வெள்ளி, 22 ஜூலை, 2011

சிங்களப் பொலிஸ் கைதிகளின் பிரார்த்தனை ஒலி கேட்டேன்

6.
என்னை அந்த அறைக்குள் தள்ளிய புலி உறுப்பினன், உள்ளே இருந்தவர்களை நோக்கி, “டேய் வாற ஆளிட்டை ஏதாவது அப்புக்காத்து வேலை பாத்தியளோ, முதுகு முறியும்” என எச்சரித்துவிட்டு, கதவைக் வேகமாகப் பூட்டிவிட்டுச் சென்றுவிட்டான். அந்தச் சின்னஞ்சிறிய அறைக்குள் ஆறு ‘மனிதர்கள்’ இருந்தனர். அவர்களை மனிதர்கள் என்று அழைப்பதா அல்லது வேறு ஏதாவது பெயர் சொல்லி அழைப்பதா என என்னால் தீர்மானிக்க முடியவில்லை. அவ்வளது தூரம் அவர்களது தோற்றம் இருந்தது. புதிய விருந்தாளியான என்னை, அங்கிருந்த அனைவரும் ஆச்சரியத்துடனும் ஒருவகை நேச பாவத்துடனும் நோக்கினர். என்னை வரவேற்று உட்கார வைக்கும் நோக்குடன், நெருக்கமான தமது இருப்பிடங்களில் சிறிது இடம் ஏற்படுத்தி நகர்ந்து இருந்துகொண்டனர். ஆனால் எனக்கு உடனடியாக இருக்கத் தோன்றவில்லை. நின்ற நிலையிலேயே அவர்களையும் அந்த அறையையும் நோட்டமிட்டேன். அவர்கள் எல்லோருடைய தலைமயிரும் சொல்லி வைத்ததுபோல, போல ஒரேமாதிரி நீண்டு வளர்ந்திருந்தது. சிலருடைய முடி புளியங்காய் கணக்கில் ஒன்றுடன் ஒன்று பின்னித் தொங்கியது. பல மாதங்களாகச் சவரத்தைக் கண்டிராத முகத்தில,; ஒரு அடி நீளத்துக்கு தாடி வளர்ந்திருந்தது. இடுப்பில் அழுக்கடைந்த சாரமோ அல்லது வேஸ்டியும், உடலில் அதேபோல அழுக்கடைந்த மேல் சட்டையும் காணப்பட்டன. அனைவரது கண்களும் குழிவிழுந்து, ஒளியிழந்து, நம்பிக்கை வரட்சியுடன் காணப்பட்டன. (மேலும்) 2

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக