வெள்ளி, 5 ஆகஸ்ட், 2011

சமையலறையில் அணு உலை அமைத்த வாலிபர்!சுவீடன்: வீட்டில்

Nuclear Kitchen
ஸ்டாக்ஹோம்: வெளிநாடுகளில் இருந்து கதிர்வீச்சு கொண்ட தனிமங்களை வாங்கி வீட்டிலேயே அணு உலையை அமைத்த சுவீடன் நாட்டு வாலிபர் கைது செய்யப்பட்டார்.

சுவீடனின் மேற்குப் பகுதியில் கடலோர நகரமான ஏஞ்சல் ஹோல்ம் நகரை சேர்ந்தவர் ரிச்சர்ட் ஹேண்டில் (31). ஒரு அபார்ட்மெண்ட்டில் குடியிருந்து வரும் இவர் கடந்த 6 மாதமாக தனது வீட்டின் சமையல் அறையில் அணு உலையை உருவாக்கி வந்துள்ளார்.

இதற்காக சில வெளிநாடுகளில் இருந்து கதிர்வீச்சு தனிமங்களை வரவழைத்துள்ளார். மேலும் தனது வீட்டின் மின்சார அலார்ம் கருவியில் இருந்த Americium-241 என்ற கதிர்வீச்சு கொண்ட தனிமத்தையும் பிரித்தெடுத்துள்ளார். இந்த கதிர்வீச்சு கொண்ட தனிமங்களின் உதவியோடு அணு உலையை உருவாக்கி வந்துள்ளார்.

ஆனால், திடீரென இவருக்கு ஒரு சந்தேகம் வந்துள்ளது. அதாவது, வீட்டிலேயே அணு உலையை அமைப்பது சட்டப்படி சரியா என்பதே அந்த சந்தேகம். இது குறித்து விளக்கம் கேட்டு சுவீடனின் அணு ஆராய்ச்சி ஆணையத்துக்கு ஒரு இ-மெயில் அனுப்பினார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், உடனடியாக போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து அணு விஞ்ஞானிகள் மற்றும் ராணுவத்தினர் அணுக் கதிர்வீச்சைக் கண்டறியும் கருவிகளுடன் இவரது வீட்டை முற்றுகையிட்டனர். சோதனையில் இவரது வீட்டின் சமையல் அறையில் கதிர்வீச்சு கொண்ட Americium-241 இருந்தது தெரியவந்தது. கதிர்வீச்சை கண்டறியும் Geiger counter கருவியும் இவரது வீட்டில் இருந்தது.

இவற்றைக் கைப்பற்றிய ராணுவத்தினர், அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இந்த தனிமம் தவிர வேறு என்னென்ன கதிர்வீச்சு கொண்ட தனிமங்கள் வீட்டில் இருந்தன என்ற தகவலை சுவீடன் அரசு வெளியிடவில்லை. ஆனால், இவரது வீட்டிலிருந்து பெரிய அளவில் கதிர்வீச்சு ஏதும் வெளியாகவில்லை என்று மட்டும் அரசு தெரிவித்துள்ளது.

மின்சார அலார்ம்களில் Americium-241 என்ற செயற்கையாக உருவாக்கப்பட்ட கதிர்வீச்சு கொண்ட தனிமம் இருப்பது சாதாரணம் தான். ஆனால், இதை தனியே பிரித்தெடுப்பது சட்டப்படி குற்றமாகும். இந்த தனிமத்தை நுகர்ந்தாலோ அல்லது அதை தெரியாமல் உண்டாலோ பெரிய அளவில் உடல் நல பாதிப்புகள் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர், எந்தெந்த நாடுகளில் இருந்து கதிர்வீச்சு கொண்ட தனிமங்களை வாங்கினார் என்ற விசாரணையும், அதை இவருக்கு அனுப்பியவர்கள் குறித்த விசாரணையும் தொடங்கியுள்ளது. இந்த விசாரணைகளில் அமெரிக்காவின் சிஐஏயும் களமிறங்கியுள்ளது.

தான் செயது வரும் ஆராய்ச்சி குறித்த விவரங்கள், படங்கள் சிலவற்றையும் ஹேண்டில் கடந்த சில மாதங்களாகவே இன்டர்நெட்டில் வெளியிட்டு வந்துள்ளார். ஆனால், அதை யாரும் சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல் இருந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக