செவ்வாய், 16 ஆகஸ்ட், 2011

தமிழ் சினிமா கேரளாவைபோல் ஆந்த்ரவையும் விழுங்கத்தொடங்கிவிட்டது

ஆந்திராவிலும் தமிழ்ப் படங்களுக்கு நெருக்கடி ஆரம்பித்துவிட்டது.

தமிழ் சினிமாக்களுக்கு தமிழகத்துக்கு வெளியே அதிக வரவேற்புள்ள மாநிலம் ஆந்திரா. இங்கு எந்த தமிழ்ப்படமாக இருந்தாலும் அதன் டப்பிங் மற்றும் ஒரிஜினல் படங்கள் ஒரே நேரத்தில் வெளியாவது வழக்கம்.

ரஜினியின் அனைத்துப் படங்களும் நேரடியாகவும், தெலுங்கு டப்பிங் ஆகவும் ஆந்திராவில் வெளியாகி வசூல் சாதனைப் படைக்கின்றன. எந்திரன் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரேநேரத்தில் இங்கு வெளியானது. ரூ 45 கோடிக்கும் மேல் வசூலை அள்ளியது இந்தப் படம்.

அவன் இவன் படம் வாடு வீடு என்ற பெயரில் வெளியாகி 18 கோடிகள் வரை குவித்தது. கோ படம் ரங்கம் என்ற பெயரில் டப் செய்யப்பட்டு நல்ல வசூல் கண்டது.

சூர்யாவின் கஜினி, கார்த்தியின் நான் மகான் அல்ல போன்ற படங்கள் தெலுங்கில் நல்ல வசூல் கண்டன.

சமீபத்தில் தமிழில் வெளியான ராகவா லாரன்ஸின் காஞ்சனா, தெலுங்கில் அதே பெயரில் டப் செய்யப்பட்டது. இந்தப் படம் ரூ 3 கோடிக்கு விற்கப்பட்டது. இதுவரை ரூ 15 கோடிக்குமேல் அள்ளிவிட்டதாகச் சொல்கிறார்கள்.

கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் தெலுங்கு விநியோகஸ்தர்கள் தமிழ்ப் படங்கள் மூலம் ரூ 35 கோடி வரை சம்பாதித்துள்ளனர்.

இதனால் விநியோகஸ்தர்களும் தியேட்டர் உரிமையாளர்களும் நேரடி தமிழ் மற்றும் தமிழ் டப்பிங் படங்களுக்கு அதிக முக்கியத்துவம் தருகின்றனர். நேரடி தெலுங்குப் படத்தைவிட, நேரடி தமிழ்ப் படத்துக்கு நல்ல ஸ்கிரீன்களை ஹைதராபாத்தில் ஒதுக்குகிறார்களாம்.

இந்த நிலை தெலுங்கு தயாரிப்பாளர்களுக்கும், நடிகர்களுக்கும் பெரும் கலக்கத்தை ஏற்படுத்திவிட்டது. தமிழ் டப்பிங் படங்களுக்கு இப்போது ஆந்திராவில் 20 சதவீத வரி விதிக்கப்படுகிறது. இதனை 50 சதவீதமாக உயர்த்துமாறும், தமிழ்ப் படங்களின் பிரிண்ட் எண்ணிக்கையை 50க்குள் கட்டுப்படுத்துமாறும் தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் சங்கம் ஆந்திர அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இனி வரவிருக்கும் தமிழ்ப் படங்கள் முக்கியமானவை என்பதால் இந்த கட்டுப்பாட்டை இப்போதே விதிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர் தயாரிப்பாளர்கள்.

தெலுங்கு சினிமாக்களின் தரத்தை உயர்த்துவதை விட்டுவிட்டு, நன்றாக போய்க் கொண்டிருக்கும் வியாபாரத்தைக் கெடுக்கிறார்களே என புலம்புகிறார்கள் ஆந்திர விநியோகஸ்தர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக