ஞாயிறு, 24 ஜூலை, 2011

மகள்களை வாழவைக்க மகனை ஆள் வைத்த கொன்ற தாய்


வேலூர் காகிதப்பட்டறை நைனியப்பன் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மனைவி சரளா. ஒரு மகனும், 3 மகள்கள் உள்ளனர்.
வேலூர் தனியார் மருத்துவமனையில் வெங்கடேஷ் அட்டண்டராக பணியாற்றினார். குடிப்பழக்கம் இருந்ததால் அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து மனைவி சரளா அதே மருத்துவமனையில் துப்புரவு தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார்.

நேற்று காலை வீட்டில் இருந்து புறப்பட்ட வெங்கடேஷ், பின்னர் பாலாற்று பகுதியில் ரத்த காயங்களுடன் சடலமாக கிடந்தார். அவர் எதற்காக சென்றார்? அவருடன் சென்றவர்கள் யார்? என்று விசாரணை நடந்தது.

நேற்று காலை வெங்கடேஷ் வீட்டிலிருந்து கிளம்பியபோது 3 பேர் உடன் சென்றுள்ளனர். இதனால் தெரிந்தவர்கள்தான் வெங்கடேசை கொலை செய்திருக்க வேண்டும் என போலீசார் நம்பினர்.

அப்போது அதே பகுதியைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவன் அண்ணாமலை மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவனை பிடித்து விசாரித்தனர். அப்போது கொலை செய்யப்பட்ட வெங்கடேஷின் தாய் பூஷ்ணம்மாள் கூறியதன் பேரில்தான் கூலிப்படையினர் கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

பூஷணம்மாள் சிஎம்சி மருத்துவமனையில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். அதனால்தான் வெங்கடேசுக்கு அதே மருத்துவமனையில் வேலை கிடைத்திருக்கிறது. தனது தாயாரிடம், வெங்கடேஷ் அடிக்கடி பணம் கேட்டு மிரட்டி இருக்கிறார்.

அப்போது தாயின் மார்பில் மிதித்து கொடுமைப்படுத்தி உள்ளார். வெங்கடேசனின் நடவடிக்கையால் மகள்களை பெண் கேட்டு எந்த மாப்பிள்ளை வீட்டாரும் வரவில்லை. இதனால் மகனை கொலை செய்ய பூஷணம்மாள் முடிவு செய்தார். அதே பகுதியை சேர்ந்த மாணவன் அண்ணாமலை மூலம் ரூ.50 ஆயிரத்துக்கு கூலிப்படை ஏற்பாடு செய்யப்பட்டது.

கூலிப்படையைச் சேர்ந்த பல்லு பிரகாஷ், சரத் மற்றும் அண்ணாமலை ஆகிய 3 பேரும் நேற்று வெங்கடேசை பாலாறு பாலத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு வெங்கடேசுக்கு குவார்ட்டரை ஊற்றிக்கொடுத்து குடிக்க வைத்துள்ளனர். போதையில் வெங்கடேஷ் மிதந்ததும் 3 பேரும் தாக்கி உள்ளனர். பின்னர் கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்து, உடலை அங்குள்ள புதரில் வீசிவிட்டு சென்றுவிட்டனர் என தெரியவந்தது.

இதையடுத்து பல்லு பிரகாஷ், சரத், மாணவன் அண்ணாமலை ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். கொலை செய்ய ஏவிய தாய் பூஷணம்மாளை போலீசார் தேடி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக