தமிழக அரசியல் வரலாற்றில் ஆகப்பெரிய திருப்பம் நடந்தபோதும் திமுக இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தொடர்ச்சியாக ஈடுபட்டிருந்தது. சேலம், தஞ்சை, நெல்லையில் இந்தி எதிர்ப்பு மாநாடுகள் நடத்தப்பட்டன. இறுதியாகச் சென்னை மாநாடு. 13 அக்டோபர் 1963 அன்று நுங்கம்பாக்கத்தில் கூடியது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் இருக்கும் ஆட்சிமொழி பற்றிய 17-வது பிரிவின் நகலை தீயிட்டுக் கொளுத்தும் போராட்டத்தை அங்கே அறிவித்தார் அண்ணா. இது வெறும் அடையாளப்போராட்டம் அல்ல, ஓரிரு நாளில் முடிந்துவிடுவதற்கு. 26 ஜனவரி 1965 வரை தொடர்ச்சியாக நடக்கும் போராட்டம் என்று அறிவித்தார் அண்ணா.
எந்தெந்த ஊரில் யார்யார் போராட்டத்தை நடத்துவது என்பது முன்கூட்டியே அறிவிக்கப்பட்டது. ஒவ்வொரு ஊருக்கும் ஐந்து பேர் கொண்ட அணி. சென்னையில் அண்ணா தலைமையில் ஒரு ஐவர் அணி. கருணாநிதிக்கு ஒதுக்கப்பட்டது தஞ்சாவூர். அவருடைய அணியில் மன்னை நாராயணசாமி, மாயவரம் கிட்டப்பா, எஸ். நடராசன், அ. நடராசன் ஆகியோர் இருந்தனர். போராட்டத்துக்கு மக்களைத் திரட்டும் வகையில் நேரே தஞ்சாவூர் சென்று அந்தப் பகுதிகளில் பிரசாரம் செய்தார் கருணாநிதி.
போராட்டம் நடைபெறுவதற்கு முன்பே அண்ணா உள்ளிட்ட சிலரைக் கைது செய்திருந்தது அரசு. எனினும், நாடு தழுவிய அளவில் சட்ட நகல் கொளுத்தும் போராட்டம் நடந்தது. மற்ற தலைவர்கள் கைது செய்யப்பட்டபோதும் கருணாநிதி கைது செய்யப்படவில்லை. ஆனால் போராட்டம் எல்லாம் முடிந்தபிறகு 19 டிசம்பர் 1963 அன்று கருணாநிதியைக் கைது செய்தது அரசு. ஆறுநாள் சிறைவாசத்துக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டார்.
திமுக நடத்திய போராட்டங்கள், மாநாடுகள் இளைஞர்களின் இந்தி எதிர்ப்பு உணர்வைத் தட்டியெழுப்பிக் கொண்டிருந்தன. அதை நிரூபிக்கும் வகையில் அமைந்தது சின்னச்சாமி
என்ற இளைஞரின் மரணம்.
திருச்சி மாவட்டம் கீழப்பழுவூரைச் சேர்ந்த இளைஞர் சின்னச்சாமி. திமுக தொண்டர். திருச்சியில் இருந்து சென்னைக்கு ரயிலில் வந்திறங்கிய அந்த இளைஞருக்கு அதே ரயிலில் வந்திறங்கிய முதலமைச்சர் பக்தவத்சலத்திடம் பேசவேண்டும் என்ற ஆர்வம். இந்தித் திணிப்பைத் தடுக்கக்கூடாதா என்ற கேள்வியை முதல்வரிடம் எழுப்பினார். மறுநொடி கைது செய்யப்பட்டார். சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதும் திருச்சி சென்ற அந்த இளைஞர், தமிழுக்காகத் தன் உயிரைப் பலிகொடுப்பதாகக் கடிதம் ஒன்றை எழுதிவிட்டுத் தீக்குளித்தார். நான்காவது மொழிப்போரின் முதல் களப்பலி. சிங்கத்தமிழன் சின்னச்சாமி.
மொழிப்போராட்டம் அணையாமல் நடந்துகொண்டிருந்தபோது தேசிய அளவில் மிகப்பெரிய இழப்பு. பிரதமர் ஜவாஹர்லால் நேரு 27 மே 1964 அன்று மரணம் அடைந்தார். அவருக்குப் பதிலாக லால் பகதூர் சாஸ்திரி பிரதமர் ஆனார். ஆட்சி மொழி மசோதாவைக் கொண்டுவந்த சாஸ்திரியே தற்போது பிரதமர் ஆகிவிட்டதால் மொழிப்போராட்டம் முன்னைக் காட்டிலும் தீவிரமடைந்தது.
அப்போது இலங்கையில் இருந்து கருணாநிதிக்கு அழைப்பு ஒன்று வந்த்து. அனுப்பியவர்கள் இலங்கை தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள். தங்கள் மாநாட்டில் கலந்துகொள்ளவேண்டும் என்று அழைத்திருந்தனர். விஷயம் இலங்கை அரசுக்குச் சென்றது. உடனடியாகத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கருணாநிதியின் வருகை தடுக்கப்பட்டது. இதுவிஷயமாக இலங்கை நாடாளுமன்றத்தில் பிரச்னை எழுப்பப்பட்டது. அதற்கு ஆளுங்கட்சித் தலைவர் சி.பி. டிசில்வா விளக்கம் கொடுத்தார்.
’திராவிட முன்னேற்றக் கழகம் இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கம். அந்த இயக்கத்தைச் சேர்ந்த எவரையும் இலங்கையில் அனுமதிக்கமுடியாது. ஆகவே, கருணாநிதிக்குத் தடை விதிக்கப்பட்டது.’
உடனடியாக எழுந்த தமிழரசுக் கட்சி உறுப்பினர் நவரத்தினம், ‘திமுக ஒருபோதும் தடைசெய்யப்படவில்லை. அது இந்தியாவில் இருக்கும் ஜனநாயகக் கட்சிகளுள் முக்கியமானது. அந்தக் கட்சிக்கு சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். பிரிவினை, சட்ட விரோத செயல்கள் ஆகியவற்றும் திமுகவுக்கும் தொடர்பில்லை’ என்று விளக்கம் கொடுத்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக