வெள்ளி, 19 ஆகஸ்ட், 2011

27 சரவணா ஸ்டோர்ஸ் கடைகளில் 500 அதிகாரிகள் சோதனை

சென்னை : ஜவுளி, நகை விற்பனையில் பிரபலமான சென்னை சரவணா ஸ்டோர்ஸ்க்கு சொந்தமான கடைகள் மற்றும் அலுவலகங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். ஒரே நேரத்தில் 27 இடங்களில் நடந்த சோதனையில் 500க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இரவு பகலாக நடந்த சோதனை இன்றும் தொடரும் எனத் தெரிகிறது.

சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவில், Ôசரவணா ஸ்டோர்ஸ்Õ துணிக் கடையும், அதன் எதிரே பாத்திரக் கடையும் உள்ளது. மேலும், ரங்கநாதன் தெருவுக்கு எதிரே Ôசரவணா செல்வரத்தினம் ஸ்டோர்ஸ்Õ என்ற துணிக்கடை மற்றும் பாண்டிபஜார் பனகல் பார்க் எதிரே உஸ்மான் சாலையில் ÔÔசரவணா ஸ்டோர்ஸ் பிரமாண்டமாய்ÕÕ என்ற பெயரில் துணிக்கடை, அதன் அருகே ÔÔசரவணா செல்வரத்தினம் ஜுவல்லரி என்ற நகைக்கடையும் உள்ளன.

புரசைவாக்கத்திலும் சரவணா ஸ்டோர்ஸ் பிரமாண்டமாய்என்ற பெயரில் 6 அடுக்கு மாளிகை உள்ளது. இந்தக் கடைகள் எல்லாம் யோகரத்தினம், ராஜரத்தினம், செல்வரத்தினம் ஆகிய 3 சகோதரர்களுக்குச் சொந்தமானது. இப்போது, செல்வரத்தினத்தின் மகன் சரவணன் அருள் என்பவர் தனது தந்தை பெயருடன் சேர்ந்து சரவணா ஸ்டோர்ஸ் என்ற பெயரில் தனியாக நடத்தி வருகிறார். யோகரத்தினம், ராஜரத்தினம் மகன்கள் சபாபதி, டாக்டர் அருள் ஆகியோர் சரவணா ஸ்டோர்ஸ் பெயரில் பல்வேறு பிரிவுகளாக இயங்கும் கடைகளை நடத்தி வருகின்றனர்.

இந்தக் கடைகளில் துணிகள் மட்டுமின்றி, எலக்ட்ரானிக் பொருட்கள், காய்கறிகள், விளையாட்டு சாமான்கள், ஸ்வீட்ஸ், மரச்சாமன்கள் ஆகியவை விற்பனை செய்யப்படுகின்றன. இந்தக் கடைகள் காலை 9 மணிக்கு திறக்கப்படுவது வழக்கம். அதற்காக ஊழியர்கள் காலை 8 மணிக்கு பணிக்கே வந்து விடுவார்கள். அதன்படி நேற்று காலை 8 மணிக்கு மேனேஜர்கள், ஊழியர்கள் பணிக்கு வந்தனர்.

அவர்களுக்கு முன்னதாக வருமான வரித்துறை அதிகாரிகள் வந்திருந்தனர். 500 பேர் கொண்ட குழுவினர் அதிரடியாக எல்லா கடைகளிலும் தனித்தனி பிரிவாக புகுந்தனர். அதையடுத்து கடைகள் அனைத்தும் உடனடியாக மூடப்பட்டன. பொதுமக்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. கடைகளுக்கு விடுமுறை என்று எழுதி ஒட்டப்பட்டன.

சோதனை நடைபெறுவது தெரியாமல் ஏராளமான வாடிக்கையாளர்கள் பொருட்கள் வாங்காமல் திரும்பிச் சென்றனர். குறைந்த விலை என்பதால், வெளிமாவட்டங்களில் இருந்தும் ஏராளமானவர்கள் வந்திருந்தனர். அவர்களும் திரும்பிச் சென்றனர். பணிக்கு வந்திருந்த ஊழியர்கள் மட்டும் கடைக்குள் அனுமதிக்கப்பட்டனர். தாமதமாக வந்த ஊழி யர்கள் அனுமதிக்கப்படவில்லை. அதேநேரத்தில் உள்ளே இருந்தவர்களும் வெளியில் செல்ல அனுமதிக்கப்படவில்லை. துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர்.

இந்தச் சோதனையில் ஏராளமான ஆவணங்கள் சிக்கின. மேலும் கணக்கு காட்டாமல் துணிகள் வாங்கியது, விற்பனை செய்தது, விற்பனை பற்றிய முறையான கணக்குகள் இல்லாததையும் கண்டறிந்ததாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது. எனினும் ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வுக்காக அள்ளிச் சென்றுள்ளனர். இந்த சோதனை நேற்று இரவு முழுவதும் நடந்தது.

சோதனை குறித்து வருமானவரித்துறை (புலனாய்வு பிரிவு) கூடுதல் இயக்குனர் எஸ்.ரவிச்சந்திரன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:சென்னையில் ஜவுளி, நகை, வீட்டு உபயோகப் பொருட்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் காய்கறி ஆகிய வியாபாரத்தில் முன்னணியில் இருக்கும் ஒரு வர்த்தக குழுமத்திற்கு சொந்தமான கடைகள், வீடுகள் என 27 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த சோதனையில் 500க்கும் அதிகமான அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுத்தப்பட்டனர். இந்த வர்த்தக குழுமத்திடம் இருப்பில் உள்ள பொருட்கள் உள்ளிட்ட விவரங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சோதனை காலை 7.45 மணிக்கு தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக