ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2011

தூக்கு தண்டனை தள்ளிவைப்பு?ராஜிவ் கொலை குற்றவாளிகள் மேல்முறையீடு செய்யப்படுவதால்

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது. இந்த தண்டனை உச்ச நீதிமன்றத்திலும் உறுதி செய்யப்பட்டது. அதன் பின்னர் அவர்கள் அனுப்பிய கருணை மனுவும் ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டது.
இதையடுத்து, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 3 பேரையும் செப்டம்பர் 9ம் தேதி தூக்கிலிடுவதற்கான உத்தரவை சிறைத் துறை டிஐஜி கோவிந்தராஜன், வேலூர் சிறைக் கண்காணிப்பாளருக்கு அனுப்பியுள்ளார்.
இந்நிலையில், இந்த 3 பேரின் தூக்குத் தண்டனையையும் ரத்து செய்யக் கோரி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்பாட்டங்களும் மனிதச் சங்கிலி போராட்டங்களும், பொதுக்கூட்டங்களும் நடைபெற்று வருகின்றன. உயர் நீதிமன்ற பெண் வக்கீல்கள் 3 பேர் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடர்ந்துள்ளனர்.
இந்நிலையில், தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவது செப்டம்பர் 9ம் தேதியிலிருந்து தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்படும் பட்சத்தில் தண்டனைத் தேதி தள்ளிப்போக வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து வக்கீல் கண்ணதாசன் கூறியதாவது:
தமிழ்நாடு சிறை நடைமுறை விதிகள் பாகம்&2, விதி 921ன்படி கருணை மனு தள்ளுபடி செய்யப்பட்டு தூக்குத் தேதி நிர்ணயிக்கப்பட்ட பின்னர், அந்த தண்டனை முடிவை எதிர்த்து சம்பந்தப்பட்ட சிறைவாசி ஏதேனும் முறையீடு செய்யவுள்ளார் என்ற தகவல் தெரியவந்தாலே, அது குறித்து சிறை அதிகாரிகள் அரசுக்குத் தெரிவிக்க வேண்டும். அந்த தகவல் குறித்து அரசின் அடுத்த உத்தரவு வரும் வரை தூக்குத் தண்டனையை தள்ளிவைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. வரும் திங்கள் கிழமை 3 பேரும் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யும்பட்சத்தில் தண்டனை தள்ளிவைக்க வாய்ப்பு ஏற்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக