வியாழன், 7 ஜூலை, 2011

க்யூ பிராஞ்ச் போலீஸ்காரர்களான கார்த்தி, பாபு இருவரும் செய்யும் கொடுமை தாங்கவே

விழுப்புரம் அகதிகளின் கண்ணீர்க் குரல்

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள கீழ்புத்துப்பட்டு கிராமத்​தில் 468 இலங்கை அகதிகள் வசிக்கின்றனர். கடந்த 30-ம் தேதி இரவு 9 மணிக்கு, இந்தக் குடியிருப்பில் மின் தடை ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த முதலியார் குப்பத்தைச் சேர்ந்த 21 வயது வாலிபர் சுகுமார், வாசலில் இருந்த ஒரு சின்னக் குழந்தையைத் திடீரெனத் தூக்கிக்கொண்டு கடற்கரையை நோக்கி ஓடி இருக்கிறார்.

நல்ல வேளையாக அதை கவனித்துவிட்ட அகதிகள், விடாமல் பின்னே துரத்திப் போனார்கள். இருள் சூழ்ந்து இருந்ததால், சுகுமார் எங்கே போனார் என்று கண்டுபிடிக்க முடியாமல் தடுமாறி இருக்கிறார்கள். நீண்ட நேரத் தேடுதலுக்குப் பிறகு ஒரு புதருக்குள் சுகுமார் இருப்பதாகத் தெரிய... சத்தம் போடாமல் நெருங்கி இருக்கிறார்கள். அந்தப் புதருக்குள் பார்த்தவர்கள் அதிர்ச்சியில் திகில் அடைந்துவிட்டார்கள்.

சுதாகர் நிர்வாணமாக இருக்க, குழந்தையின் ஆடைகளைக் கிழித்து மார்பு, முகம், காதுகளில் கடித்து வைத்து இருக்கிறான். அவனைப் பிடித்து இழுத்து வருவதற்குள், முதலியார் குப்பம் மக்களும் பஞ்சாயத்துத் தலைவரும் அங்கு வந்து சேர்ந்தனர்.

'இவனை நாளை ஒப்படைக்கிறேன்’ எனக் கூறி, சுகுமாரை அழைத்துச் சென்றுவிட்டார் பஞ்சாயத்துத் தலைவர். கோட்டக்குப்பம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து குழந்தையை மருத்துவமனையில் சிகிச்சைக்​காக சேர்த்தனர்.

மறுநாள் சுகுமார் தலைமறைவு ஆகிவிட்டான் என்று தகவல் வரவே, ஆத்திரம் அடைந்த அகதிகள் போராட்டத்தில் இறங்கினார்கள். டி.எஸ்.பி. சிவ​நேசன், திண்டிவனம் சப்-கலெக்டர் சண்முகம் ஆகியோர், 'குழந்தையின் மருத்துவச் செலவை அரசு ஏற்றுக்கொள்ளும், உங்களுக்கு அரசு வழக்கறிஞர்களும் ஏற்பாடு செய்து தருகிறோம்’ என வாக்குறுதி கொடுத்தனர். ஆனால், அவர்கள் போராட்டத்தில் இருந்து பின்வாங்கவில்லை. புதுச்சேரியில் சுகுமார் பிடிபட்ட பிறகே போராட்டம் முடிவுக்கு வந்​துள்ளது.

கீழ்புத்துப்பட்டு முகாமில் உள்ள சிலரிடம் பேசி​னோம். ''சுகுமார் எங்கள் பிள்ளையைக் கொடுமைப்​படுத்தியதைப்பற்றிக் கேட்கிறீர்கள். இதுபோல் எங்களுக்குத் தினம் தினம் நிறையப் பிரச்னைகள். எங்களுக்கு உதவி செய்யவும், ஆதரவு கொடுக்கவும் யாருமே கிடையாது. க்யூ பிராஞ்ச் போலீஸ்காரர்களான கார்த்தி, பாபு இருவரும் செய்யும் கொடுமை தாங்கவே முடியவில்லை. மாதத்துக்கு மூன்று அல்லது நான்கு தடவை கணக்கு எடுப்பாங்க. கொளுத்தும் வெயிலில் கடற்கரை மண்ணில் சின்னப் பசங்க முதற்கொண்டு பெரியவங்களையும் மணிக்கணக்கில் உட்​கார வைப்​பாங்க. திடீர்னு ராத்திரி 12 மணிக்கு வந்து எல்லாத்தையும் தட்டிஎழுப்பி, கணக்கு எடுக்கணும்னு சொல்வாங்க. பொம்பளைங்களை அசிங்க அசிங்கமாப் பேசுவாங்க. நாங்க கூலி வேலைக்குத்தான் போறோம். காலையில் 6 மணியில் இருந்து சாயங்காலம் 6 வரைக்கும்தான் வெளியே இருக்கணும்னு சொல்றாங்க. சில இடங்களில் ராத்திரி 8 மணி வரைக்கும் வேலை இருக்கும்னு சொன்னா, கேட்க மாட்டாங்க.

வெளியூர் போகணும்னா, க்யூ பிராஞ்ச் போலீஸ்கிட்ட லீவு லெட்டர் கொடுக்கணும். அவங்க எங்களை விசாரிச்சு, கையெழுத்துப் போட்டுத் தருவாங்க. அதை, திண்டிவனம் ஆர்.ஐ-கிட்ட கொடுத்து அனுமதி வாங்கணும். உடனே கையெழுத்து வாங்கிட முடியாது. லீவு லெட்டர்ல கையெழுத்து வாங்கவே ரெண்டு நாள் ஆகிடும். அதுக்குப் பிறகுதான் நாங்க போக முடியும். தலைவர்கள் யாராவது இந்தப் பக்கமோ அல்லது புதுச்சேரிக்கோ வந்தால்கூட, அன்று முழுவதும் வீட்டைவிட்டு நாங்க வெளியே வரக் கூடாது. ஏன்னு கேட்டா, நாங்க தீவிரவாதின்னு சொல்றாங்க. அகதி மக்களைத் தவிர, வேறு யாருடனும் பேசக் கூடாதுன்னும் தடை போட்டு இருக்காங்க.

எங்க பசங்க பத்தாவது வகுப்பில் 490 மார்க் எடுத்து இருந்தாலும், பிளஸ் ஒன் படிக்க ஸீட் தர மறுக்கிறாங்க. 'அட்ரா’ என்ற அமைப்பு அகதிகளுக்கு உதவி செய்வதைக் கேள்விப்பட்டு, அவர்களிடம் எங்கள் குறைகளைச் சொன்னோம். அவங்க, க்யூ பிராஞ்ச் போலீஸை எங்ககிட்ட மன்னிப்பு கேட்கவெச்சாங்க. அதுக்குப் பிறகு, அந்த அமைப்புக்குத் தகவல் கொடுத்தவரை, அழைச்சிட்டுப் போய் ஒரு வாரம் வெச்சிருந்து அடிச்சுக் கொடுமைப்படுத்தி அனுப்பினாங்க...'' எனக் கண்ணீர் வடித்தனர்.

''இலங்கையில் நாங்க வசதியாக, தலை நிமிர்ந்து இருந்தோம். இப்போ, இங்கே கூலி வேலை செஞ்சு கஷ்டப்படுறோம். தமிழன்கிட்டேயே அடி வாங்கும்போது, எங்க இதயம் வலிக்குது. இதுக்கு பதிலா, அங்கேயே சிங்களவன் காலால் மிதிபட்டு செத்து இருக்கலாம்னு தோணுது. இப்படி நினைச்சு பலர் தற்கொலைக்கு முயற்சி செய்திருக்காங்க. அவங்களை சமாதானம் செய்துதான் காப்பாற்றி இருக்கிறோம்...'' என்று அழுதார்கள்.

இது பற்றி, விழுப்புரம் கலெக்டர் மணி

«​மகலையிடம் பேசினோம். ''நான் இன்னும் அந்தப் பகுதிக்குச் செல்லவில்லை. ஒரு வாரத்தில் பார்த்துவிட்டு வந்து சொல்கிறேன்!'' என்றார்.

ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் தமிழர்கள், இங்கே இருக்கும் அகதிகளுக்காகவும் பேசலாமே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக