செவ்வாய், 5 ஜூலை, 2011

போதையில் இருந்த ராணுவ அதிகாரி?சென்னை சிறுவன் தில்ஷனைக் கொடூரமாக சுட்டுக் கொன்றது

சென்னை சிறுவன் தில்ஷனை கொடூரமாக துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது போதையில் இருந்த ராணுவ அதிகாரி என்று கூறப்படுகிறது. அந்த அதிகாரி யார் என்பதை போலீஸார் நெருங்கி விட்டதாகவும் தெரிகிறது. ஆனால் ராணுவம் ஒத்துழைப்பு கொடுக்காமல் அந்த அதிகாரியைக் காக்க முயல்வதாக பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பாதுகாப்புத்துறை உயர் அதிகாரிகளை அணுக தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழக மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது சென்னை தீவுத் திடல் அருகே உள்ள ராணுவக் குடியிருப்பு வளாகத்திற்குள் 13 வயது சிறுவன் தில்ஷன் கொடூரமாக துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்.

யார் சுட்டது என்பதே தெரியவில்லை இந்த நிமிடம் வரை. சுட்டது ராணுவத் தரப்பைச் சேர்ந்த ஒருவர்தான் என்பது தெளிவாகத் தெரிந்தும் கூட அதை ஏற்றுக் கொள்ள ராணுவம் தொடர்ந்து விடாப்பிடியாக மறுத்து வருகிறது. ராணுவ வீரர்கள் சுடவில்லை என்று ராணுவத்தினர் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், தில்ஷனை சுட்டுக் கொடூரமாகக் கொன்றது ஒரு ராணுவ அதிகாரி என்ற பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது. சம்பவம் நடந்தபோது தில்ஷனுடன் இருந்த சிறுவன் பிரவீன் மூலம் இந்தத் தகவல் கிடைத்துள்ளது.

தில்ஷனுடன், அவனது நண்பர்கள் சஞ்சய் மற்றும் பிரவீன் ஆகியோரும் மரத்திலிருந்து கீழே விழுந்து கிடந்த பழங்களைப் பொறுக்க சென்றிருந்தனர்.

அப்போதுதான் இந்த துயரச் சம்பவம் நடந்தது. அதுகுறித்து பிரவீன் கூறுகையில்,

சம்பவம் நடந்தபோது தில்ஷன் மரத்தில் ஏறி வாதாம் காய்களை பறித்து போட்டுக்கொண்டிருந்தான். அப்போது காரில் ஒருவர் வந்து இறங்கினார். அவர் எங்களை பார்த்து சத்தம் போட்டார். உடனே நானும், சஞ்சயும் மதில் சுவரை தாண்டி குதித்தோம். மரத்தில் இருந்த தில்சனும் அவசரமாக கீழே இறங்கினான்.

பின்னர் அவன் மதில் சுவரை தாண்டி குதிக்க முற்பட்டபோதுதான் என்று துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது. அதற்குள் தில்ஷனின் தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்து அவன் ரத்த வெள்ளத்தில் சாய்ந்துவிட்டான்.

காரில் வந்து சத்தம் போட்டவர்தான் அவனை சுட்டுவிட்டார். பின்னர் அவர் வேகமாக காரில் ஏறி போய்விட்டார். அதன்பிறகு நாங்கள் ஓடிச்சென்று தில்ஷனின் தாயாரை அழைத்து வந்தோம் என்றான்.

காரில் வந்த நபரை பிரவீனும், சஞ்சயும் நேரில் பார்த்துள்ளனர். அந்த நபர் ராணுவ அதிகாரி என்று தெரிகிறது. தில்ஷன் சுடப்பட்ட இடத்தில் உள்ள வீடுகளில் ஒன்றில்தான் அவர் வசித்து வருகிறார்.

போலீஸாருக்கும் கூட அந்த இடத்தில் உள்ள நான்கு வீடுகளில் வசிக்கும் அதிகாரிகள் மீதுதான் சந்தேகம் வலுவாக உள்ளது.

அந்த நான்கு அதிகாரிகளையும் நேரில் விசாரிக்க போலீஸார் கடுமையாக முயன்றும் இதுவரை அனுமதி கொடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. அதேபோல அந்த நான்கு அதிகாரிகளையும், சிறுவர்கள் சஞ்சய் மற்றும் பிரவீன் ஆகியோர் முன்புநிறுத்தி அடையாளம் காட்டும் அணிவகுப்பை நடத்தவும் போலீஸார் முயன்று வருகினறனர். அதற்கும் அனுமதி கிடைக்கவில்லை என்று தெரிகிறது. அப்படிச் செய்தால் குற்றவாளியை எளிதாக கண்டுபிடித்து விட முடியும்.

ஆனால் அது நடந்து விடாமல் ராணுவத் தரப்பில் முட்டுக்கட்டை போட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தில்ஷனை சுட்டுக் கொன்ற துப்பாக்கியிலிருந்து பாய்ந்து வந்த குண்டு தலையைத் துளைத்துக் கொண்டு வெளியே போய் விட்டது. அந்த அளவுக்கு சக்தி வாய்ந்த துப்பாக்கியின் மூலம் தில்ஷனின் உயிரைக் குடித்துள்ளார் அந்த கொலைகார அதிகாரி. சம்பவம் நடந்தபோது அந்த நபர் குடிபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

கிட்டத்தட்ட 20 அடி தூரத்திலிருந்து சுட்டும் கூட சிறுவனின் தலையை துளைத்துக் கொண்டு அந்த குண்டு வெளியேறியிருக்கிறது என்றால் எந்த அளவுக்கு அது நவீனமானது என்பது தெரிய வருகிறது.

தற்போது அந்த துப்பாக்கித் தோட்டாவை ராணுவத்தினரே கைப்பற்றி போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

போலீஸாருக்கு ராணுவத்தினர் முழு ஒத்துழைப்பு அளிக்காத நிலையே தற்போது வரை உள்ளது. அவர்கள் ஒத்துழைத்திருந்தால் இந்த நேரத்தில் குற்றவாளியை எளிதாகப் பிடித்திருக்கலாம். ஆனால், அந்த நபரைக் காப்பாற்ற ராணுவத்தினர் முயல்வதாகத் தெரிகிறது. மேலும், சம்பந்தப்பட்ட குற்றவாளி இன்னேரம் சென்னையை விட்டு வட மாநிலத்திற்குப் போயிருக்கவும் வாய்ப்பு உள்ளதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.

ஆனால் சிபிசிஐடி போலீஸார் குற்றவாளியைப் பிடிப்பதில் படு தீவிரமாக உள்ளனர். அவர்களை விட முதல்வர் ஜெயலலிதா தீவிரமாக உள்ளார். கொல்லப்பட்ட சிறுவன் படு ஏழ்மையான குடும்பப் பின்னணியைச் சேர்ந்தவன். அவனது குடும்பத்தினரும், உறவினர்களும், அந்தப் பகுதியில் வசிக்கும் குடிசைவாழ் மக்களும் கடும் கொதிப்புடன் உள்ளனர்.

எனவே குற்றவாளியை ஒப்படைக்காமல் காப்பாற்ற ராணுவம் திட்டமிடுமானால் சென்னையில் பெரும் போராட்டம் வெடிக்கும், சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படலாம் என்று கருதப்படுகிறது.

English summary
An army officer is suspected for the killing of 13 yr old Chennai boy Dilshan. Army officers are not cooperating with the CBCID probe. So TN govt is mulling to approach Defence high command.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக