புதன், 17 ஆகஸ்ட், 2011

வீணான வதந்திகளை நம்பி, பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் இருக்கின்ற உறவினைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள்.

டொலர்களைப் பெற்றவர்களின் கட்டுக்கதையே கிரீஸ் பூதம்
சனல் 4, தருஸ்மன் அறிக்கை மூலம் டொலர்களைப் பெற்று சட்டைப் பைகளை நிரப்பியவர்களின் கட்டுக்கதையே இந்தக் கிரீஸ் பூத வதந்தியென சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர தெரிவித்தார்.
மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நடைபெற்ற பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகள், உள்ளிட்டோர் மத்தியில் கிரீஸ் மனிதன் தொடர்பில் விளக்கமளிக்கும் வகையில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் இங்கு உரையாற்றிய அவர், சிங்களவனாக ஒரு பொலிஸ் அதிகாரியாக இல்லாமல் நல்ல நண்பனாக உறவினராக உரையாற்ற விரும்புகிறேன். சில அடிப்படைவாதிகள், விசமிகள் சமூக விரோதிகள், நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்ல நினைப்பவர்கள், இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிலர் இந்தக் கூட்டம் நடைபெறுவது அறிந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு கூட்டத்துக்குச் செல்ல வேண்டாம் என மிரட்டியுள்ளனர்.
ஆகவே இதன் அடிப்படை என்னவென்றால், புலிச்சின்னம் போட்ட கடிதங்களை அனுப்பியுள்ளனர். புலிகள் இங்கு இல்லை. புலிகள் ஒழிக்கப்பட்டு விட்டனர். என்ன நடந்தது. எங்கே இருந்து உங்களுக்குத் தொலைபேசி அழைப்பு வந்தது. எல்லாம் எங்களுக்குத் தெரியும். அனைத்தும் பெயர் விபரங்களுடன் உள்ளன.
தமிழ் விடுதலை, தமிழர்கள் விடுதலை இயக்கம் என்று ஒன்று இல்லை. அரசாங்கம் என்று மட்டுமே ஒன்று உள்ளது. அதே போன்று சிங்களவர் விடுதலை, முஸ்லிம்கள் விடுதலை, முஸ்லிம்களின் விடுதலை என்றும் ஒன்றும் இல்லை.
அப்பட்டமான பொய்ப்பிரச்சாரங்களுக்கு உட்பட வேண்டாம். குட்டக்குட்ட குனிபவனும் மடையன், குட்டுபவனும் மடையன். என்பது போல் இவ்வாறான கதைகளை எழுப்பி பிரிவினையை உருவாக்கப் பார்க்கின்றனர்.
சிங்கள மக்கள் இனவாதத்தைக் கிளப்பும் வகையில், புதிதாக கிரீஸ் பூதம் என்ற கட்டுக் கதையைக் கிளப்பியுள்ளனர். இதனைச் செய்வது பாதுகாப்புப் படைகளிலுள்ளவர்கள் என்று சிலர் சொல்கின்றனர்.
தமிழ், முஸ்லிம் மக்களின் மத்தியில் இனவாதத்தினைப் பரப்ப சிங்கள இனவாதச் சூத்திரதாரிகள் முயல்கின்றனர். புலி பதுங்குவது பாய என்கின்றனர். அவ்வாறு எந்தப் புலிகளும் இல்லை. மிருகக்காட்சிச்சாலையில் இருக்கின்ற புலிகள் மட்டுமே இருக்கின்றன.
விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தில் பிரபாகரன், அவரது குடும்பம், அவர்களது ஆதரவாளர்கள், அனைவரும் அழிக்கப்பட்டு விட்டனர். யுத்தம் செய்து பெற முடியாததை சனல் -4, தருஸ்மன் அறிக்கை மூலம் அழுத்தம் கொடுத்து சாதிக்க முயல்கின்றனர்.
எந்த ஒரு மனிதனும் தனது பிள்ளைகளை படிக்கச் செய்து சமுதாயத்தில், நல்ல நிலைக்குக் கொண்டு வர வேண்டும் என்பதையே யோசிப்பர். எங்களது ஆயுதங்கள் மௌனமாக இருக்கின்றது. இங்கு ஒன்றாக இருக்கும் தமிழ், முஸ்லிம் மக்களிடையே பிரிவினை ஏற்படுத்த முனையும் சிங்கள அடிப்படைவாதிகளுக்கு எமது ஆயுதமே பேசும். இப்போது எந்தப் பயங்கரவாதமும் இல்லை.

அடிப்படைவாதிகள், மக்களை அச்சுறுத்த சந்தர்ப்பம் வழங்கப்படமாட்டாது, ஒரு சிலர் ஆயுதங்களைப் பதுக்கி வைத்திருக்கின்றனர். அவர்களும் ஆயுதங்களைக் கையளிக்க காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஆயுதங்களை வைத்திருப்போர் தங்களது ஆயதங்களை ஒப்படைக்காமல் இருப்பதற்காக இவ்வாறான சூழ்ச்சிகளில் ஈடுபட்டு வருவது நமக்குத் தெரியும்.

வெளிநாடுகளில் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பில் எவரும் பயப்படத் தேவையில்லை. தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம் எனத் தெரிவித்துள்ளனர். இதனை இலங்கைத் தேசம் என மாற்றுங்கள். அரசில் இன மத பேத வேறுபாடுகள், சிங்கள, தமிழ் என்ற வேறுபாடுகள் கிடையாது. மானிட மனித நேயத்தை மட்டுமே நாங்கள் கொண்டுள்ளோம்.
வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு பகுதிகளிலும், மனித நேயத்துடனேயே வாழ்கின்றோம். கிரீஸ் பூதம் என்பதை கண்டது யார். அது ராட்சத உருவமா? அதனைப் புகைப்படம் பிடித்தவர்கள் யார். இது கஹவத்தையிலேயே முதலில் ஆரம்பமானது. பல கொலைகள் நடந்தன.
இது தொடர்பில், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வரும் வேளையில் சில தடங்கல்கள் காரணமாக விசாரணை சற்றுப் பிந்தியது.
இந்தச் சம்பவத்தின் போது கொல்லப்பட்டவர்கள், வயோதிபர்கள். இவர்களைக் கொன்றது. பேய் என அர்த்தம் கற்பிக்கப்பட்டது. மூன்று நான்கு மாதங்களின் பின்னர் மக்களின் பொறுமை எல்லை கடந்தது. மக்கள் கிளர்ந்தெழுந்தனர். ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்றன. அவர்களது கோபம் நியாயமானது.
கடந்த 30 வருட கால யுத்தம் காரணமாக பல்வேறு நெருக்கடிகள், வேதனைகளிலும் மக்கள் வாழ்ந்து வந்தனர். அவற்றை கிழக்கு மாகாண மக்களும் அனுபவித்ததால் மக்களின் பிரச்சினை எங்களுக்கு நன்றாக விளங்கும்.
முன்னர் ஒடுக்குமுறைக்கும் அடக்குமுறைக்கும் உள்ளான மக்கள் என்ற வகையில் உங்களின் உணர்வுகளை நான் உணர்கின்றேன்.
இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறும் போது பொலிஸார் சட்டம் ஒழுங்கை கையாள முடியாத நிலை ஏற்படும் உங்களுக்கு வெறுப்பு ஏற்படுவது உண்மை. இதன்அடிப்படையிலேயே கஹவத்தையில் ஆர்ப்பாட்டம் செய்தார்கள், பொலிஸாருக்கெதிராக கூக்குரலிட்டனர்.

கல்குடாவிலிருந்து மட்டக்களப்புக்கு நான் வரும் போது செங்கலடி பிரதேசத்தில் ரயர் எரிவதைக் கண்டேன். புதிய காபட் வீதியில் அந்த ரயர்களைப் போட்டு எரிப்பதனால், அந்த வீதி பழுதடைந்து விடும். இதனால் யாருக்கு நட்டம் ஏற்படுகிறது. உங்களுக்குத்தான். இது தொடர்பில் இருவரைக் கைது செய்து கொண்டு வந்தோம்.
கஹவத்தை சம்பவத்தில் நான் ஊவா மாகாண பொலிஸ் அத்தியட்சகராகக் கடமையாற்றினேன். பாதுகாப்புச் செயலாளர், பொலிஸ் மா அதிபர், இரத்தினபுரியில் நிலமை மோசமாக இருக்கிறது சென்று பாருங்கள் என்று கூறினர். நான் இரத்தினபுரிக்குச் செல்லவில்லை.
நேரடியாக கஹவத்தைக்குச் சென்றேன் அங்கு சென்று நிலமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர படையினருடன் இணைந்து முயற்சித்தேன்.
நான்கு நாட்களில் ஒழுங்கான விசாரணைகளைச் செய்து, நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தேன். இது பொலிஸாரால் மட்டும் முடியாத காரியம். அங்கு ரயர்கள் எரித்த மக்களின் ஒத்துழைப்புடனேயே கண்டுபிடித்தோம். மக்களை அழைத்து விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டோம். ஒத்துழைப்பு வழங்கினார்கள் கண்டுபிடித்தோம்.
சந்தேக நபர்களைக் கைது செய்து கொலையாளியின் அடிப்படையைப் பார்த்தோம். சாதாரண மக்களின் கோபதாபங்களின் அடிப்படையில் நடந்த கொலைகள். இதில் எந்தப் பூதமும் சம்பந்தப்படவில்லை.

ஒரு கொலை நடந்தால் அந்த வீட்டையும் அழுதவர்களையும் மட்டும் பார்க்காமல் கொலையின் மறுபக்கம் கொலையாளியின் பக்கம், எல்லாம் பார்க்கப்பட வேண்டும். பொலிஸ் அதனையே செய்கின்றனது. விடுதலைப்புலிகளின் பயங்கரவாதமும் இதனை ஒத்ததுதான்.
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த கல்வி மான்கள், புத்திஜீவிகள், இதையொத்தவர்களே.
அந்தக்காலத்தில் யுத்தத்தில் ஈடுபட்டவர்கள், கைது செய்யப்பட்ட போது அவர்கள் துன்புறுத்தப்படவில்லை. தாக்கப்படவில்லை. நல்ல நிலையிலேயே இருந்தனர். அவ்வாறானவர்களில் ஒருவர், இன்று கிழக்கு மாகாணத்தை ஆட்சி செய்கின்றார்.
முன்னர் தலைவராக இருந்த ஒருவர் அரசாங்கத் தரப்பில் பிரதி அமைச்சராக இருக்கின்றார். இதே போன்று மாகாண சபை பிரதேச சபை உறுப்பினர்களாகவும் அவர்கள் இருக்கின்றனர்.
இதனை மனச்சாட்சியுள்ள எவரும் மறுக்க மாட்டார்கள். இது எங்கள் நாடு இங்கு பத்து ஆட்சியில்லை. மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி ஒருவருடைய தலைமையின் கீழ் ஜனநாயக ஆட்சி நடக்கின்றது.
அமைச்சர்கள் அதிகாரத்தைக் கையில் எடுத்து மக்களைத் துன்புறுத்தினால் அவர்கள் மக்கள் பிரதிநிதியாக இருக்க அருகதையற்றவர்கள்.

பாதுகாப்புப் படையினர் பேச்சுவார்த்தை ஒன்றுக்குச் சென்றபோது விடுதலைப்புலிகள் அதனைப் பயன்படுத்தி ஆயுதச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.
1983ஆம் ஆண்டு நடைபெற்ற 13 கொலைகள் பல்வேறு மாற்றங்களையும் பிரச்சினைகளையும் ஏற்படுத்தியிருந்தது. அன்று கொழும்புக்கு வந்த 13 சடலங்களைக் கண்டவுடன் எங்களுக்குள் இருந்த சில காடையர்கள், குழப்பக்காரர்கள் அப்பாவித் தமிழ் மக்களின் கடைகளை உடைத்தார்கள். எரித்தார்கள். அப்பாவித் தமிழர்களைக் கொன்றார்கள். இது கசப்பான உண்மை.
ஒருகாலத்தில் இந்து சமுத்திரத்தின் முத்து எனப் போற்றப்பட்ட இலங்கை இந்த நடவடிக்கைகளின் காரணமாக இரத்த ஆற்றில் மூழ்கியது. உலகமே ஒன்று திரண்டு இலங்கைக்கு கறுப்புப் புள்ளி குற்றியது. இலங்கையில் சிறுபான்மை இனத்தவர்கள் கொல்லப்படுகின்றனார்கள், நசுக்கப்படுகிறார்கள் என்ற பிரச்சாரத்தில் ஈடுபட்டது.
இதனை உலகமே நம்பியது. இது ஒரு சிலரின் நடவடிக்கையால் விளைந்தது. இதனைத் தொடரந்து இந்நிலையை மாற்றுவதற்காக சிறப்புத்திட்டங்கள் தீட்டப்பட்டு இவ்வாறான அடிப்படைவாதிகள் விசமிகள், சமூகவிரோதிகள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டனர்.
மட்டக்களப்பிலும் யுத்த காலத்தின் போது மக்கள் பெரும் பீதியின் மத்தியிலேயே வாழ்ந்து வந்தனர். வெளியில் சென்றால். திரும்பி வருவது நிச்சயமில்லாமல் இருந்தது.
அதே போல் அரந்தலாவையில் 23 பிக்குமார் கொல்லப்பட்டமை, தலதா மாளிகை மீது குண்டு வைக்கப்பட்டமை, இலங்கையின் பொருளாதார முக்கியத்துவம் மிக்க மத்திய வங்கி மீது குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த வேளையில் சிங்கள மக்கள் கொதித் தெழுந்து தமிழ் மக்கள் மீது தாக்குதல் நடத்தியிருந்தால் எவ்வாறான நிலை உருவாகியிருக்கும் என கேள்வி எழுப்பினார்.
வீணான வதந்திகளை நம்பி, பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் இருக்கின்ற உறவினைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள். யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் வியாபாரம், வர்த்தகம் செழிக்க வேண்டும் விதீகள் புனரமைக்கப்பட வேண்டும், ஆசியாவில் ஆச்சரியம் மிக்க நாடாக மாற்ற வேண்டும். இது எமது எதிர்கால சந்ததியினருக்கு நாம் செய்யவேண்டியதாகும்.
இந்தப்பயணம் மனிதாபிமானப் பயணமாகும். இது சீராக அமைய வேண்டுமானால் பொலிஸ் சேவை அவசியம் தேவை. இந்த நாடு அபிவிருத்திப் பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கையில், சனல் -4 தருஸ்மன் அறிக்கை போன்றவைகளால் டொலர்களைப் பெற்றுக் கொண்டவர்களே அபிவிருத்திப் பாதைகளைத் தடைசெய்து தமது பக்கட்டுக்களை நிரப்புவதற்காக இவ்வாறான கண்டுபிடிப்புகளான கிறிஸ் பேய் கதைகளைக் கூறித்திரிகின்றனர்.
வடமேல் மாகாணத்தை ஒழுங்குபடுத்தி வரும் வேளையில், மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் இடம்பெற்றுவரும், சம்பவங்களை கண்காணிக்குமாறு பாதுகாப்புச் செயலாளர், பொலிஸ் மா அதிபர் ஆகியோர் என்னிடம் கோரிக்கை விடுத்தனர்.
இது தொடர்பில் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்தில் உள்ள கிரீஸ் பூதம் என்ற வதந்தியை அழிப்பதற்கு அதற்குரிய நேர அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மட்டக்களப்பு மாவட்டத்துக்கென சிறப்புத்திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. மாவட்டத்திலுள் 12 பொலிஸ் நிலையங்கள் ஊடாக இவற்றுகுரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக