திங்கள், 15 ஆகஸ்ட், 2011

லண்டன் கலவரத்தில் பாதிக்கப்பட்ட கேரள தம்பதியர் நாடு திரும்ப முடிவு

 லண்டன் : லண்டனில் கடந்த வாரம் நடந்த கலவரத்தில், பாதிக்கப்பட்ட கேரள தம்பதியர், நாடு திரும்ப முடிவு செய்துள்ளனர். கடந்த வாரம் லண்டனில் உள்ள டோட்டன்ஹேம் பகுதியைச் சேர்ந்த பிரபல தாதா மார்க் டக்கன், போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்து, அவரது ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போலீசாருக்கும், டக்கன் ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல், கலவரமாக வெடித்தது.
டோட்டன்ஹேம் நகரில், பல வணிக வளாகங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இந்த கலவரம், மற்ற நகரங்களுக்கும் பரவியது. இதில், சிலர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக, 300க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கலவரத்தில், இந்தியர்களின் கடைகளும் அடித்து நொறுக்கப்பட்டன. கேரளாவைச் சேர்ந்த தம்பதியரும், இந்த கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து, லிசி ஜார்ஜ், 37, என்பவர் கூறியதாவது: நானும், என் கணவரும் இந்தியாவில் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். பிரிட்டனின் கிரைடோன் மருத்துவமனையில் நான் நர்சாக பணிபுரிகிறேன். கடந்த வாரம் நான் இரவுப் பணிக்கு மருத்துவமனைக்குள் நுழைந்த போது, அங்கு நுழைந்த ஒரு கும்பல், என்னை வெளியே இழுத்து, என்னுடைய சீருடைகளை கிழித்து எறிந்து, அரை நிர்வாணமாக்கியது. அதுமட்டுமின்றி, என்னுடைய கைப்பையில் இருந்த பணத்தை எடுத்துக் கொண்டது.
என் கணவர் பினு மாத்யூ, 40, உணவுக் கடை நடத்தி வருகிறார். அவருடைய கடையை அடித்து நொறுக்கி, அரிசி உள்ளிட்டவற்றை கலவரக்காரர்கள் கொள்ளையடித்தனர். அவரிடமிருந்த, 85 ஆயிரம் ரூபாய் பணத்தையும் பிடுங்கினர். கடையில் கொள்ளையடித்த பொருட்களை, காரில் எடுத்துச் செல்வதற்காக, என் கணவரின் கார் சாவியை கேட்டுள்ளனர். அவர் தர மறுத்ததால், ஒரு பெண் உட்பட கலவரக்காரர்கள், என் கணவரை கடுமையாகத் தாக்கியுள்ளனர். அதில், அவரின் மூக்கு உடைந்தது. மேலும், காரையும் தீ வைத்து கொளுத்தினர்.
கடையிலிருந்த 25 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்து விட்டன. கடை வைத்து ஓராண்டு மட்டுமே ஆனதால், இன்னும் நாங்கள் லாபம் பார்க்கவில்லை. கலவரக்காரர்களின் கொள்ளையில், என்னுடைய திருமண செயின் உள்ளிட்டவை பறிபோய் விட்டன. தற்போது, எங்களிடம் பணம் இல்லை. பணம் கேட்பதற்கு, தெரிந்த முகங்களும் இங்கு இல்லை. நாங்கள் லண்டன் மீது, வைத்திருந்த எண்ணம் வேறுமாதிரியாக இருந்தது. இப்போது, நிலைமை மாறி விட்டது. எனவே, தற்போது கேரளா திரும்ப முடிவு செய்துள்ர் ளாம். இவ்வாறு, லிசி ஜார்ஜ் கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக