புதன், 27 ஜூலை, 2011

திருப்பதி புராஜெக்ட்டை கைப்பற்ற டிசிஎஸ், விப்ரோ கடும் மோதல்

ஹைதராபாத்: திருப்பதி தேவஸ்தானத்தின் ஸ்ரீசேவை திட்டத்தை கைப்பற்ற டிசிஎஸ் மற்றும் விப்ரோ நிறுவனங்களுக்கிடையே கடும் மோதல் நிலவுகிறது. இந்த திட்டத்தை பெறுவதற்கு மொத்தம் மூன்று நிறுவனங்கள் மோதி வருகின்றன.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஸ்ரீசேவை திட்டத்தை செயல்படுத்தும் ஆர்டரைப் பெறுவதற்காகவே இந்த மோதல். பக்தர்களுக்குத் தேவையானதை செய்து தரும் பணிகளை முற்றிலும் கம்ப்யூட்டர் மயமாக்கப் போகிறது திருப்பதி தேவஸ்தானம். இதற்காகவே ஸ்ரீசேவை திட்டத்தை அது தொடங்கியுள்ளது.

தற்போது இ சேவா, இ அக்காமொடேஷன், இ சுதர்சனம், இ ஹுண்டி ஆகிய நான்கு சேவைகளை ஆன்லைன் மூலம் செய்து வருகிறது திருப்பதி தேவஸ்தானம். இதை விரிவுபடுத்தி லட்டு தருவது, மொட்டை போடுவது, அறைகள் ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு பணிகளையும் கம்ப்யூட்டர்மயாக்க அது திட்டமிட்டுள்ளது.

மொத்தம் 48 துறைகளை தானியங்கி மயமாக்கவும் அது முடிவு செய்துள்ளது. அனைத்தையும் கம்ப்யூட்டர்மயமாக்கி, இணைத்து ஒரே பிளாட்பாரத்தின் கீழ் கொண்டு வந்து பக்தர்களுக்கு சிறப்பான சேவையை செய்யும் விதமாக இந்த ஸ்ரீசேவை திட்டத்தை திருப்பதி தேவஸ்தானம் அறிமுகம் செய்யவுள்ளது.

இந்தப் பணிகளை மேற்கொள்ளும் ஆர்டரைப் பெற டிசிஎஸ், விப்ரோ மற்றும் இன்பினிட் கம்ப்யூட்டர் சொலூஷன்ஸ் ஆகிய மூன்று நிறுவனங்கள் இறுதிக் கட்ட மோதல் களத்திற்கு வந்துள்ளன. பல்வேறு நிறுவனங்கள் விண்ணப்பித்த போதிலும் இறுதிக் கட்ட பரிசீலனைக்கு இந்த மூன்று நிறுவனங்களும் முன்னேறி வந்துள்ளன. அனைத்துப் பணிகளையும் முடித்த பின்னர் டிசம்பர் மாதம் திட்டத்தை அமல்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக தேவஸ்தான தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இத்திட்டத்தை ரூ. 30 முதல் 35 கோடி மதிப்பில் செயல்படுத்த தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது. இது போக முதல் கட்டத்தில், ஆண்டுக்கு கூடுதலாக ரூ. 12 கோடி பராமரிப்பு செலவையும் அது திட்டமிட்டுள்ளது.

திருப்பதி கோவிலுக்கு வரலாறு காணாத அளவில் நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே போகிறது. இருப்பினும் இந்த பக்தர் கூட்டத்தை எந்தவித குழப்பமும், சிக்கலும் இல்லாத வகையில் படு தெளிவாக திட்டமிட்டு கையாண்டு அனைவரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறது தேவஸ்தானம்.

சபரிமலையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட மிகப் பெரிய கூட்ட நெரிசல் சம்பவத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தபோது திருப்பதி கோவிலில் செய்வதைப் போன்ற முறையான கூட்ட நெரிசல் நிர்வாகம் உள்ளிட்டவற்றை சபரிமலை நிர்வாகமும் கடைப்பிடிக்க வேண்டும் என்று அனைத்துத் தரப்பினரும் கூறினர் என்பது நினைவிருக்கலாம். அந்த அளவுக்கு எத்தனை லட்சம் பேர் கூடினாலும் நெரிசல் ஏற்படாத வகையில் அதை திறமையாக கையாண்டு வருகிறது தேவஸ்தானம்.

இதுபோக லட்டு விநியோகம் உள்ளிட்ட பல்வேறு பணிகளையும் அது திட்டமிட்டு திறம்பட செய்து வருகிறது. பக்தர்கள் வசதிக்காக தங்குமிடங்கள் உள்ளிட்ட வசதிகளைச் செய்து தரும் திருப்பதி தேவஸ்தானம், சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அலுவலகங்களை அமைத்து தரிசனத்திற்கு டிக்கெட் முன்பதிவு செய்வது உள்பட பக்தர்களுக்கு பல்வேறு விதங்களில் பேருதவியாகவும் இருந்து வருகிறது.

திருப்பதி கோவிலுக்கு தினசரி சராசரியாக 50,000 பேர் வந்து செல்வதாக தேவஸ்தானக் கணக்கு தெரிவிக்கிறது. திருவிழாக் காலங்களில் இது இரட்டிப்பாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக