வியாழன், 18 ஆகஸ்ட், 2011

அன்னாவின் போராட்டம் வெறும் இந்தி பேசும் மக்களுக்கானதாகிவிட்டது

அன்னா போராட்டம் தமிழகம் உள்ளிட்ட தென்னிந்தியாவில் ஏன் பெரும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை?

 சென்னை: அன்னா ஹஸாரேவின் போராட்டத்துக்கு இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் பெரும் ஆதரவு காணப்படுகிறது. அவருக்காக ஆயிரக்கணக்கானோர் தெருக்களில் இறங்கி போராடிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் தென்னிந்தியாவில் அப்படி ஒரு எழுச்சியைக் காண முடியவில்லை. குறிப்பாக தமிழகம், கேரளாவில் அதைக் காண முடியவில்லை. இது ஏன்?

ஊழலை ஒழிக்க வேண்டும், அதற்காக வலுவான லோக்பால் சட்டத்தை உருவாக்க வேண்டும் என்பதே ஹஸாரே குழுவினரின் கோரிக்கையாக உள்ளது. இந்தக் கோரிக்கைக்காக கடந்த சில மாதங்களாக அவர்கள் இடைவிடாமல், தீவிரமாக போராடி வருகின்றனர். எத்தனை அடக்குமுறைகள் வந்தபோதும் விடாமல் போராடி வருகின்றனர். இதனால்தான் மக்கள் மத்தியில் அவர்களுக்கு பெரும் ஆதரவு கிடைத்து வருகிறது.

ஆனால் இந்தப் போராட்டத்துக்கு இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் காணப்படுவதைப் போன்ற எழுச்சி தமிழகத்திலும், கேரளாவிலும் அவ்வளவாக இல்லை. ஆந்திராவிலும் கூட பெரும் அலையைக் காண முடியவில்லை. கர்நாடகத்தில் கூடஓரளவுக்கு போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதற்கு என்ன காரணம் என்பது புரியவில்லை.
இருப்பினும், ஆரம்பத்திலிருந்தே அன்னா ஹஸாரேவின் போராட்டம் ஏதோ வட இந்தியர்களின் போராட்டம் போலவே காட்சி அளித்து வருகிறது, பார்க்கப்பட்டு வருகிறது. இது ஒரு காரணமாக இருக்கக் கூடும்.

அன்னா ஹஸாரே குழுவினரின் போராட்டம் குறித்து இரு விதமான கருத்துக்கள் ஆரம்பத்திலிருந்தே இருந்து வருகின்றன. ஹஸாரேவின் போராட்டத்தை தீவிரமாக ஆதரிப்போர் ஒருபக்கமும் இருக்கும் நிலையில், அவரை கடுமையாக விமர்சிப்போரும் கணிசமாக உள்ளனர் என்பதை மறுக்க முடியாது.
அன்னா ஹஸாரே குழுவில் இடம் பெற்றுள்ள முக்கியஸ்தர்கள் பலரும் வட இந்தியர்களே அல்லது அன்னா சார்ந்த மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். தென்னிந்தியர் என்று பார்த்தால் சந்தோஷ் ஹெக்டே மட்டுமே அதில் இடம் பெற்றுள்ளார். இருப்பினும் அவரும் கூட ஆரம்பத்தில் இருந்ததைப் போல இப்போது தீவிரமாக அவர்களுடன் சேர்ந்து போராட்டங்களில் ஈடுபடுவதில்லை.
தென்னிந்தியாவில் ஏராளமான புகழ் பெற்ற மனித உரிமை ஆர்வலர்கள், காந்தியவாதிகள் உள்ள போதிலும் அவர்களையும் தங்களுடன் இணைத்து செயல்பட, தென்னிந்தியாவிலும் பேரெழுச்சியை உருவாக்க அன்னா ஹஸாரே குழு தவறி விட்டதோ என்று தோன்றுகிறது.

தேசிய அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவகையில் போராடக் கூடியவர்கள் தென்னிந்தியர்கள் என்பது கடந்த காலங்களில் பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்தி எதிர்ப்புப் போராட்டம் இந்தியாவின் பிற பகுதிகளை விட தமிழகத்தில்தான் மிகப் பெரிய அளவில் நடந்தது.அதனால் நேருவே பணிய நேர்ந்தது என்பது வரலாறு.
அதேபோல பல்வேறு தேசியப் பிரச்சினைகளில் தென்னிந்தியர்கள், பிற இந்தியர்களுக்கு சற்றும் குறைந்தவர்கள் இல்லை என்பதை பலமுறை நிரூபித்துள்ளனர். ஆனால் இந்தமுறை அன்னா ஹஸாரேவின் போராட்டத்துக்கு தென்னிந்தியாவில் பேரெழுச்சியைக் காண முடியவில்லை என்பதே உண்மை.
தென்னிந்தியர்களின் இந்த அமைதிக்கு என்ன காரணம் என்பது தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும் புரியாத போராட்டமாக அன்னாவின் போராட்டத்தை தென்னிந்திய மக்கள் பார்க்கிறார்களோ என்ற கேள்வியும் எழுகிறது.

இதுவே கார்கில் போரின்போது இந்தியாவின் எந்தப் பகுதியையும் விட தென்னிந்தியாதான் குறிப்பாக தமிழகம்தான் அதிகம் கொதித்தது, கொந்தளித்தது, குமுறியது. கார்கில் போர் வீரர்களுக்காக நிதி திரட்டியபோது தமிழக மக்கள்தான் மிகப் பெரிய அளவில் அள்ளிக் கொடுத்து தேச பக்தியை வெளிப்படுத்தினர். கார்கில் போர் அவர்களுக்குப் புரிந்தது. அன்னாவின் ஊழலுக்கு எதிரான போர் தமிழக மக்களுக்கு புரியாமல் போனதற்கு என்ன காரணம் இருக்க முடியும் என்பது புரியவில்லை.
அதேசமயம் அன்னா ஹஸாரே குழுவினர் யாருமே ஆங்கிலத்தில் பேசுவதில்லை.மாறாக சுத்தமான, இந்தியில்தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்தியில் பேசுவதில் தவறில்லை. ஆனால் அவர்கள் பேசுவது அனைவருக்கும், குறிப்பாக தென்னிந்தியாவில், அதிலும் குறிப்பாக தமிழகத்தில் இந்தி தெரியாதவர்களுக்கும் புரியும் வகையி்ல இருந்திருந்தால் ஒருவேளை எழுச்சி அதிக அளவில் இருந்திருக்கலாமோ என்னவோ.

அன்னா ஹஸாரேவின் போராட்டம் மக்களிடையே மேலும் நெருக்கமாக சென்றடைய இந்த பாஷைப் பிரச்சினையும் ஒரு காரணமோ என்னவோ தெரியவில்லை. முழுக்க முழுக்க இந்தியிலேயே தலைவர்கள் பேசி வருவதால் இதை இந்திக்காரப் பிரச்சினையாக தமிழக மக்கள் கருத வாய்ப்பு உள்ளது.
மொத்தத்தில் இந்தியாவில் மிகப் பெரிய எழுச்சிய அன்னாவின் போராட்டம் ஏற்படுத்தியுள்ளது என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் நடமாடும் காந்தி என்று அன்னாவைக் கூறும் அவரது ஆதரவாளர்கள், காந்தியைப் போலவே நாடு முழுவதும் சென்றடையும் வகையில் தனது கருத்துக்ளுக்கு நாடு தழுவிய ஆதரவைப் பெறத் தவறி விட்டார் அன்னா என்பதும் மறுக்க முடியாத உண்மை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக