வியாழன், 7 ஜூலை, 2011

தயாநிதி மாறன் சிக்கியிருப்பது திமுக உள்ளூர மகிழ்ச்சியான

சென்னை: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் லேட்டஸ்டாக சிக்கியுள்ள தயாநிதி மாறன் குறித்து திமுக தரப்பிலிருந்து இதுவரை எந்த சத்தமும் இல்லை. இந்த விவகாரத்திலிருந்து விலகியிருக்க திமுக தலைவர் கருணாநிதி விரும்புவதாக தெரிகிறது.

எந்தவிதமான பதட்டமும் இல்லாமல் உள்ளது திமுக வட்டாரம். உண்மையைச் சொல்வதாக இருந்தால் தயாநிதி மாறன் சிக்கியிருப்பது திமுக முன்னணியினருக்கு உள்ளூர மகிழ்ச்சியான செய்தியாகவே இருக்கிறதாம்.

காரணம், இன்று கனிமொழி, ராசா உள்ளிட்டோர் சிறையில் அடைபட்டுக் கிடப்பதற்கும், திமுகவின் பெயர் கெட்டு நாறிப் போய்க் கிடப்பதற்கும், சட்டசபைத் தேர்தலில் திமுக பெரும் தோல்வியை சந்தித்து முடங்கிப் போய்க் கிடப்பதற்கும் தயாநிதிதான் மூல காரணம் என்பது திமுக முன்னணித் தலைவர்களின் ஒருமித்த கருத்தாகும். இதை திமுக தலைவர் கருணாநிதியிடமே அக்கட்சித் தலைவர்கள் பலர் நேரிலேயே சொல்லியுள்ளனர்.

இதை கருணாநிதியும் உணர்ந்துள்ளதாக தெரிகிறது. இதனால்தான் சமீப காலமாக, குறிப்பாக கனிமொழி கைதான பின்னர், தயாநிதியை அவர் ஓரம் கட்டி வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில்தான் சிபிஐ வாயால் தயாநிதி மாறனின் குட்டு அம்பலமாகியுள்ளது. இதனால் அவரது பதவிக்கும் ஆபத்து வந்துள்ளது. விரைவில் அவரும், அவரது சகோதரர் கலாநிதி மாறனும் விசாரிக்கப்படுவார்கள் என்ற தகவலும் உலா வர ஆரம்பித்துள்ளது.

இந்த நிலையில் தயாநிதி மாறன் விவகாரம் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் தீவிர ஆலோசனை நடத்தியுள்ளனர். இந்தக் கூட்டத்தில் பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட மூத்த தலைவர்களும் உடன் இருந்தனர். இந்த கூட்டத்தில் தயாநிதி மாறன் விவகாரம் தொடர்பாக திமுகவுடன் ஆலோசனை நடத்துவது என அக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாம்.

ஆனால் திமுக தரப்பிலோ எந்தவித சலனத்தையும் காணவில்லை. காங்கிரஸ் தரப்பிலிருந்து தங்களை அணுகினால் சட்டம் தனது கடமையைச் செய்யட்டும் என்று திமுக தலைமை கூறலாம் என்று பரபரப்பாக பேசப்படுகிறது. அதை விட முக்கியம், தயாநிதி மாறனையும், கலாநிதி மாறனையும் இப்போது யார் நினைத்தாலும் காப்பாற்ற முடியாது என்ற நிலை வந்து விட்டது. நாடாளுமன்றத்தில் தயாநிதி மாறனை குறி வைத்துக் குதற எதிர்க்கட்சிகள் தயாராக உள்ளன.

சிபிஐயே தயாநிதி மாறன் தவறு செய்துள்ளார் என்று கூறி விட்டதால், தயாநிதி மாறன் மீது வழக்கு தொடர தற்போது பிரதமர் அனுமதி தந்தாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பிரதமர் இந்த விஷயத்தில் மேலும் மேலும் கால தாமதம் செய்ய முடியாத நிலை. ஏற்கனவே ராசா விவகாரத்தால் கடந்த குளிர்காலக் கூட்டத் தொடர் முற்றிலும் முடங்கி செயலிழந்து போனது நினைவிருக்கலாம். தயாநிதியை வைத்து அப்படி ஒரு நிலை மீண்டும் வருவதை அரசு விரும்பாது என்று தெரிகிறது.

எனவே தயாநிதி மாறன் பதவி பறிபோவது நிச்சயமாகி விட்டது. அதற்கு முன்பு திமுகவிடம் ஒரு வார்த்தை பேச காங்கிரஸ் மேலிடம் விரும்புகிறது. திமுகவோ, தயாநிதி மாறன் மீது நடவடிக்கை வந்தால் என்ன, வராவிட்டால் என்ன என்ற விரக்தியான நிலையில் உள்ளது.

ஏற்கனவே, தயாநிதி மாறனுக்கு வந்த பிரச்சினையை அவரே சமாளித்துக் கொள்வார் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியிருந்தது நினைவிருக்கலாம். எனவே விரைவில் தயாநிதி மாறன் கதி என்ன என்பது தெளிவாகத் தெரிய வரும்.

English summary
As Daynanidhi Maran in deep trouble over Aircel issue in 2g Scam, his party DMK keeps silence over the issue. Already, many senior party leaders have blamed Dayanidhi Maran for all the causes facing the party and Kanimozhi. They have told Karunanidhi that, Dayanidhi Maran was responsible for the whole crisis DMK facing. So in this circumstance, it is interesting to watch what will be the decision of DMK on Dayanidhi.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக