வெள்ளி, 19 ஆகஸ்ட், 2011

பொலிஸாருடன் 25 இளைஞர்களைக் கொண்ட குழு


பொலிஸாருடன் 25 இளைஞர்களைக் கொண்ட குழு (படங்கள்)


மட்டக்களப்பு ஊறணியில் ஏற்பட்ட நிலைமையை தொடர்ந்து அப்பகுதியில் பொலிஸாருடன் இணைந்து செயற்படும் வகையில் 25 இளைஞர்களைக் கொண்ட கிராமியக் குழுவொன்றை பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர அமைத்துள்ளார்.

ஊறணியில் பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் ஏற்பட்ட கலவரத்தினைத் தொடர்ந்து சுமூக நிலைமையை ஏற்படுத்த ஊறணி பேச்சியம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பிள்ளையாரடி பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்கு வந்த இனந்தெரியாதவர் அங்கிருந்த பெண் ஒருவரின் இரு கைகளிலும், மார்பகங்களிலும் கீறிவிட்டு ஓடியதையடுத்து ஊறணி பிரதேசத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
குழப்பமடைந்த மக்கள் ஊறணி பிரதான வீதியில் டயர்களை எரித்ததுடன், ஊறணி பொலிஸ் நிலையத்தினை தாக்க முற்பட்டனர். இதனையடுத்து படையினராலும் பொலிஸாரினாலும் பொதுமக்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இதனையடுத்து அப்பகுதிக்கு சென்ற தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மாவட்ட அமைப்பாளரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன் அப்பகுதிக்கு விஜயம் செய்து நிலைமைகளை அவதானித்ததுடன் பொலிஸ் உயரதிகாரிகளின் கவனத்துக்கும் கொண்டுசென்றார்.

இதனைத்தொடர்ந்து மட்டக்களப்புக்கு வருகைதந்துள்ள சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர உட்பட பொலிஸ் அதிகாரிகள் அப்பகுதிக்கு சென்று மக்களுடன் கலந்துரையாடினர்.
சுமார் இரண்டு மணி நேரமாக இடம்பெற்ற கலந்துரையாடலில், 25 இளைஞர்களை உள்ளடக்கிய இளைஞர்கள் கிராமிய குழுவொன்று அமைக்கப்பட்டதுடன் அந்த இளைஞர்களுடன் அப்பகுதியில் பாதுகாப்பை மேற்கொள்வதற்கு பொலிஸ் அதிகாரிகளுடன் இரண்டு ஜீப் வண்டிகளையும் வழங்க உறுதியளிக்கப்பட்டது.
அத்துடன் அப்பகுதி மக்கள் விடுத்த வேண்டுகோளின் பேரில் ஊறணி பொலிஸ் சாவடியில் கடைமையாற்றும் பொலிஸாரை உடனடியாக இடமாற்றவும் பணிப்புரை விடுக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக