புதன், 27 ஜூலை, 2011

பொட்டு சுரேஷ் விவகாரம் அழகிரியை பலவகையிலும் திகைக்க வைத்துக் கொண்டிருக்கிறது

.அழகிரியின் நிழலாக வலம்வந்து மதுரையின் பவர் புள்ளியாகத் திகழ்ந்தவர் பொட்டு சுரேஷ். ஆட்சி மாறியதும் அழகிரி தரப்பைக் குறிவைத்த மதுரை காவல்துறை, முதலில் அட்டாக் பாண்டியை நிலமோசடிப் புகாரில் தூக்கியது. அடுத்து போலீஸ் குறிவைத்தது பொட்டு சுரேஷைத்தான்.

19-ந் தேதி போலீஸால் பொறிவைத்துப் பிடிக்கப்பட்ட பொட்டு சுரேஷ், அவரோடு கைதான மதுரை புறநகர் மா.செ.தளபதி, கொடி சந்திரசேகர் ஆகிய தி.மு.க. புள்ளிகளோடு இப்போது பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

இந்த நிலையில் பொட்டு சுரேஷை 10 நாட்கள் போலீஸ் கஸ்டடியில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என போலீஸ்தரப்பு கோர்ட்டில் மனு போட்டதோடு, இதற்காக பாளையங்கோட்டையில் இருந்த பொட்டு சுரேஷையும் மதுரை நீதிமன்றத்துக்கு கொண்டுவந்தது. அப்போது போலீஸ் வேனில் இருந்த எஸ்கார்டு போலீஸ்காரர் ஒருவரின் செல்போனை வாங்கிய பொட்டு, அதிலிருந்து அழகிரியைத் தொடர்பு கொண்டார்.

எடுத்த எடுப்பிலேயே "என்னண்ணே நினைச்சிக்கிட்டு இருக்கீங்க. உங்களுக்காக ஜெயிலுக்குப் போயிருக்கேன். நீங்க என்னைக் கைது பண்ணும் நேரத்திலேயே எஸ்.பி.ஆபீஸுக்கு வந்திருக்கலாம். அந்தப் பக்கம் தலையைக் கூடக் காட்டலை. சரி ஜெயிலுக்கு வந்தீங்கள்ல. அப்படி என்ன அவசரம்? பத்தே நிமி ஷத்தில் தலையைக் காட்டிட்டு ஓடிட்டீங்க. அதுக்கப்புறம் நான் இருக்கேனா செத்தேனான்னு கூட நீங்க விசாரிக்கலை.

இப்ப என்னை கஸ்டடி எடுக்கறதுக்காக கோர்ட்டுக்குக் கொண்டுவந்திருக்காங்க. நீங்க வந்து என்னைப் பார்க்க வேண் டாமா? நீங்க என்னைப் பார்க்க கோர்ட்டுக்கு வந்தாதானே எனக்கு மரியாதையா இருக்கும். இல்லேன்னா என்னைக் கட்சிக்காரனும் மதிக்கமாட்டான். போலீஸ்காரனும் மதிக்கமாட்டான். உங்களை எவன் எவனோ தப்புத்தப்பா திசைதிருப்பிக்கிட்டு இருக்கான்ங்க. என்னைக் கோர்ட்டுக்குக் கொண்டுவரும் போதெல்லாம் நீங்க வராட்டி ஒரு நாயும் என்னை மதிக்காது. என்னைப் பார்க்க தினமும் நீங்க வரணும்ணே. எவன் சொன்னாலும் என்னை நீங்க தவிர்க்கக் கூடாது. தவிர்த்தா பிறகு நீங்கதான் வருத்தப்பட வேண்டியிருக்கும்' என மிரட்டலாகப் பேச, இது அழகிரியை ஏகத்துக்கும் கோபப்பட வைத்திருக்கிறது.

இது குறித்து தன்னை சந்தித்த கட்சிப் புள்ளிகளிடமும் மாஜி மந்திரிகளிடமும் அழகிரியே சொல்லிவருத்தப்பட.. பதிலுக்கு அவர்கள் "அண்ணே, பொட்டுவைப் பத்தி இப்பயாவது புரிஞ்சிக்கிட்டீங்களே. நாங்க எல்லாருமே அவரால் படாதபாடு பட்டோம்' என புகார் வாசித்திருக்கிறார்கள்.

அழகிரியுடன் நெருக்கம் பாராட்டிவரும் அந்த தி.மு.க. பிரமுகரிடம் பேசிய போது, எந்தெந்த கட்சிப் புள்ளிகள் அழகிரியிடம் பொட்டுவைப் பற்றி புலம்பித் தீர்த்தார்கள் என்ற விபரம் கிடைத்தது.

அவர் நம்மிடம் ""மதுரைக்காரங்க மட்டுமல்ல, மற்ற மாவட்டங்கள்ல இருக்கும் எங்கக் கட்சிப் பிரமுகர்களும் இப்ப அழகிரியண்ணனை எந்த தடையும் இல்லாம பார்த்துப் பேசறாங்க. இவங்க எல்லோருமே பொட்டுவின் கடந்தகால நடத்தைப் பற்றி கொட்டித் தீர்க்கறாங்க. குறிப்பா சொல்லணும்னா மாஜி மந்திரி ஐ.பி. இருக்காரே, அவர்... "என்னை ஒரு மந்திரியாவா பொட்டு நடத்தினார். படுகேவலமா நடத்தினார். என்னை சுதந்திரமா செயல்பட அவர் விடவில்லை.. உங்கபேரைச் சொல்லியே 100 தடவைக்கு மேல் என்னை மிரட்டி பல வேலைகளைச் சாதிச்சிருக்கார். தலைமைச் செயலகத்தில் இருக்கும் என் அறைக்கு வந்து என் சீட்டில் உட்கார்ந்துக்குவார்.

இதைப் பார்க்கும் மற்ற அதிகாரிகளும் பணியாளர்களும் சங்கடத்தில் நெளிவாங்க. அப்ப மனரீதியா எவ்வளவு சங்கடப்பட்டிருப்பேன் தெரியுமா? ' என்றெல்லாம் தன் கசப்பான அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார். இதைக் கேட்டு திகைத்துப்போன அழகிரி யண்ணன், "இதை ஏன் அப்பவே நீங்க என்கிட்ட சொல்லலை'ன்னு கேட்க, அதுக்கு ஐ.பி., "அடப் போங்கண்ணே... நிலைமை உங்கக்கிட்ட சொல்லும்படியா இருந்தது. பொட்டு அனுமதியோடதானே நாங்க உங்களைப் பார்க்கமுடிந்தது. அப்படியே உங்கக்கிட்ட நாங்க எதைசொல்ல ஆரம்பிச்சாலும் பொட்டுக்கிட்ட பேசுங்கன்னு சொல்லிடுவீங்க. இந்த நிலையில் நாங்க என்ன பண்ணமுடியும்?'னு கேட்டார்.

துணை மேயர் மன்னன் இருக்காரே அவர், "கடந்த 5 வருடத்தில் நான் நிம்மதியா தூங்கியது கூட கிடையாது. அந்த அளவுக்கு பொட்டு என்னையெல்லாம் பாடாப்படுத்தினார். வேலுச்சாமியை தூக்கிட்டு என்னை மாநகர் மா.செ.வா ஆக்கணும்னு சொன்னீங்க. ஆனா பொட்டு என்ன செஞ்சார் தெரியுமா? அந்த மூர்த்திக் கிட்ட காசை வாங்கிக்கிட்டு அவரை உட்காரவச்சார். என்னை அந்த இடத்துக்கு வரவிடவே இல்லை. கொஞ்சம் விட்டிருந்தா என் துணை மேயர் பதவியைக்கூட அவர் பிடுங்கி இருப்பார். இத்தனைக்கும் அந்த பொட்டு ஆரம்பத்தில் என்கிட்ட எடுபிடியா இருந்தவர். பலமுறை அடி-உதை கூட என்கிட்ட வாங்கியிருக்கார். அதையெல்லாம் மனசில் வைச்சிக்கிட்டு நீங்க கொடுத்த இடத்தால், அவர் எங்களை எல்லாம் அடிமை மாதிரி நடத்தினார்'னு கண்கலங்கினார்.

மாவட்டம் மூர்த்தி இருக்காரே அவரும் தன் பங்கிற்கு பொட்டின் லீலைகளை புட்டுப் புட்டு வச்சார். "பாத்ரூம் போறதுன்னாக்கூட அவர்ட்ட கேட்டுத்தான் போகணும் என்பது மாதிரி என்னை ஆக்கிட்டார். நின்னா தப்பு உட்கார்ந்தா தப்புன்னு மிரட்டுவார். உங்கக்கிட்ட சொல்லி என் மா.செ.பதவியைப் பிடுங்கிடுவேன்னு மிரட்டுவார். இப்படிப்பட்ட அரக்கத்தனமான ஒரு ஆளை நான் பார்த்ததில்லை'ன்னு சொல்ல, முன்னாள் மேயர் குழந்தைவேலுவோ "நான் வழக்கறிஞருக்கு படித்தவன், மேயரா இருந்தவன். அப்படிப்பட்ட என்னை வாய்யா குழந்தைவேலுன்னு கட்சிக்காரங்க முன்னால் கூப்பிட்டு, வா, போன்னு ஒருமை யில் பேசி அசிங்கப் படுத்துவார். அவ ருக்கு கட்சி வரலாறு தெரியுமா? அண் ணாவைப் பற்றியோ பெரியாரைப் பற்றி யோ தலைவரைப் பற்றியோ என்ன தெரியும். உங்க பேரை மட்டும் மந்திரமா உச்சரிச்சி எங்க எல் லோரையும் அடிமை யா ஆக்கிட்டார்.

இந்த 5 ஆண்டு காலத்தில் இப்ப தான் உங்கக் கிட்ட மனம் விட்டு நாலுவார்த் தை பேச முடி யுது'ன்னு சொன் னார். இப்படி சூடாமணி, போஸ் முத் தையா, உதயகுமார் மா.செ. கருப்ப சாமிப் பாண்டியன், மாஜி மைதீன்கான் மா.செ.மாலைராஜான்னு ஒரு பெரிய டீமே பொட்டு சுரேஷால் தாங்கள் பட்ட அவமானங்களைப் பட்டியல் போட்டு அழகிரி யண்ணனையே திகைக்க வச்சிட் டாங்க. இனி பொட்டு சுரேஷை எப்படி ஹேண்டில் பண்றது என்பதுதான் அண்ணனின் ஒரே யோசனை. பொட்டு சுரேஷால் தன் நிம்மதியை அவர் முழுசா இழந்துட்டார்'' என்றார் விரிவாகவே.

இந்த நிலையில் 25-ந்தேதி திங்கட்கிழமை மதியம் பொட்டு சுரேசின் ஜாமீன் மனு, நீதிபதி முத்துக்குமார் முன் விசாரணைக்கு வந்தது. இதில் பொட்டுக்கு சாதகமான எதுவும் நடக்கலாம் எனக் கருதிய மதுரை காவல்துறையினர், பொட்டு மீது மாணிக்கம் செட்டியார் என்பவரின் மிரட்டல் புகாரை சனிக் கிழமை இரவு பதிவு செய்து எஃப்.ஐ. ஆர்.போட்டனர். ஏற்கனவே காவல்துறை அதிகாரிகளை தேர்தல் நேரத்தில் மிரட்டியது உள்ளிட்ட புகார்களையும் தூசிதட்டி, தனி ஃபைல்போட்டு குண்டாஸ் ஆக்டில் வழக்கைப் பரபரப்பாகப் பதிவுசெய்தனர். இதைத் தொடர்ந்து பொட்டின் ஜாமீன் வழக்கு கோர்ட்டில் வந்தபோது, ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதி மன்றம்.
இந்த நிலையில் திங்கட்கிழமை பிற்பகல், பொட்டு வீட்டுக்கு சென்ற போலீஸ் டீம், வீடு பூட்டியிருந்ததால் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட அறிவிப்பை, வீட்டுக்கதவில் ஒட்டிவிட்டுச் சென்றனர்.
இத்தனை நாள் தன் காலைச் சுற்றிக்கொண்டிருந்தது, தன்னை நோக்கி சீறத் தொடங்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ள அழகிரி, பொட்டு மீது போடப்பட்ட குண்டாஸை உடைக்கலாமா? வேண் டாமா? -என யோசித்துக் கொண்டிருக்கிறார்.

-முகில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக