ரூ.45 ஆயிரம் கோடி தங்கத்தை காலி செய்த கடாபி
கெய்ரோ: "தலைமறைவாக உள்ள லிபிய தலைவர் கடாபி, 45 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை காலி செய்து விட்டார்' என, அந்நாட்டு ரிசர்வ் வங்கி தலைவர் தெரிவித்துள்ளார். லிபிய தலைவராக பல ஆண்டுகளாக நீடித்து வந்த கடாபியை, பதவி விலகும்படி கோரி, கிளர்ச்சியாளர்கள் கடந்த பிப்ரவரி முதல் போராடி வருகின்றனர். போராட்டக்காரர்களை ஒடுக்க, கடாபி ராணுவம் விமானத் தாக்குதலை நடத்தியதால், கிளர்ச்சியாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க நேட்டோ படைகள், கடாபி ராணுவத்துக்கு எதிரான தாக்குதலை நடத்தி வருகின்றன. டிரிபோலியை தவிர்த்து, மற்ற பகுதிகள் கிளர்ச்சியாளர்கள் வசம் வந்துள்ளன. டிரிபோலியை கைப்பற்ற நடந்த சண்டையில், 400 பேர் பலியாகியுள்ளனர். கடாபியின் மாளிகையை முற்றுகையிட்டு தாக்குதல் நடந்ததால், தற்போது கடாபி தலைமறைவாகியுள்ளார். அவரைப் பிடித்துத் தருவோருக்கு, 8 கோடி ரூபாய் வெகுமதி அளிக்கப்படும் என, கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். லிபிய ரிசர்வ் வங்கியின் தலைவர் பர்கா பெங்தாரா குறிப்பிடுகையில், ""லிபியாவில் 8 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு, தங்கத்தின் இருப்பு உள்ளது. டிரிபோலியில் மட்டும், 45 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு தங்கம் கையிருப்பு இருந்தது. இதை, கடாபி காலி செய்துள்ளார். இந்தத் தங்கத்தை, அவர் தனது கூலிப் படையினர் மூலம், அமெரிக்க டாலராகவோ, யுரோ கரன்சியாகவோ மாற்றியிருக்கலாம். இந்தப் பணத்தை, அவர் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளச் செலவிடலாம். அல்லது தற்கொலைப் படைத் தாக்குதலுக்குப் பயன்படுத்தலாம்'' என்றார். இதற்கிடையில், பாகிஸ்தானில் உள்ள லிபிய தூதரகத்தில், லிபியாவின் தேசியக் கொடி இறக்கப்பட்டு, கிளர்ச்சியாளர்களின் கொடி நேற்று ஏற்றப்பட்டது. இது குறித்து, இஸ்லாமாபாத்தில் உள்ள லிபிய தூதர் குறிப்பிடுகையில், ""லிபியாவில், ஆட்சி மாற்றத்தை ஐ.நா.,மற்றும் உலக நாடுகள் ஆதரித்துள்ளன'' என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக