புதன், 20 ஜூலை, 2011

போலி சாமியார்களை வளர்த்து விடும் ஊடகங்கள்

: நித்யானந்தா குரு பூர்ணிமா பூஜையை பெங்களூரில் உள்ள தனது பிடதி ஆசிரமத்தில் கடந்த 15ம் தேதி நடத்தினார். ஆடம்பரமாக நடந்த பூஜையில் நடிகை ரஞ்சிதா, ஏராளமான பெண் சீடர்கள், வெளிநாட்டு பெண்கள் பலர் கலந்து கொண்டனர். அப்போது, குண்டலினி சக்தி மூலம் புவி ஈர்ப்பு விசைக்கு எதிராக உங்கள் அனைவரையும் அந்தரத்தில் மிதக்க வைக்க போவதாக நித்யானந்தா அறிவித்தார்.

இதையடுத்து, நித்யானந்தா சிம்மாசனத்தில் அமர்ந்தபடி எல்லோரையும் குதிக்க சொன்னார். ரஞ்சிதா உட்பட பெண் சீடர்கள் மற்றும் வெளிநாட்டு பெண்கள் அனைவரும் உட்கார்ந்தபடியே குதிக்க தொடங்கினர். அந்தரத்தில் இருந்து கீழே விழுந்தால் அடிபட்டு விடுமோ என்ற பயத்தில் சிலர் ஹெல்மெட் அணிந்து கொண்டு குதித்தனர். ஆனால், கடைசி வரை யாரும் அந்தரத்தில் மிதக்கவில்லை.

இந்து மதத்தின் பெருமையை சீர் குலைக்கும் விதத்தில் நடந்து கொண்ட நித்யானந்தாவிற்கு இந்து மக்கள் கட்சி உட்பட ஏராளமான கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். பெண்களை இழிவுபடுத்தும் விதத்தில் நடந்துகொண்ட நித்தியானந்தாவிற்கு பெண்கள் அமைப்பினர் கடும் கட்டணம் தெரிவித்துள்ளனர். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் பொதுச்செயலாளர் வாசுகி:

இந்த மாதிரியான போலிச்சாமியார்கள் நித்யானந்தாவில்தான் தொடங்கியது இல்லை. நித்யானந்தாவுடன் முடிந்து விடவும் போவதில்லை. பெண்கள் மன உளைச்சலாலும், பல பிரச்னைகளாலும் சிக்கி தவிக்கின்றனர். ஏதாவது தீர்வு கிடைக்காதா என்பதற்காகதான் ஆன்மீகத்தை நோக்கி சாமியார்களிடம் செல்கின்றனர். பெண்களுக்கு நிம்மதியும், பிரச்னைகளுக்கு தீர்வும் அறிவியல் ரீதியில் கிடைப்பதில்லை. இதுபோன்ற போலிச்சாமியார்களை சில ஊடகங்கள்தான் வளர்த்து விடுகின்றன. கடவுள், ஆன்மீகம் போர்வையில் பெண்களை நம்ப வைத்து ஏமாற்றும் நித்யானந்தா போன்ற போலிச்சாமியார்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்.

தமிழக ஊராட்சி அரசாங்க பெண் தலைவர்கள் கூட்டமைப்பு ஆலோசகர் கிருஷ்ணவேணி: பெண்கள் பல துறைகளில் முன்னேறி வருகின்றனர். அப்படி இருக்கும்போது பெண்கள் சாமியார்களை நம்பி போகக்கூடாது. கடவுள் நம்பிக்கை இருப்பவர்கள் சாமியார்களை நம்ப வேண்டாம். தனி ஒருவர் நான்தான் கடவுள் என்று சொல்லும் போது பெண்கள் எப்படி நம்புகின்றனர்.

எந்த பிரச்னைகளையும் சாமியார்களால் தீர்த்து வைக்க முடியாது. நித்யானந்தா போன்ற போலிச்சாமியார்களின் முகமுடியை கிழிக்கும் முயற்சியில் பத்திரிகைகளும், மீடியாக்களும் தொடர்ந்து ஈடுபட வேண்டும். கடவுளின் பெயரை சொல்லி கொண்டு சுற்றிவரும் நித்யானந்தா போன்ற போலிச்சாமியார்களை கடுமையாக தண்டிக்க வேண்டும். இவ்வாறு பெண்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக