வியாழன், 11 ஆகஸ்ட், 2011

நில அபகரிப்பு அரசாணையை ரத்து செய்யக்கோரி தி.மு.க. வழக்கு

நில அபகரிப்பு புகார்களை விசாரிப்பது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. மனு தாக்கல் செய்துள்ளது.
இதுதொடர்பாக தி.மு.க.வின் சட்டப்பிரிவு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனுவில், குற்ற நடவடிக்கைக்காக குறிப்பிட்ட காலவரையறையை நிர்ணயித்து அரசாணை பிறப்பிக்க முடியாது. அது சட்ட விரோதமானது. இது முழுக்க முழுக்க தி.மு.க.வினரை இலக்காக வைத்து எடுக்கப்படும் நடவடிக்கையாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தர்மபுரி தொகுதியின் தி.மு.க. எம்.பி. தாமரைச்செல்வன் தாக்கல் செய்த மனுவில், நில அபகரிப்பு தொடர்பான விவகாரங்களை விசாரிப்பதற்கென்று தனி விசாரணை முறைச்சட்டங்கள் உள்ளன. அவையெல்லாம் இருக்கும் போது, இப்படிப்பட்ட அரசாணையை குறிப்பிட்ட காலகட்டத்துக்கென்று பிறப்பிப்பது சட்ட விரோத செயலாகும்.
இது அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக பிறப்பிக்கப்பட்ட அரசாணையே தவிர வேறல்ல. எனவே அதை ரத்து செய்ய வேண்டும். மனு மீதான விசாரணை முடியும் வரை அரசாணைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக