சனி, 13 ஆகஸ்ட், 2011

தலித் மாணவர்களைக் கொல்லும் உயர்கல்வி நிறுவனங்கள்!


டாக்டர் ஜஸ்ப்ரீத் சிங், ஒரு தலித் மாணவன். ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த இவர் நன்றாகப் படிக்கும் மாணவர். பள்ளியில் அனைத்துப் பாடங்களிலும் முதல் மதிப்பெண் எடுத்துத் தேர்ச்சி பெற்றார். மருத்துவர் ஆக வேண்டும் என்பது மட்டுமே அவரது இலட்சியம், கனவு. ஆனால் அந்தக் கனவு நிறைவேற இந்த சமூகம் அனுமதிக்கவில்லை.
தலித் மாணவர்களைக் கொல்லும் உயர்கல்வி நிறுவனங்கள்!
ஜஸ்ப்ரீத் சிங் வறுமையால் வாடும் சாதாரண தலித் குடும்பங்களில் ஒன்றைச் சேர்ந்தவர். வீட்டின் மூத்த பிள்ளையான இவரோடு, மற்ற மூன்று இளைய சகோதரிகளையும் உள்ளடக்கியது அவரது குடும்பம். தந்தை வேலைக்குப் போகிறார். தாய் வீட்டு வேலைகளையும் கவனித்தபடியே தூங்கும் நேரம் தவிர எப்போதுமே தையல் வேலையைத் தொடர்ந்து செய்து வந்தார்.
படிப்பில் திறமையுடன் விளங்கிய ஜஸ்ப்ரீத்தின் படிப்புக்காக மொத்தக் குடும்பமுமே ரத்தத்தை வியர்வையாக்கி, உழைத்துத் தியாகம் செய்தது. மகனை ஒரு ஊர் போற்றும் மருத்துவனாகப் பார்க்க அந்தத் தாயும் ஆசைப்பட்டாள். மூன்று பெண் பிள்ளைகளை வைத்துக் கொண்டு வரதட்சிணைக்கு பொருள் சேர்க்க வேண்டிய நமது இந்தியச் சூழலில் தனது மகனது கனவுப் படிப்புக்காகவும் அந்தத் தாய் ஓய்வறியாமல் வேலை செய்து வந்தார்.
சண்டீகர் அரசு மருத்துவக் கல்லூரியில் ஜஸ்ப்ரீத் சிங் தனது மருத்துவப் படிப்புக்காக சேர்ந்தார். முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், சண்டீகரில் தனது மேற்படிப்பான எம்.டி படிப்பை படிக்க வேண்டும் என்பதுதான் ஜஸ்ப்ரீத் இன் திட்டம். இத்திட்டத்தின்படி நான்கு ஆண்டுகள் இளநிலை மருத்துவப்படிப்பில் பெரிய பிரச்சினைகள் இல்லாமல்தான் கழிந்த்து.
அதன் பிறகுதான் அனைத்துப் பாடங்களிலும் அதிக மதிப்பெண் எடுத்துத் தேர்ச்சியடைந்த ஜஸ்ப்ரீத் இன் வாழ்வில் சூறாவளி வீசத் துவங்கியது. இறுதியாண்டு படிக்கும்போதுதான் பேரா. என்.கே. கோயல் என்பவரது மூலம் தொல்லை ஆரம்பமானது. சாதி வெறியனான என்.கே. கோயல் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஜஸ்ப்ரீத் சிங்கை சாதியின் பெயரால் அவமானப்படுத்தினான்.
“தலித் என்பதால்தான் உனக்கு இங்கே படிக்க அனுமதி கிடைத்துள்ளது. எப்படியோ மருத்துவப் படிப்பில் இடம் பிடித்து விட்டாய். ஆனால் உன்னை தேர்ச்சியடைய விட மாட்டேன். உன்னால் முடிந்ததைப் பார்த்துக் கொள். நான் உன்னை மீண்டும் முதலிலிருந்து மருத்துவப் படிப்பை மேற்கொள்ளச் செய்யாமல் விட மாட்டேன்” என்றெல்லாம் சவால் விட்டுள்ளான்.
இதைத் தொடர்ந்து, மருத்துவப் படிப்பில் முக்கியப் பாடங்களில் ஒன்றான கம்யூனிட்டி மெடிசின் பாடத்தில் வேண்டுமென்றே ஜஸ்ப்ரீத் சிங்கை தோல்வியடையச் செய்தான். இந்த அநீதியைத் தனது சக மாணவர்களிடமும், பிற பேராசிரியர்களிடமும் எடுத்துரைக்க முற்பட்டார் ஜஸ்ப்ரீத். மீண்டும் தேர்வு எழுதியும் ஒரு மதிப்பெண் குறைவாகப் போட்டு அவரை தேர்வில் தோல்விடைய வைத்தான் சாதி வெறி பிடித்த கோயல்.
மனம் கலங்கிய மாணவர் ஜஸ்ப்ரீத் இதனைத் தனது தாயிடம் கூறி கதறி அழுதுள்ளார். தாயும் மகனைத் தேற்றி வரும் தேர்வில் நன்றாக எழுத ஊக்கம் கொடுத்துள்ளார். ஆனால் சாதிவெறி என்ற எதார்த்தத்தில் தனது கனவு நனவாகப் போவதில்லை என்பதைப் புரிந்துகொண்ட ஜஸ்ப்ரீத் ஜனவரி 27, 2008 அன்று தனது 22 வது வயதில் கல்லூரி நூலகத்தின் ஐந்தாவது மாடியில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். அவரது சட்டைப் பையில் தனக்கு இழைக்கப்பட்ட அநீதியையும், அநீதி இழைத்த கோயலையும் குறிப்பாக எழுதி வைத்துவிட்டு மறைந்து விட்டார் ஜஸ்ப்ரீத் சிங்.
தன்னுடைய ஒரே மகனை இழந்த பெற்றோருக்கு கிடைத்த அந்தத் துருப்புச் சீட்டைக் கொண்டே காவல் நிலையத்தில் புகார் செய்தனர் அந்தப் பெற்றோர். இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. உடனே அங்கிருந்த காவல்துறைக் கண்காணிப்பாளரை வேறு இடத்திற்கு மாற்றல் செய்தது அரசும், ஆளும் வர்க்கமும். இந்த வழக்கில் வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அந்த ஏழைத் தந்தையின் தொடர்ச்சியான சட்டப் போராட்டத்தின் பிறகே தாழ்த்தப்பட்டோர் மீதான வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கினைப் பதிவு செய்தனர்.
அதன் பிறகு சில உண்மைகள் வெளி வந்தன. முதலாவதாக தற்கொலைக் குறிப்பு ஜஸ்ப்ரீத் எழுதியதுதான் என நிரூபணமானது. அடுத்ததாக, அவர் தேர்ச்சியடையவில்லை என கோயலால் நிராகரிக்கப்பட்ட ஜஸ்ப்ரீத் இன் கம்யூனிட்டி மெடிசின் தேர்வுத்தாள் அனைத்தும் மூன்று வெவ்வேறு பேராசிரியர்களால் மறு மதிப்பீடு செய்யப்பட்டது. அதில் ஜஸ்ப்ரீத் தேர்ச்சி பெற்றிருப்பது தெரிய வந்தது. ஆனால் இந்தச் செய்தியைக் கேட்க அதனை எழுதிய ஜஸ்ப்ரீத் உயிரோடு இல்லை.
இவ்வளவு ஆதாரப்பூர்வ தகவல்கள் இருந்தும் என்.கே. கோயல் ஒருநாள் கூட சிறையில் இருக்கவில்லை. பேராசிரியராக, துறைத்தலைவராக இன்றும் தொடருகிறான். என்ன நடக்கும் என இலக்குத் தெரியாமலேயே இந்த வழக்கைக் கைவிடாமல் தொடர்ந்து நடத்தி வருகிறது அந்தக் குடும்பம். மறு ஆண்டு சகோதரத்துவத்துக்காக கொண்டாடப்படும் ரக்ஷா பந்தன் தினத்தன்று தனது இயலாமை, பிரிவுத்துயருடன் கோபத்தை அடக்க முடியாத ஜஸ்ப்ரீத் சிங் இன் இளைய சகோதரி நீதி வேண்டி தனது உயிரையே மாய்த்துக் கொண்டாள்.
சாதிவெறி ஆட்டத்தால், கொடுமையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு இளம்வயதினர் தங்களது வாழ்க்கையை முடித்துக் கொண்டுள்ளனர். இதனை ஒரு பொருட்டாகவே மதிக்காது, நீதி வழங்குவதை தவிர்த்து ஒரு தலித் வாழ்வின் மதிப்பு இவ்வளவுதான் என உறுதிசெய்யும் அரசின் கொட்டத்தை நேரில் அனுபவித்திருந்தாலும்  தங்களுக்கு என்ன நேர்ந்தாலும் சரி, நீதி கிடைக்காமல் ஓய மாட்டோம் எனத் தொடர்ந்து போராடி வருகிறார்கள் ஜஸ்ப்ரீத் சிங்கின் குடும்பத்தார்.
இந்த கட்டுரையின் முழு விபரத்தையும் படிக்க வினவு இணையத்திற்கு செல்லவும்/ www.vinavu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக