வியாழன், 28 ஜூலை, 2011

சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி நீதிமன்றத்தில் ஆஜர்


பெங்களூர் நீதிமன்றத்துக்கு புதன்கிழமை வந்த சசிகலா, இளவரசி.
பெங்களூர், ஜூலை 27: ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைக்காக சசிகலா, இளவரசி ஆகியோர் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். இதைத்தொடர்ந்து, அடுத்த விசாரணை ஆகஸ்ட் 1-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.தமிழக முதல்வர் ஜெயலலிதா மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்குவித்ததாக தொடரப்பட்ட வழக்கு, பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் புதன்கிழமை நீதிபதி மல்லிகார்ஜுனையா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 313-ன் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக ஆணை பிறக்கப்பட்டிருந்தது. தமிழக முதல்வர் ஜெயலலிதா இசட்-பிளஸ் பாதுகாப்பின் கீழ் இருப்பதால் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி வாக்குமூலம் பதிவு செய்ய முடியாது.எனவே, நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். மேலும் 313(5)-ன் கீழ் எழுத்து மூலமாக வாக்குமூலத்தை சமர்ப்பிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் பி.குமார், ஏற்கெனவே தாக்கல் செய்திருந்த 3 மனுக்கள் மீதான விசாரணை புதன்கிழமை நடந்தது.குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகாமல் எழுத்துப்பூர்வமாக கேள்வி பதில்களை வாக்குமூலமாக பதிவு செய்ய குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு 313(5)வகை செய்கிறது. இந்த சட்டப்பிரிவில் 2008-ல் திருத்தம் கொண்டுவரப்பட்டு, 2009 டிசம்பர் 31-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.313 சட்டப்பிரிவின் கீழ் நேரில் ஆஜராவதா, எழுத்து மூலமாக வாக்குமூலத்தை சமர்பிப்பதா என்பதை முடிவு செய்யும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு இல்லை. மாறாக குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு இருக்கிறது. 313(5)-ம் பிரிவு குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு அனுகூலமாக உருவாக்கப்பட்டுள்ளது.எனவே, 313(5)-ன் பிரிவின் கீழ் ஜெயலலிதாவின் வாக்குமூலத்தை பதிவு செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் பி.குமார் சுமார் 2 மணி நேரம் வாதாடினார். ஒருவேளை எழுத்துமூலமாக வாக்குமூலம் அளிக்க நீதிமன்றம் அனுமதிக்காத பட்சத்தில் 313(1) பிரிவின் கீழ் விடியோ கான்பரன்ஸ் மூலம் வாக்குமூலம் பதிவு செய்ய அனுமதிக்க கோரும் மனு மீதான விசாரணைக்கு மேலும் கால அவகாசம் அளிக்குமாறு வழக்கறிஞர் குமார் கேட்டுக்கொண்டார்.இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, அடுத்த விசாரணையை ஆகஸ்ட் 1-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஜெயலலிதாவின் தோழி சசிகலா, இளவரசி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். இதனால் நீதிமன்ற வளாகம் பரபரப்புடன் காணப்பட்டது.வளாகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வழக்கு விசாரணை முடியும் வரை நீதிமன்றத்தில் அமைதியாக அமர்ந்திருந்த சசிகலா, இளவரசி ஆகியோர் மதியம் 1.15 மணிக்கு புறப்பட்டுச் சென்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக