ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2011

திருநங்கை கல்கி: "தேடலுக்கு வயது இல்லை!',


திருநங்கைகளின் திருமணத்திற்காக இணையதளம் தொடங்கி நடத்திக் கொண்டிருக்கும் திருநங்கை கல்கி: கடந்த 2009ம் ஆண்டு, tடடிணூதணச்ணஞ்ச்டி.ணஞுt என்ற இணையம் தொடக்கப்பட்டது. திருநங்கைகளை மணக்க விரும்புவோர், தங்களின் விவரங்களை இதில் பதிவு செய்யலாம். பல நாடுகளில் இருந்து, 800 விண்ணப்பங்கள் வந்துள் ளன. ஆனால், இவர்கள் யாரும் நேரில் வந்து தங்களை அறிமுகம் செய்துகொள்ள முன்வரவில்லை.
இதற்கு முன், என் தோழிகளை திருமணம் செய்த பலர், பின்னாளில், அவர்களை கைவிட்டு விட்டனர். பல நேரங்களில் அவர்கள், உணர்வுப்பூர்வமான மிரட்டல் செய்யப்பட்டனர். "பணம் கொடுத்தால் தான் இருப்பேன்; இல்லாவிட்டால், போய் விடுவேன்' என்று துன்புறுத்தப்பட்டனர். இப்படியான இக்கட்டான சூழலில் தான், பல திருநங்கைகள் பாலியல் தொழிலுக்கு தள்ளப்படுகின்றனர். ஒரு முகமூடி அணிந்த சமூகம் எங்களிடம், தொடர்ந்து பாலியல் சுரண்டலை நடத்தி வருகிறது. சவுமியா என்ற என், 26 வயது திருநங்கை தோழி, ஒருவனை ஏழு ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்தாள். திருமணம் நடந்த ஒரே வாரத்திற்குள், அவளின் எல்லாப் பொருட்களையும் அள்ளிச் சென்று விட்டான். இதற்காக, நாங்கள் போலீஸ் ஸ்டேஷன், கோர்ட் படி ஏற முடியாது. எங்களின் பாதுகாப்பிற்கென இங்கு, ஒரே ஒரு சட்டம் கூட இயற்றப்படவில்லை. ஒருவருக்கு காதலியாகவோ, மனைவியாகவோ, தாயாகவோ இருக்க ஆசைப்படுகிறோம். ஆனால், அதற்கு நாங்கள் தரும் விலை அதிகம். பத்தில், ஏழு திருநங்கைகளுக்கு காதலால், அன்பால் வஞ்சிக்கப்பட்ட கதைகள் உள்ளன. இந்த நிலை மாற வேண்டும் என்று தொடக்கப்பட்டது தான், "திருநங்கைகள் நெட்' என்ற மணமகன் தேடும் இணையம். கேலி, கிண்டல்களைத் தாண்டி, ஆழமான அன்புடன், எங்களுடன் இரண்டறக் கலந்துவிடத் துடிக்கும் எத்தனையோ ஆண் மனம் இருக்கத் தான் செய்கிறது. அந்த நல்ல உள்ளங்கள் எங்களைத் தேடி அடைவதற்கான வழி தான், இந்த இணையம்!

"தேடலுக்கு வயது இல்லை!'

சென்னைப் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ., இதழியல் இரண்டாம் ஆண்டு படிக்கும், 76 வயது மாணவர் கிருஷ்ணமாச்சாரி: என் சொந்த ஊர் திருச்சி. அங்கு புனித ஜோசப் கல்லூரியில், கணிதவியலில் முதுகலைப்பட்டம் பெற்றேன். அக்கல்லூரியில் படித்த அப்துல் கலாமின், வகுப்புத் தோழர் நான். பின், சென்னை பல்கலைக்கழகத்தில், நவீன கணிதவியல் துறையில் புள்ளியல் பட்டம், மைசூர் பல்கலைக்கழகத்தில், சமஸ்கிருதம்,சென்னை பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதத்தில், டாக்டர் பட்டம் பெற்றேன். டி.வி.எஸ்., லூகாசில் மேலாளராக இருந்து, தற்போது அந்நிறுவனத்தின் ஆலோசகராக உள்ளேன். நான் நிறையக் கற்றுவிட்டதாக நினைக்கவில்லை. எதையோ தவறவிட்டுக் கொண்டு இருக்கிறேன் என்ற எண்ணமே, என்னை தொடர்ந்து கல்வி கற்க வைக்கிறது. இதழியல் படிப்பு முடிந்ததும், என் நீண்ட நாள் கனவு கேம்பிரிட்ஜ் அல்லது ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் படிக்க வேண்டும் என்பது தான். இன்றைய இளைஞர்களின் தொழில் நுட்ப அறிவைக் கண்டு நான் மிரள்கிறேன். நான் தொடர்ந்து கற்க இதுவும் ஒரு காரணம். இளைஞர்கள் மத்தியில் இருப்பதால், வயதைப் பற்றிய எண்ணம் வரவில்லை. வகுப்புக்கு, முதல் மாணவனாக வந்து விடுகிறேன். பயிற்சியும், முயற்சியும் இருந்தால், எதுவும் வசப்படும் என்பதற்கு நானே உதாரணம். சமூகத்தில் மாற்றங்கள் நிகழ்வதற்கு காரணம், பத்திரிகைகள் தான். எனவே தான், இதழியல் துறையை தேர்ந்தெடுத்தேன்.
நான் உயிரோடு இருக்கும் வரை, மாணவனாகவே இருக்க ஆசைப்படுகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக