வெள்ளி, 29 ஜூலை, 2011

பாடசாலைகளை இன அடிப்படையில் வகைப்படுத்துவதை தவிர்க்க ஜனாதிபதி வலியுறுத்தல்

பாடசாலைகளை சிங்கள பாடசாலைகள், தமிழ் பாடசாலைகள், முஸ்லிம் பாடசாலைகள் என வகைப்படுத்தும் முறைமை மாற வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார். நேற்றுபுதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே ஜனாதிபதி இவ்வாறு வலியுறுத்தினார். அப்போது, தேசிய கல்வி ஆணைக்குழுவும் இதுபோன்ற சிபாரிசுகளை முன்வைத்திருப்பதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன சுட்டிக்காட்டினார். எனினும், பிரதமர் டி.எம். ஜயரட்ன கருத்துத் தெரிவிக்கையில், இது சிறந்த திட்டமாயினும் தற்போதுள்ள முறைமையின்கீழ் அதை மாற்றுவது கடினம் எனக் கூறினார். அப்போது ஜனாதிபதி பதிலளிக்கையில், இத்தகைய வகைப்படுத்தல் வரலாற்றுத் தவறு எனவும் அது திருத்தப்பட வேண்டும் எனவும் கூறினார். அத்துடன் , மாவட்டச் செயலாளர்களை (அரசாங்க அதிபர்கள்) இடமாற்றம் செய்யும்போது இன அடிப்படையிலன்றி பொதுவான இடமாற்ற கொள்கையொன்றை அமுல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென ஜனாதிபதி கூறியுள்ளார். தற்போது தமிழ் மாவட்டச் செயலாளர்கள் வடக்கிற்கும் முஸ்லிம் மாவட்டச் செயலாளர்கள் கிழக்கிற்கும் அனுப்பப்படும் வழக்கம் உள்ளதென ஜனாதிபதி கூறியுள்ளார். "இந்த வழக்கம் மாறவேண்டும். தேவையேற்பட்டால் சிங்கள அதிகாரிகள் யாழ்ப்பாணத்திலும் தமிழ் அதிகாரிகள் ஹம்பாந்தோட்டையிலும் பணியாற்கக்கூடியதாக இருக்க வேண்டும். அத்தகைய கொள்கையை நாம் பின்பற்ற வேண்டும்" என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக