புதன், 6 ஜூலை, 2011

சிறுவன் சுட்டுக் கொலை லெப்டினன்ட் கர்னலிடம் போலீசார் விசாரணை

சென்னை : ராணுவ குடியிருப்புக்குள் நுழைந்த சிறுவனை சுட்டுக் கொன்ற விவகாரத்தில் லெட்டினன்ட் கர்னலை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை தீவுத்திடல் அருகில் உள்ள ராணுவ குடியிருப்பு வளாகத்துக்குள் பாதாம் கொட்டை எடுக்கச் சென்ற சிறுவன் தில்சன் குண்டு பாய்ந்து இறந்தான். இதுகுறித்து கோட்டை போலீசார் வழக்குப்பதிவு விசாரித்தனர். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் ராணுவ குடியிருப்பில் உள்ள ராணுவ அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர்.
பின்னர் தில்சனுடன் சென்ற சிறுவர்கள் பிரவீன், சஞ்சய் ஆகியோரது வீட்டிற்கு நேற்று முன்தினம் மதியம் சிபிசிஐடி போலீசார் சென்றனர். அவர்களை சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். எப்படியெல்லாம் மரத்தில் ஏறி குடியிருப்புக்குள் நுழைந்தனர், சம்பவம் எப்படி நிகழ்ந்தது என்பது குறித்து சிறுவர்கள் 2 பேரும் செய்து காட்டினர். பின்னர் இரவு 9 மணி அளவில் சிபிசிஐடி போலீசார் அவர்களது வீட்டில் விட்டுச் சென்றனர். இந்நிலையில் சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் வெளியாகியுள்ளன. கடந்த 3ம் தேதி மதியம் சிறுவன் தில்சன் நண்பர்களுடன் ராணுவ குடியிருப்புக்குள் நுழைந்து மரத்தில் ஏறி பாதாம் கொட்டை பறித்து கொண்டிருந்தான். அப்போது லெப்டினன்ட் கர்னல் ஒருவர் வேகமாக டாடா சபாரி காரில் வந்துள்ளார். தில்சன் மரத்தில் ஏறி பாதாம் கொட்டை பறிப்பதை பார்த்ததும் துப்பாக்கியால் அவனது தலையில் சுட்டுள்ளார் என்பது சிபிசிஐடி போலீஸ் விசாரணையில் தெரிந்துள்ளது.இதையடுத்து சிபிசிஐடி போலீசார் அந்த லெப்டினன்ட் கர்னலிடம் விசாரணை நடத்த முடிவு செய்தனர். ஆனால் அவரை விசாரிக்க ராணுவ அதிகாரிகள் ஒத்துழைக்கவில்லை என்று தெரிகிறது. மேலும் அவர் சம்பவம் நடக்கும் நேரத்தில் ஊரில் இல்லை என்றும் ஸ்ரீபெரும்புதூர் சென்று விட்டதாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.இதைத்தொடர்ந்து போலீசார் அந்த லெப்டினன்ட் கர்னல் செல்போன் நம்பரை வைத்து விசாரணை நடத்தினர். அதில் தில்சன் சுடப்படும்போது அவர் சம்பவ இடத்தின் அருகில்தான் இருந்துள்ளார். பொதுமக்கள் பிரச்னை செய்தபோது தீவுத்திடல் அருகில் இருந்துள்ளார் என்பது தெரிந்தது. இந்நிலையில் அவரை காப்பாற்றுவதில் ராணுவ அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளதால் சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்துவதில் முட்டுக்கட்டை ஏற்பட்டது. இந்தநிலையில் நேற்று மாலையில் லெப்டினன்ட் கர்னல் அஜய்சிங்கை போலீசார் சிபிசிஐடி அலுவலகத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். குடிபோதையில்  இருந்தாரா?உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “தில்சன் சுடப்படுவதற்கு முன்பு அந்த ராணுவ அதிகாரி சிலருடன் சேர்ந்து மது அருந்தியுள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் அவர் வெளியில் புறப்படுவதற்காக காருக்கு அருகில் வந்துள்ளார். அப்போது சிறுவன் தில்சன் மரத்தின் மீது ஏறி பாதாம் கொட்டையை பறித்துக்கொண்டிருந்துள்ளான். போதையில் இருந்த ராணுவ அதிகாரி உடனே துப்பாக்கியை எடுத்து தில்சனை நோக்கி குறிபார்த்து சுட்டுள்ளார். இதில் அவனது தலையில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்துள்ளான் என்பது விசாரணையில் தெரிந்துள்ளது’’ என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக