சனி, 13 ஆகஸ்ட், 2011

லாட்டரி மார்ட்டின்.கைதானார்!25 கோடி நில அபகரிப்பு புகார்

சென்னை: ரூ 25 கோடி நில அபகரிப்பு புகாரில் பிரபல லாட்டரி அதிபரும் சினிமா பட தயாரிப்பாளருமான மார்ட்டின் கைது செய்யப்பட்டார்.
கோவையைச் சேர்ந்த பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டின். இவர் கருணாநிதி கதை வசனம் எழுதிய இளைஞன், பொன்னர் சங்கர் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார்.
இவர் மீது ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்த எம்.அங்குராஜ் என்பவர் பூந்தமல்லி நசரத்பேட்டை போலீசில் நில அபகரிப்பு புகார் கொடுத்தார்.
அதில், "கடந்த 2005-ம் ஆண்டு மார்ட்டின் என்னை சந்தித்து நசரத்பேட்டை அருகில் உள்ள எனக்கு சொந்தமான 2 ஏக்கர் 35 சென்ட் நிலத்தை விலைக்கு கேட்டார். நான் விற்க மறுத்து விட்டேன்.
அதன் பிறகு அவர் எனது மாமாவை அணுகி அவருடன் சேர்ந்து போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அபகரித்துக் கொண்டார். இந்த நிலத்தின் தற்போதைய மதிப்பு ரூ. 25 கோடியாகும். இதுபற்றி நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்டுத்தருமாறு கேட்டுக் கொள்கிறேன்", என்று கூறியுள்ளார்.

அதன் பேரில் நசரத் பேட்டை போலீசார் மார்ட்டின் அவரது உறவினர் பெஞ்சமின் உள்பட 7 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு நில அபகரிப்பு தனிப் பிரிவுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் மார்ட்டின் உள்பட 7 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றுள்ளனர். அவர்கள் தினமும் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்து போட வேண்டும் என்று நீதிமன்றம் நிபந்தனை விதித்தது.

அதன்படி மார்ட்டின், பெஞ்சமின் உள்பட 6 பேர் சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள நில அபகரிப்பு பிரிவு போலீஸ் முன் ஆஜராகி கையெழுத்து போட்டனர். அப்போது நில அபகரிப்பு புகார் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினார்கள். மார்ட்டினிடம் 5 போலீஸ் அதிகாரிகள் தனி விசாரணை மேற்கொண்டனர்.
கைது
விசாரணை முடிவில் அவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது 11 வழக்குகள் நிலுவையில் உள்ளதாலும், மேலும் மேலும் நிலமோசடி புகார்கள் வருவதாலும் அவர் கைது செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
பின்னர் சேலம் புகார் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக அவர் சேலத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
மு.க.அழகிரி மனைவி காந்திக்கு மதுரையில் கோவில் நிலத்தை குறைந்த விலைக்கு மார்ட்டின் விற்றதாகவும் மார்ட்டின் மீது புகார் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக