சனி, 6 ஆகஸ்ட், 2011

கல்வி கட்டண குழு புதிய தலைவரை நியமிக்க அரசுக்கு 19 வரை கெடு

தனியார் பள்ளி கல்வி கட்டண கமிட்டிக்கு புதிய தலைவரை வரும் 19&ம் தேதிக்குள் நியமிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பண்ருட்டியை சேர்ந்த சேஷாசைலம் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில்  தாக்கல் செய்துள்ள பொது நல வழக்கில் கூறியிருப்பதாவது: தமிகத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு கல்வி கட்டணம் நிர்ணயிக்க, கல்விக் கட்டணம் ஒழுங்குமுறை சட்டத்தை கடந்த அரசு கொண்டு வந்தது.

இதன்படி, கல்விக் கட்டணம் நிர்ணயிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் கமிட்டி அமைத்தது. இந்தக் கமிட்டி ஆய்வு நடத்தி 10 ஆயிரத்துக்கும் அதிகமான பள்ளிகளுக்கு கல்விக் கட்டணம் நிர்ணயித்தது. உடல்நிலையை காரணம் காட்டி நீதிபதி கோவிந்தராஜன், கமிட்டியில் இருந்து விலகினார். இதைத் தொடர்ந்து நீதிபதி ரவிராஜபாண்டியன், புதிய தலைவரானார். கடந்த ஜூன் மாதம் 13ம் தேதியன்று அவரும் பதவியை ராஜினாமா செய்து விட்டார்.

கமிட்டியின் உறுப்பினர் செயலாளராக இருந்த பள்ளி கல்வி இணை இயக்குனர் கடந்த ஜூன் மாதம் 3ம் தேதியுடன் பணியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். அதன்பிறகு கமிட்டி தலைவர் மற்றும் உறுப்பினர் செயலாளர் நியமிக்கப்படவில்லை. தற்போது பள்ளிகள் தங்கள் இஷ்டத்துக்கு கட்டணத்தை வசூலித்து வருகின்றன.

பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க கல்விக் கட்டண கமிட்டிக்கு புதிய தலைவரையும், உறுப்பினர் செயலாளரையும், தனி  அதிகாரியையும்   நியமிக்க வேண்டும். அதுவரை கல்வி கட்டணம் குறித்து குவித்துள்ள மனுக்களை விசாரிக்க இடைக்கால கமிட்டியை உயர்நீதிமன்றம் அமைக்க வேண்டும்.  இவ்வாறு பொதுநல வழக்கு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கை தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் விசாரித்தனர்.

 மனுதாரர் சார்பாக மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜராகி, ‘‘கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுத்து மாணவர்கள் நலனை பாதுகாக்க நீதிமன்றம்  நடவடிக்கை எடுக்க வேண்டும், ஏனெனில் கூடுதல் கட்டணம் செலுத்தாக மாணவர்களை பள்ளியை விட்டு பள்ளி நிர்வாகம் நீக்குகிறது, மாணவர்கள் படிப்பு பாதிக்கப்படுகிறது, ஒரு மாணவன் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டான்,

அவனை மீண்டும் பள்ளியில் சேர்க்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது, அந்த அளவுக்கு மாணவர்கள் நிலை பரிதாபமாக உள்ளது , இதில் நீதிமன்றம் அவசரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும், பள்ளிகள் மீதான புகார் குறித்து கமிட்டி விசாரித்து பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க கமிட்டி பரிந்துரை செய்தால் தான் பள்ளிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க முடியும்.  ‘ என்றார்.

தமிழக அரசு சார்பாக ஆஜரான அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன், ‘‘கல்விக் கட்டண கமிட்டிக்கு புதிய தலைவரை விரைவில் நியமித்து விடுவோம்‘‘ என்றார்.
இதைக் கேட்ட நீதிபதிகள், ‘‘வரும் 19&ம் தேதிக்குள் புதிய தலைவரை நியமிக்க வேண்டும், அதற்கான அரசாணையை கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும்‘‘ என உத்தரவிட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக