வெள்ளி, 5 ஆகஸ்ட், 2011

அமெரிக்காவில் சோனியாவுக்கு அறுவை சிகிச்சை: திரும்பி வரும் வரை ராகுல் வசம் காங்

டெல்லி: அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அமெரிக்கா புறப்பட்டு சென்றார். அவர் வரும் வரை காங்கிரஸ் நிர்வாகத்தைக் கவனிக்கும் பொறுப்பு ராகுல் உள்ளிட்ட நான்கு பேர் குழுவிடம் அளிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு வயிற்றுப் பகுதியில் அமெரிக்காவில் அறுவை சிகிச்சை நடக்கவிருக்கிறது. இதற்காக அவர் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.
அவர் திரும்பி வரும் வரை கட்சி அலுவல்களைக் கவனிக்க 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோணி, சோனியாவின் அரசியல் ஆலோசகர் அகமது பட்டேல், ராகுல் காந்தி மற்றும் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜனார்தன் திவேதி ஆகியோர் உள்ளனர்.
இது குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் திவேதி கூறியதாவது,

சோனியா காந்திக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு அறுவை சிகிச்சை செய்தே ஆக வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். அதனால் அவர் வெளிநாட்டுக்குச் சென்றுள்ளார். திரும்பி வர 2 முதல் 3 வாரங்கள் ஆகும் என்றார்.
நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ராஜீவ் ஷுக்லா கூறுகையில்,

நால்வர் குழுவில் ராகுலை நியமித்தது சோனியா தான். அவர் விரைவில் குணமடைந்து வருவார் என்று நம்புகிறோம். ராகுல் தான் கட்சியின் பொதுச் செயலாளர். அவர் கட்சி குறித்த முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறார். அவர் மேலும் சில பொறுப்புகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இது தாய்க்கும், மகனுக்கும் இடையே உள்ள விஷயம் என்றார்.
நரேந்திர மோடி வாழ்த்து
இந்த நிலையில், சோனியா காந்தி விரைவில் குணமடைந்து வர வேண்டும் என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர்தான் சோனியா விரைவில் குணமடைய வேண்டும் என்று வேண்டி முதலில் வாழ்த்து தெரிவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல பாஜக மக்களவை எதிர்கட்சித் தலைவரானன சுஷ்மா சுவராஜும் சோனியா விரைவில் குணமடைய வாழ்த்தியுள்ளார்.
ஆபரேஷன் முடிந்ததா, இல்லையா?
இதற்கிடையே சோனியாவுக்கான ஆபரேஷன் குறித்து இரு வேறு தகவல்கள் வெளியாகி அனைவரையும் குழப்பி விட்டது.
முதலில் மூத்த காங்கிரஸ் தலைவரான ஜனார்த்தன் திவேதி சோனியா காந்திக்கு அறுவை சிகிச்சை முடிந்துவிட்டதாக தெரிவித்தார். 20 நிமிடங்கள் கழித்து அறுவை சிகிச்சை இன்னும் முடியவில்லை என்று கூறினார்.
காங்கிரஸ் கட்சி இது தொடர்பாக தெளிவான தகவலை வெளியிடாததால் பெரும் குழப்பம் நிலவுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக