வியாழன், 28 ஜூலை, 2011

ஜெயலலிதா, மோடிக்கு அல்கொய்தா கொலை மிரட்டல்!

சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா, குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு அல் கொய்தா அமைப்பினர் கொலை மிரட்டல் கடிதம் அனுப்பியுள்ளனர்.

மேலும் புகழ்பெற்ற கேரள கோயில்களான குருவாயூர் கிருஷ்ணர் கோயில் மற்றும் ஸ்ரீபத்மநாபசுவாமி கோயில்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்போவதாகவும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிரட்டல் விடுத்தவர்கள் தாங்கள் அல் கொய்தா அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனக் குறிப்பிட்டுள்ளனர். அதேநேரம் இந்தக் கடிதம் சென்னையிலிருந்து அனுப்பப்பட்டுள்ளது.

ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள அந்தக் கடிதம் குருவாயூர் இன்ஸ்பெக்டருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அந்தக் கடிதம் கிடைத்தவுடன் குருவாயூர் அருகே உள்ள ஸ்ரீகிருஷ்ணர் ஆலயத்துக்கு போலீஸ் அதிகாரிகள் விரைந்து சென்று சோதனை செய்தனர். கோயிலின் உள்ளேயும், கோயிலைச் சுற்றியும் வெடிகுண்டு நிபுணர்களின் உதவியுடன் சோதனை நடத்தப்பட்டது.

அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த மற்றொரு கோயில் புகழ்பெற்ற பத்மநாபசுவாமி ஆலயம். இங்குதான் 150 ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருந்த பொக்கிஷ அறைகளில் அரிய தங்க மற்றும் வைர நகைகள் இருந்தது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து இந்த கோயிலில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பக்தர்களும் சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

வெடிகுண்டு மிரட்டலையடுத்து இந்த கோயிலிலும் சோதனை நடத்தப்பட்டது.எனினும் சோதனையில் வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை.

இந்த கடிதம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

தமிழக போலீசாரும் இது தொடர்பில் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இருப்பிடத்துக்கு மேலும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு இந்த கொலைமிரட்டல் கடிதம் குறித்த விவரம் அனுப்பப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவருக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் அல் கொய்தா பெயரில் இயங்கும் நபர்கள் யார் என்ற விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக