வியாழன், 25 ஆகஸ்ட், 2011

ஆ.ராசா: டிவி, பத்திரிகைகளை வைத்து சி.பி.ஐ. வழக்குத் தொடர்ந்துள்ளது

டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நானும், எனது குடும்பத்தாரும் பணம் சம்பாதித்ததாக சி.பி.ஐ. நிரூபித்தால் அவர்கள் கூறும் அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஏற்றுக் கொள்ள தயார் என்று முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ஆ.ராசா கூறினார்.

சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் ராசாவே நேரில் ஆஜராகி 1 மணி நேரம் வாதாடினார். அவர் கூறுகையில், இந்தியாவில் வெறும் 5 நிறுவனங்கள் மட்டுமே தொலைத்தொடர்புத் துறையில் லாபம் சம்பாதித்து வந்தன.

இதனால் 6.2 மெகா ஹெர்ட்ஸுக்கு மேல் உள்ள ஸ்பெக்ட்ரத்தை பயன்படுத்தினால் அதற்குக் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற நடைமுறையை நான் கொண்டு வந்தேன். அதற்கு முன் அதை அந்தத் தனியார் நிறுவனங்கள் இலவசமாக பயன்படுத்தி வந்தன.

ஆனால் டிவி, பத்திரிகைகளில் வந்த குற்றச்சாட்டுகளை அடிப்படையாக வைத்து என் மீது சி.பி.ஐ. வழக்குத் தொடர்ந்துள்ளது. தணிக்கை அதிகாரியின் அறிக்கை கூட பத்திரிக்கைகளில் வந்த செய்திகளின் அடிப்படையில் தான் எழுதப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்குத் தொடர்ந்த பிரஷாந்த் பூஷண் கூட, பத்திரிக்கை செய்திகளையே ஆதாரமாகக் காட்டியுள்ளார்.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நான் தன்னிச்சையாக முடிவு எடுத்ததாகவோ அல்லது விதிமுறைகளை மீறியதாகவோ மத்திய தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் குற்றம் சாட்டப்படவில்லை. சம்பந்தபட்ட அனைத்துத் துறைகளின் அதிகாரிகளையும் ஆலோசித்த பின்னர்தான் உரிமங்கள் வழங்கப்பட்டன.

நான் கிரீன் ஹவுஸ் பிரமோட்டர்ஸ் என்ற நிறுவனத்தை ஆரம்பித்து பணம் சம்பாதித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்துக்கு ரூ.750 கோடி பணம் வழங்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது முற்றிலும் தவறானது.

அந்த நிறுவனத்துக்கு டி.பி. ரியாலிட்டீஸ் வழங்கிய ரூ.1.05 கோடி பணம் திரும்ப வழங்கப்பட்டுவிட்டது. அதுவும் கூட சட்டபூர்வமான பணப் பரிமாற்றம்தான்.

அந்த நிறுவனத்தில் உயிரிழந்த எனது நண்பர் சாதிக் பாட்சா, என் மனைவி பரமேஸ்வரி, கலியபெருமாள், ரேகா பானு ஆகியோர் நிர்வாகப் பொறுப்பு வகித்தனர்.

எனது உறவினர்கள் 7 பேர் வீட்டில் சி.பி.ஐ. சோதனை நடத்தியது. நானும் எனது உறவினர்களும் பணம் சம்பாதித்ததை சி.பி.ஐயோ, அமலாக்கப் பிரிவினரோ அல்லது வருமான வரித் துறையினரோ நிரூபிக்க தயாரா?. அப்படி நிரூபித்தால் அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஏற்றுக் கொள்கிறேன்.

நான் குற்றமற்றவன் என்பதை நிசயம் ஒரு நாள் நிரூபிப்பேன். அதனால்தான் நான் ஜாமீன் கோரி இது வரை மனு தாக்கல் செய்யவில்லை. நீதிமன்றத்தின் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது என்றார்.

அப்போது அவருக்கு ஒதுக்கப்பட்ட நேரம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து இன்னும் பல உண்மைகளைச் சொல்ல வேண்டியிருப்பதால். மேலும் 10 நிமிடங்கள் பேச அனுமதிக்குமாறு ராசா கோரினார்.

இதைக் கேட்ட நீதிபதி சைனி, நிறைய உண்மைகளைச் சொல்லி விடாதீர்கள் என்றார் சிரித்துக் கொண்டே.. அதைக் கேட்ட ராசா உள்ளிட்ட நீதிமன்றத்தில் இருந்த அனைவரும் சிரித்துவிட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக