சென்னை: திமுக தலைவர் கருணாநிதி இன்று தமிழக சட்டசபைக்கு வந்து வருகைப் பதிவேட்டில் கையெழுத்து மட்டும் போட்டுவிட்டுத் திரும்பிச் சென்றார். திமுகவின் சட்டமன்ற புறக்கணிப்பு முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று அவர் கூறினார்.
நடப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரை திமுக புறக்கணித்து வருகிறது.இந் நிலையில் சட்டசபையில் நேற்று காவல்துறை மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடந்தது. அப்போது பேசிய முதல்வர் ஜெயலலிதா, கருணாநிதிக்கு சட்டம் தெரியாது என்றார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் கருணாநிதி இன்றைய சட்டசபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேச உள்ளதாகத் தகவல் வெளியாயின. இந் நிலையில் சட்டமன்ற வளாகத்தில் திமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள அறையில் மூத்த திமுக எம்எல்ஏக்கள் இன்று ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இதனால் கருணாநிதி வருகிறார் என்று சட்டசபை வளாகத்தில் பரபரப்பு நிலவியது.
இந் நிலையில் திமுக பொருளாளர் ஸ்டாலினுடன் சட்டசபைக்கு வந்த அவர் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டார். அப்போது நிருபர்கள் அவரை சூழ்ந்து கொண்டு, தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரை திமுக தொடர்ந்து புறக்கணிக்குமா என்று கேட்டனர்.
இதற்கு பதிலளித்த கருணாநிதி, சட்டப் பேரவையில் திமுக உறுப்பினர்களுக்கு இருக்கைகள் முறையாக ஒதுக்கீடு செய்யப்படாததால், திமுகவின் சட்டமன்ற புறக்கணிப்பு முடிவில் எந்த மாற்றமும் இல்லை. சட்டசபையில் நான் வீல் சேரில் வந்து உட்காரக் கூட போதிய வசதி செய்து தரப்படவில்லை. உட்கார வசதி செய்து கொடுத்தால்தானே போவதற்கு என்றார்.
கே.என்.நேரு உள்ளிட்டோர் திமுகவினர் கைது செய்யப்பட்டு வருவது பற்றி கேட்டதற்கு, தமிழ்நாட்டில் மினி எமர்ஜென்சி போன்ற நிலை நிலவுகிறது. நடக்கும் நிலவரங்கள் குறித்து ஆராய திமுக செயற்குழு, பொதுக்குழு கூடி முடிவெடுக்கும் என்றார்.
வர இருக்கின்ற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.கவை ஒடுக்க வேண்டும் என்பதற்காக இது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக கூறப்படுகிறதே என்று கேட்டதற்கு, நீங்கள் (நிருபர்கள்) சொன்னால் சரிதான் என்றார் சிரித்துக் கொண்டே.
நேற்று சட்டமன்றத்தில் போலீஸ் மானியக் கோரிக்கையின்போது கருணாநிதி குறித்து முதல்வர் கூறிய குற்றச்சாட்டுகள் பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று கேட்டதற்கு, நான் இது குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக