வெள்ளி, 15 ஜூலை, 2011

Somalia அகதிகள் குவிகின்றனர் : பசி, பட்டினியால் சாகும் அவலம்

மொகதிசு : "உலகிலேயே சோமாலியா நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சி, பசி, பட்டினி, மனிதச் சமுதாயத்திற்கு ஏற்பட்ட மோசமான பேரிடர்' என ஐ.நா.,வின் அகதிகளுக்கான உயர் கமிஷன் தெரிவித்துள்ளது. ஆப்ரிக்க நாடுகளில் சோமாலியா, எத்தியோப்பியா மற்றும் கென்யாவில் ஏற்பட்டுள்ள வறட்சியால், அந்நாட்டு மக்கள் உணவின்றி நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். கென்யாவில் தடாப் என்ற இடத்தில் உள்ள அகதிகள் முகாமில், இந்நாடுகளைச் சேர்ந்த மக்கள் வருகின்றனர். இந்த முகாமை பார்வையிட்ட ஐ.நா.,விற்கான அகதிகள் உயர் கமிஷன் தலைவர் அன்டோனியோ கட்டர்ரஸ் கூறியதாவது: கென்யாவில் தடாப்பில் உள்ள அகதிகள் முகாமில், 3 லட்சத்து 80 ஆயிரம் அகதிகள் உள்ளனர். சோமாலியாவில் ஏற்பட்டுள்ள வறட்சி, மனிதச் சமுதாயத்திற்கு ஏற்பட்ட மோசமான பேரிடர். முகாமிற்கு வரும் வழியில் ஒரு தாய், தனது மூன்று குழந்தைகளையும் பட்டினிக்கு பலி கொடுத்துவிட்டார். முகாமில் இருப்பவர்கள் பரம ஏழைகள். 50 சதவீத குழந்தைகள் சத்து குறைபாட்டால் நோஞ்சானாக உயிருடன் போராடி, பல குழந்தைகள் இறக்கின்றன. சத்து குறைபாட்டால், பல குழந்தைகள் தோலுரிந்து காணப்படுகின்றன. வறட்சியால் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து தண்ணீர் மற்றும் உணவு தேடி ஆயிரக்கணக்கானவர்கள் தினமும் வெளியேறி வருகின்றனர். இந்த முகாம்களில் உணவுக்காக மற்றும் பெயர்களை பதிவதற்காக நாள் கணக்கில் அகதிகள் காத்திருக்கின்றனர். சோமாலியா, எத்தியோப்பியா, கென்யா எல்லைகளில் உள்ள இடங்கள் அதிகளவில் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. இங்குள்ள மூன்று முகாம்களும் நிறைந்துவிட்டதால், முகாம்களுக்கு வெளியே ஏராளமான பிளாஸ்டிக் ஷீட்களால் மூடப்பட்ட கொட்டகைகளை அமைத்துக் கொண்டு தங்கும் அவலம் காணப்படுகிறது. இவ்வாறு கட்டர்ரஸ் கூறினார். ஏற்கனவே, சோமாலியாவில் ஒரு கோடி மக்கள் மனிதாபிமான அடிப்படையிலான உதவிகளை எதிர்பார்த்திருப்பதாக, உலக உணவு திட்டம் மதிப்பீடு செய்துள்ளது. மேலும், 20 லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்து பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டிருப்பதாக ஐ.நா.,விற்கான குழந்தைகள் நிதி அமைப்பு கணக்கிட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக