புதன், 24 ஆகஸ்ட், 2011

சட்டத்தையும் ஒழுங்கையும் யாரும் கையிலெடுக்க அனுமதிக்கமாட்டோம்- ஹத்துருசிங்க!

நாட்டின் இறைமையை சீர்குலைக்கும் வகையில் சட்டங்களையும் ஒழுங்குவிதிமுறைகளையும் யாரும் கையிலெடுத்து செயற்பட அனுமதிக்கமாட்டோம். குழப்பத்தை ஏற்படுத்த முனைவோர் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என யாழ். மாவட்ட இராணுவக்கட்டளைத்தளபதி மேஜர்ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு யாழ்ப்பாண நாவாந்துறைப் பகுதியில் இராணுவம் பொலிஸ் பொதுமக்கள் இடையே ஏற்பட்ட களோபரம் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
நேற்று மாலை யாழ்.மாவட்ட நிர்வாக செயலகத்தில் நடைபெற்ற இச்செய்தியாளர் மாநாட்டில் யாழ்.பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் நெலின் மத்மதேவா மற்றும் கிளிநொச்சி பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் நீல் ரத்வத்தை ஆகியோர் கலந்துகொண்டனர்.
இச் சந்திப்பில் யாழ். மாவட்ட இராணுவத் தளபதி மேலும் தெரிவித்ததாவது,
கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக யாழ்ப்பாண மக்கள் மிக அமைதியான சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்றார்கள். இவர்களின் இந்த இயல்பு வாழ்க்கையைக் குழப்புவதற்கே நாவாந்துறைச் சம்பவங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இராணுவத்தினருக்கும் மக்களுக்குமிடையிலிருக்கும் இணக்கப்பாடான உறவை குலைப்பதற்காகவே இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இது ஒரு பயங்கரவாதச் செயற்பாடே ஆகும். நன்கு திட்டமிடப்பட்டே இத் தாக்குதல்கள் மக்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நாவாந்துறையில் அமைந்திருக்கும் இராணுவமுகாம் அப்பகுதி மக்களுடன் நல்லதொரு உறவைப் பேணிவருகின்றது. அதனை இல்லாது செய்வதற்காகவே நாட்டின்ஏனைய பகுதியில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் குழப்ப நிலைபோல் இங்கும் ஏற்படுத்த சில விசமிகள் முயற்சிக்கின்றார்கள். இவர்களின் செயற்பாட்டு முனைப்புப்பெற நாம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்.
யாழ்ப்பாணதில் மர்மமனிதர்களோ கிறிஸ் மனிதர்களோ இல்லை. யாழ்.குடாநாட்டில் அமைதியை குழப்பவே இவ்வாறான கதைகள் கட்டவிழ்த்துவிடப்படுகின்றன. இவ்வாறான சம்பவங்களுடன் இராணுவத்தினருக்கு எவ்வித தொடர்புமில்லை என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக