செவ்வாய், 9 ஆகஸ்ட், 2011

ஜெயா அரசு' என பெயர்சூட்டி தி.மு.க., நாமாவளி

துறையூர்: அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா நான்காவது முறையாக தமிழக முதல்வராக பொறுப்பேற்று செயல்படும் புதிய அரசுக்கு, "ஜெயா' அரசு என, பெயர்சூட்டி தி.மு.க., நாமாவளி செய்கிறது. கடந்த தி.மு.க., ஆட்சியில் சட்டசபையில் ஆட்சியமைக்க போதுமான பலமின்றி கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு தனித்து தி.மு.க., ஆட்சியமைத்தது. இதை சுட்டிக்காட்டி ஜெயலலிதா மற்றும் அ.தி.மு.க., சார்பில், "மைனாரிட்டி தி.மு.க.,' அரசு என்றே விமர்சித்து பேசினார். இதற்கு தி.மு.க., தலைவர் கருணாநிதி, பொருளாளர் ஸ்டாலின், "மைனாரிட்டிகளுக்கான அரசு' என, விளக்கம் தந்தனர்.

முந்தைய ஆட்சியில் பல இடைத்தேர்தல் நடந்தும் தி.மு.க., மெஜாரிட்டிக்கு தேவையான எண்ணிக்கையை இறுதிவரை பெற முடியவில்லை. இதனால், "மைனாரிட்டி தி.மு.க.,' அரசு என, ஜெயலலிதா சொல்லி வந்தது பலித்தது. தேர்தலுக்கு பின் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, 1991, 2001ல் ஜெ., அரசு, அ.தி.மு.க., ஆட்சி என்று கூறியல தி.மு.க., தற்போது, தன் ஊடகங்களில், "ஜெயா அரசு' என, புது நாமகரணம் சூட்டியுள்ளது.

தமிழில் புலமை பெற்ற முன்னாள் முதல்வர் கருணாநிதி, வார்த்தை ஜாலங்களில் விளையாடுவார். அவரது யோசனைப்படி இப்புது நாமகரணம் சூட்டப்பட்டு தி.மு.க., ஊடகங்களில் தொடர்ந்து தினமும் உச்சரிக்கப்படுகிறது. தமிழில் "புக', "வர' போன்ற வார்த்தைகளுக்கான அர்த்தம் பக்கத்தில் கால் வாங்கி, "புகா', "வரா' என, எழுதும்போது எதிர்பார்த்ததைத் தரும். இதுபோல, "ஜெய' என்ற வார்த்தைக்கு வெற்றி என்று அர்த்தம். "ஜெயா' அரசு என, தி.மு.க.,வின் புதிய நாமகரண உச்சரிப்புப்படி வெற்றி பெறாத அரசாகும்.

மந்திரத்தை சொல்வது போல் பெயரை தொடர்ந்து சொல்வது நாமாவளியாகும். ஆன்மிகத்தில் நம்பிக்கை உள்ளோர் நாமாவளி சொல்லி பலன் பெறுவர் என்பது அனைவரும் அறிந்ததே. இதற்கேற்ப முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு, சமச்சீர் கல்வி குறித்து எடுத்த முடிவு, திருவாரூர் மாவட்ட தி.மு.க., செயலர் பூண்டி கலைவாணனை கைது செய்த போது, ஸ்டாலினையும் கைது செய்ததாக வந்த செய்தி தி.மு.க.,வினரை எழுச்சி பெற செய்துள்ளது. "ஜெயா அரசு' என, கூறும் தி.மு.க.,வினருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, "திறம்பட தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆட்சி செய்து ஜெயமாக்க வேண்டும்' என்ற எதிர்பார்ப்பு அ.தி.மு.க.,வினர் மத்தியில் எழுந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக