்னல் வேகத்தில் நிதி திரண்டது. சுமார் முப்பத்தைந்தாயிரம் ரூபாய். தங்க நகைகளையும் நன்கொடையாகக் கொடுத்தனர். திமுக சார்பாக திரட்டப்பட்ட மொத்த நிதியையும் நெடுஞ்செழியன் மற்றும் கருணாநிதி இருவரும் இணைந்து முதலமைச்சர் காமராஜரிடம் ஒப்படைத்தனர்.
யுத்தம் ஒருவழியாக முடிவுக்கு வந்தது. ஆனால் காங்கிரஸ் கட்சிக்கோ வேறொரு கவலை அல்லது பயம் பிடித்துக்கொண்டது. திமுகவுக்கு பதினைந்து இடங்கள் கிடைத்தது முதல் அதிர்ச்சி. ஐந்து ஆண்டுகளில் ஐம்பதாக மாறியது இரண்டாவது அதிர்ச்சி. திமுகவின் தொடர்ச்சியான வளர்ச்சி காங்கிரஸ் கட்சியை உரத்த சிந்தனைக்கு ஆளாக்கியது. அது, பிரிவினைத் தடைச்சட்ட மசோதாவில் வந்து முடிந்தது.
1963 ஜனவரி மாதம் நாடாளுமன்றத்தில் பிரிவினைத் தடைச்சட்ட மசோதாவைக் கொண்டு வந்தது மத்திய அரசு. இந்தியாவைப் பிரிக்கவேண்டும் என்றோ, தனிநாடு வேண்டும் என்றோ யாரேனும் கூறினால் அவர்கள் மீது தடைச்சட்டம் பாயும். திராவிட நாடு பிரிவினையை வலியுறுத்தும் திமுகவை இந்தப் புதிய மசோதா நேரடியாகப் பாதித்தது.
திமுகவின் உயிர்நாடிக் கொள்கையான திராவிட நாடு பிரிவினையைத் தொடர்ந்து வலியுறுத்தும் பட்சத்தில் திமுகவுக்கே தடை விதிக்கப்படும் அபாயகரமான சூழல் உருவானது. மாநிலங்களவையில் பேசும்போது தனது எதிர்ப்பை அழுத்தந்திருத்தமாகப் பதிவுசெய்தார் அண்ணா. எனினும், மசோதா நிறைவேறியது. திமுகவுக்கு நெருக்கடி தொடங்கியது.
இப்படியொரு முடிவை காங்கிரஸ் எடுக்கும் என்பதை முன்கூட்டியே கணித்திருந்தார் கருணாநிதி. யுத்த சமயத்தில் நடக்கவேண்டிய உள்ளாட்சித் தேர்தல்களை ஒத்திவைக்க வேண்டும் என்பதற்காக சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்ட மசோதாவின்மீது அவர் பேசும்போது அந்தக்கணிப்பு வெளிப்பட்டது.
இந்தியத் துணைக்கண்டத்தின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள் மீட்கப்படவேண்டும் என்பதற்காக சாமானிய – சாதாரண மக்களாக்க் கொண்ட திமுக தன்னால் இயன்ற உதவிகளைச் செய்துவருகிறது. புராணத்திலே ராமர், இலங்கைக்கு அணை கட்டும்போது அணில் உதவிசெய்தது என்றும் அந்த அணிலின் முதுகில் ராமர் தடவிக் கொடுத்தார் என்றும் அப்படித் தடவியதால் ஏற்பட்டவைதான் அணிலின் முதுகில் உள்ள மூன்று கோடுகள் என்றும் கூறப்படுகிறது. அணிலைப் போன்று உதவி புரியும் எங்கள் முதுகில் நீங்கள் தடவிக் கொடுக்காவிட்டாலும் நெற்றியிலே மூன்று கோடு போடாமல் இருந்தால் அதுவே போதும்.
தொடுக்கப்பட்டுள்ள தாக்குதலில் இருந்து தன்னைத் தற்காத்துக்கொள்ள திமுக தயாரானது.
3 நவம்பர் 1963 அன்று கூடிய திமுக செயற்குழுவில் கட்சியின் குறிக்கோள் திருத்தப்பட்டது. தமிழகம், ஆந்திரம், கேரளம், கர்நாடகம் ஆகிய நான்கு மொழிவழி மாநிலங்களும் இந்திய அரசுரிமை, ஒருமைத்தன்மை, அரசியலமைப்புச்சட்டம் ஆகியவற்றுக்குள் இயன்ற அளவு கூடுதலான அதிகாரங்களைப் பெற்று, நெருங்கிய திராவிடக் கூட்டமைப்பாக நிலவப் பாடுபடுவது என்பதுதான் அந்தத் திருத்தம். இதன்மூலம் திமுகவுக்கு ஏற்பட இருந்த பாதிப்பு களையப்பட்டது.
இப்போது அடுத்த பிரச்னை எழுந்தது. மொழிப்பிரச்னை. 26 ஜனவரி 1965 முதல் இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தி மட்டுமே இருக்கும் என்ற ஆட்சிமொழி மசோதாவைக் கொண்டு வந்தார் மத்திய உள்துறை அமைச்சர் லால் பகதூர் சாஸ்திரி. ஆங்கிலத்தைப் பயன்படுத்தலாம் (May be), இந்தியை பயன்படுத்தியே தீரவேண்டும் (Shall be) என்றது அந்த மசோதா. தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளுக்கும் இழைக்கப்படும் அநீதி என்று விமரிசித்த திமுக, அரசின் முடிவை எதிர்த்துப் போராட்டம் நடத்த முடிவெடுத்தது. இந்தி எதிர்ப்புப் போராட்டக் குழுவின் தலைவராக கருணாநிதி நியமிக்கப்பட்டார்.
போராட்டத்தில் ஈடுபட விருப்பம் உள்ளவர்களின் பட்டியலைத் தயார்செய்து அனுப்பவேண்டும் என்று கிளைக்கழகப் பிரதிநிதிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார் கருணாநிதி. பிறகு 15 ஜூலை 1963 அன்று இந்தி எதிர்ப்புப்போராட்டக்குழு கூடியது. அதில் அண்ணா பிறந்தநாளான செப்டெம்பர் 15 தொடங்கி ஒருவார காலத்துக்கு நாடு தழுவிய அளவில் இந்தி எதிர்ப்பு வாரம் அனுசரிக்கவேண்டும் என்று முடிவுசெய்யப்பட்டது. தவிரவும், இந்தி எதிர்ப்புப் பிரசார நாடகங்கள் நடத்துவது, சுவரொட்டிகள், துண்டறிக்கைகள் வெளியிடுவது, சேலம் – தஞ்சை – நெல்லை – சென்னை ஆகிய ஊர்களில் இந்தி எதிர்ப்பு மாநாடுகள் நடத்துவது விரிவான போராட்டத் திட்டங்களை வகுத்தார் கருணாநிதி.
சேலத்தில் இந்தி எதிர்ப்பு மாநாடு கூடியது. அங்கே திட்டமிட்டபடி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. துண்டறிக்கைகள் விநியோகம் செய்யப்பட்டன. வெறுமனே இந்தித் திணிப்பு ஒழிக! தமிழ் வாழ்க! என்ற வார்த்தைகளைக் கொண்டதாக அல்லாமல் மறைமலையடிகள், சோமசுந்தர பாரதியார், திரு.வி.க ஆகியோரது அனல் கக்கும் வார்த்தைகளைக் கொண்டதாக உருவாக்கியிருந்தனர். மாநாட்டின் இறுதியில் இரண்டு நாடகங்கள் போடப்பட்டன. ஒன்று, கருணாநிதி எழுதிய மாற்றான் தோட்டத்து மல்லிகை! இன்னொன்று, வஞ்சியும் காஞ்சியும். எழுதியவர், மாறன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக