வியாழன், 28 ஜூலை, 2011

கடைந்தெடுத்த பொய்யை பெரியதாக வெளியிட்டிருக்கும் தினத்தந்தி

மாணவ-மாணவிகளை வேனில் கடத்திச்சென்று சமச்சீர் கல்விக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் 9 பேர் கைது” என்று தினத்தந்தி நாளிதழ் விரிவாக ஒரு பொய்ச் செய்தியை வெளியிட்டிருந்தது. இதையே மற்ற ஊடகங்கள் சிறு செய்தியாக, குழந்தைகளின் புகைப்படங்களோடு வெளியிட்டிருந்தன.
கடந்த சில நாட்களாக மாநிலம் முழுவதும் பு.மா.இ.முவினர் மாணவர்களை திரட்டி பாசிச ஜெயா அரசாங்கத்தைக் கண்டித்தும், சமச்சீர் பாடப்புத்தகங்களை உடனே வழங்கக் கோரியும் போராடி வருகின்றனர். இதில் சில இடங்களில் பெற்றோர்களும் கூட கலந்து கொண்டிருக்கின்றனர். இப்படி மாணவர்களும், பெற்றோர்களும் கலந்து கொள்வதனாலேயே போலீசு எந்தப் போராட்டத்தையும் விரும்பியபடி தடை செய்ய முடியவில்லை. மாணவர்களை கைது செய்தால் தமிழகம் முழுவதும் போராட்டம் முன்னிலும் பெரிதாக வெடிக்கும் என்று அவர்களுக்கு தெரியும்.
ஆனாலும் இனி போராட்டங்கள் எங்கும் நடக்கக் கூடாது என்று பாசிச ஜெயா தனது ரவுடி போலீசுக்கு உத்திரவிட்டுள்ளார். அதன்படியே போலீசு உருவாக்கிய இந்த பொய்ச் செய்தியை தினத்தந்தி வெளியிட்டிருக்கின்றது. மேலும் திருச்சி பு.மா.இ.முவினரை கைது செய்வதற்கென்றே உள்ளூர் அ.தி.மு.க பிரமுகர்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஆய்வாளர் உதவியுடன் பொய் மனு அளித்திருக்கின்றனர். அதற்காகவே ஒரு பெண் தோழரை உள்ளிட்டு எட்டு பு.மா.இ.மு தோழர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். எப்படியும் இந்தப் போராட்டத்தை சிதைக்க வேண்டுமென்பது காவல்துறையின் நோக்கமென்பதால் இந்த பொய்ச்செய்தியை உருவாக்குவது ஒன்றும் அவர்களுக்கு புதிதல்ல.
இந்த கடைந்தெடுத்த பொய்யை பெரியதாக வெளியிட்டிருக்கும் தினத்தந்தி, பு.மா.இ.மு மாணவர்கள் சென்னை பள்ளிக் கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்ட செய்தியை ஒரு குறுந்துணுக்கு செய்தியாக வெளியிட்டிருக்கிறது. அம்மா புகழ் பாடும் பஜனை கூட்டத்தில் நான்தான் முன்னணி என்று காட்டுவது தினத்தந்தியின் நோக்கம்.
இந்தச் செய்தி வந்த உடனேயே பு.மா.இ.மு தோழர்கள் சென்னை தினத்தந்தி அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். தினத்தந்தி செய்தி ஆசிரியரை சந்தித்து தங்களது மறுப்பை வெளியிடுமாறும் கோரினர். தினத்தந்தி ஆசிரியர் அவ்வாறே நாளை வெளியிடுவதாக கூறியதும் தோழர்கள் ஆர்ப்பாட்டத்தை முடித்துக் கொண்டு திரும்பினர்.
இங்கே அனைத்து ஊடகங்களுக்கும் பு.மா.இ.மு சார்பில் அளிக்கப்பட்ட மறுப்பு செய்தியை வெளியிடுகிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக