புதன், 13 ஜூலை, 2011

TNA அரசியல் பலத்தை எமது மக்களின் அழிவுகளுக்கு மாத்திரமே பயன்படுத்தியது : டக்ளஸ்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் பலத்தை அழிவுகளுக்காக அன்றி எமது மக்களின் அரசியலுரிமைக்காக ஒரு போதும் பயன்படுத்த விரும்பியிருக்கவில்லை என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இன்றைய தினம் திருநெல்வேலி பாற்பண்ணை வீதியில் அமைந்துள்ள கம்பர் சன சமூக நிலைய மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அங்கு திரண்டிருந்த மக்கள் மத்தியில் இக்கேள்வியை எழுப்பியிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தொடர்ந்தும் கூறுகையில்,
தமிழ் மக்கள் ஓரணியில் நின்று ஒற்றுமையின் பலத்தை உலகுக்கு காட்ட வேண்டும் என்று கூறியே கால காலமாக பெற்று வந்த அரசியல் பலத்தை வைத்து சுயலாப அரசியல் தலைமைகள் இதுவரை எதைச் சாதித்திருக்கின்றார்கள் என்றும், பெற்றிருந்த அரசியல் பலத்தை அழிவுகளுக்காக அன்றி ஆக்கத்தை நோக்கி பயன்படுத்தியிருக்கவில்லையே என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூட்டமைப்பை நோக்கி பகிரங்க கேள்வி எழுப்பியுள்ளார்.
‘தமிழ் மக்களின் ஒற்றுமை என்பது அவசியமானது. ஆனாலும் அதை தேர்தல் காலங்களில் மட்டும் வாக்குகளை அபகரிப்பதற்கான வெற்றுக்கோசமாக பயன்படுத்துவதையே நான் வெறுக்கின்றேன்.
77 இல் ஒற்றுமையை உலகுக்கு காட்டுங்கள் என்றும், தனிநாட்டு கோரிக்கைக்கு ஆணை வழங்குங்கள் என்றும் மக்களிடம் கோரியிருந்தார்கள். தமிழ் மக்களும் இவர்களை நம்பித்தான் வாக்களித்திருந்தார்கள்.
இவர்களால் நரம்புகள் முறுக்கேற்றப்பட்டு உசுப்பிவிடப்பட்ட இளைஞர் யுவதிகளும் அப்பாவி மக்களும் நடுத்தெருவில் நின்ற போது இவர்கள் மட்டும் தமிழ் நாட்டிற்கு ஓடிச்சென்று தனிவீடுகள் பெற்று தமது குடும்பங்களோடு ஆடம்பர வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இது போலவே அதற்குப் பின்னரும் கிடைத்திருந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் சுயலாப அரசியல் தலைமைகள் வழங்கிய தேர்தல்கால வாக்குறுதிகளை நம்பி தமிழ் மக்கள் தமது ஒற்றுமையின் பலத்தைக் காட்டி ஏமாந்திருக்கிறார்கள்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்க ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்டிருந்த அரசியல் தீர்வினை அரசாங்கத்தோடு கலந்து பேசி தமிழ் மக்களின் அரசியலுரிமை பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு மாறாக, அன்றைய எதிர்க்கட்சிகளோடு இணைந்து நின்று அந்த தீர்வுத்திட்டத்தை தெருவில் இறங்கி எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தும், நாடாளுமன்றத்தில் வைத்து எரித்து கொழுத்தியும் தமிழ் மக்களுக்கு வரலாற்று துரோகமிழைத்தனர்.
அதைத் தொடர்ந்து, முன்னால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக்காலத்திலும், ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்கு வந்திருந்த போதும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தமிழ் மக்களிடமிருந்து பெற்ற அரசியல் பலத்தை அழிவுகளுக்காக அன்றி எமது மக்களின் அரசியலுரிமைக்காக ஒரு போதும் பயன்படுத்த விரும்பியிருக்கவில்லை.
2004 இல் தாம் பெற்றிருந்த 22 நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற பலத்தை வைத்து தமிழ் தேசிய கூட்டமைப்பினர் எமது மக்களை அழிவுகளில் இருந்து காப்பாற்றியிருக்கலாம், எமது அரசியலுரிமை பிரச்சினைக்கு தீர்வு கண்டிருக்கலாம். அல்லது இவர்கள் கூறுவது போல் அந்த பலத்தை வைத்து சர்வதேச சமூகத்தின் ஊடாக அன்றே எமது மக்களின் தலைவிதியை மாற்றியமைத்திருக்கலாம்.
ஆனாலும் அதற்கு மாறாக, தாம் பெற்ற நாடாளுமன்ற பலத்தை தமிழ் மக்களை முள்ளிவாய்க்கால் வரை இட்டு சென்று அழிவுகளையும், அவலங்களையும் மட்டுமே அவர்கள் மீது சுமத்துவதற்கு பிரதான காரணியாக தமிழ் தேசிய கூட்டமைப்பினரே இருந்திருக்கிறார்கள்.
ஆகவே, இது வரை கால வரலாற்றில் தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கும், அவர்கள் சார்ந்த கட்சிகளுக்கும் தமிழ் மக்கள் தமது வாக்குப்பலத்தை வழங்கியதால் ஏமாந்து போனவர்களாக மட்டுமன்றி தாம் அழிந்து போன வரலாறுகளையே கண்டிருக்கின்றார்கள்.
இதை தமிழ் மக்கள் உணரத்தொடங்கியிருக்கும் இத்தருணத்தில் எதிர்வரும் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளை மட்டும் அபகரிக்கும் கபட நோக்கத்தில் ஒற்றுமையின் பலத்தை உலகுக்கு காட்டுங்கள் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தமிழ் மக்களை இன்னொரு தடைவை ஏமற்ற எத்தனித்து வருகின்றனர்.
இவ்வாறு தெரிவித்திருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தவறான அரசியல் தலைமைகளுக்கு வாக்களித்து அன்றாட அவலங்களுக்கான தீர்வும் இன்றி, அபிவிருத்தியும் இன்றி, அரசியல் தீர்வும் இன்றி ஏமாற்றப்பட்டவர்களாக அல்லாமல் ஆக்க பூர்வமான இணக்க அரசியல் வழிமுறையின் பக்கம் அணிதிரள்வதே சிறந்த வழிமுறையாகும் என்றே இப்போது சிந்திக்க தொடங்கியிருக்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக