புதன், 6 ஜூலை, 2011

மன்னரின் சொத்துக்கள் நாட்டுக்கே உடமையாக்கப்படவேண்டும்

கொச்சி:""பத்மநாப சுவாமி கோவில் பாதாள அறைகளை பார்வையிட்டு கணக்கெடுக்க சென்றபோது, நான் அங்கு பார்த்த காட்சி நம்ப முடியாத அனுபவமாகவும், கனவுலகம் போலவும் இருந்தது,'' என, ஓய்வு பெற்ற நீதிபதி சி.எஸ்.ராஜன் தெரிவித்தார்.

கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில், உலக பிரசித்தி பெற்ற பத்மநாப சுவாமி கோவிலின் பாதாள அறைகளை திறந்து அதில் கணக்கெடுத்து அறிக்கை சமர்பிக்குமாறு சுப்ரீம் கோர்ட், ஏழு பேர் கொண்ட உறுப்பினர்கள் அடங்கிய கமிட்டியை அமைத்தது. அக்கமிட்டி கோவிலில், 27ம் தேதி முதல் கணக்கெடுக்கும் பணிகளை துவக்கியது.கோவிலுக்குள் இருந்த ஆறு பாதாள அறைகளில், ஐந்து அறைகளை அக்கமிட்டியினர் திறந்து பார்த்து கணக்கெடுப்பு நடத்தினர். ஆறாவது அறையை திறக்க முடியாமல் போனதால், அவ்வறையை திறப்பது குறித்து நாளை மறுதினம் ஆலோசித்து முடிவெடுக்க உள்ளனர். அக்கமிட்டியில் மன்னர் பரம்பரையைச் சேர்ந்தவரும், நீதிபதியுமான சி.எஸ்.ராஜன் மற்றும் எம்.என்.கிருஷ்ணன் ஆகியோரும் அடங்குவர்.

தான் பார்த்த காட்சிகள் குறித்து நீதிபதி ராஜன் கூறியதாவது:கோவிலுக்குள் பாதாள அறைகளுக்கு செல்லும் கதவை திறந்ததும், பார்ப்போரை பிரமிக்க வைக்கும் மிக பெரிய கருங்கற்கள் கொண்டு பாதை மறைக்கப்பட்டிருந்தது.அக்கருங்கற்களை மிகவும் பலசாலிகளான எட்டு பேர் கொண்ட குழு மிகவும் பாடுபட்டு அகற்றியது. கீழே அறைகள் மிகவும் சிறியதாக இருந்தன. கீழ்பகுதியில் நான்கைந்து பேர் மட்டுமே நிற்பதற்குரிய இடமே இருந்தது. அவ்வறைகளில் தேக்கினாலான நிறைய பெட்டிகள் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.அப்பெட்டிகளில் தான் தங்கம், வெள்ளி, ரத்தினம் மற்றும் விலை மதிக்க முடியாத பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. அவற்றை பார்த்ததும் வியப்படைந்தேன். நம்ப முடியாத மாயலோகத்தில் இருப்பதை போல் உணர்ந்தேன். அங்கிருந்த விலை மதிக்க முடியாத பொக்கிஷங்கள் அனைத்தும் காலம் காலமாக திருவிதாங்கூர் மன்னர் பரம்பரையினர் பத்மநாப சுவாமிக்கு காணிக்கையாக அளித்து வந்துள்ளனர்.

அவற்றில் மன்னர்களது நண்பர்கள், பிற நாட்டு மன்னர்கள் வழங்கிய பொருட்களும் உள்ளன. ஒவ்வொரு முறை மன்னர் கோவிலுக்கு வரும்போதும், ஒரு தங்க நாணயத்தை சுவாமிக்கு காணிக்கையாக வழங்குவது வழக்கம். இவ்வாறு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தங்க நாணயங்களை சுவாதி திருநாள் மன்னர் கோவிலுக்கு காணிக்கையாக வழங்கி உள்ளார்.
இவ்வாறு அங்கு தங்க நாணயங்களே மிக பெரிய சேகரிப்பாக காணப்பட்டது. அவற்றில், "சூரத் நாணயம்' என்று பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. பல சரித்திர நூல்களை ஆய்வு செய்த போது நேபாள மன்னர் குடும்பத்தினர் 100 ஆண்டுகளுக்கு முன் 25 ஆயிரம் சாளக்கிராம கற்களை திருவிதாங்கூர் மன்னருக்கு வழங்கி உள்ளது தெரிந்தது.

அவை நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து யானைகள் மீதேற்றி இரண்டரை ஆண்டுகள் கடந்து தான் திருவனந்தபுரத்திற்கு வந்து சேர்ந்தது. அவற்றில் 12 ஆயிரத்து 500 கற்களை கொண்டு தான் தற்போது கோவிலில் உள்ள மூலவர் சிலை உருவாக்கப்பட்டது. மீதமுள்ள கற்கள் பாதுகாப்பாக பத்ம தீர்த்தத்தில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிந்தது.பாதாள அறைகளில் இருந்து கணக்கெடுக்கப்பட்டவை புதையலாக கருத முடியாது. புதையல் என்பதற்கு அரசின் விளக்கத்திலும் அவைகள் இடம் பெறாது. அவைகள் அனைத்தும் கோவில் சொத்தாகவே கருத முடியும். மேலும், பாதாள அறைகளில் இருப்பவை குறித்து கணக்கெடுக்க மட்டுமே சுப்ரீம் கோர்ட் கமிட்டியை நியமித்துள்ளது. அவற்றின் மதிப்பு குறித்து கணக்கெடுக்க அல்ல.இவ்வாறு ராஜன் கூறினார்.

கணக்கெடுப்பு விவரங்கள் வெளியிட தடைவிதிக்க கோரி மனு தாக்கல் : திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் பாதாள அறைகளில் இருந்து சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி நடந்து வரும் கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட தடைவிதிக்க கோரி, திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

பாதாள அறைகளில் பாதுகாக்கப்பட்டுள்ள கோவில் சொத்து விவரங்களை பல்வேறு தொலைக்காட்சி, நாளிதழ்கள் செய்திகளை வெளியிட்டு வருகிறது. கணக்கெடுப்பு குறித்து உண்மையான விவரங்களை கமிட்டி தான் வெளியிட வேண்டும். அவ்வாறு வெளியிட்டால் மட்டுமே பொக்கிஷங்கள் குறித்த உண்மை தகவல் பொதுமக்களுக்கு கிடைக்கும்.
கோவில் சொத்துக்கள் கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட தடைவிதிக்க வேண்டும் என, திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலை நிர்வகித்து வரும் திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் சுப்ரீம் கோர்ட்டில் தடையாணை கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். வழக்கு விசாரணையில் தன்னையும் சேர்க்க கோரி மூலம் திருநாள் ராமவர்மா மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.இம்மனு இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என தெரிகிறது.

பத்மநாப சுவாமி கோவில்கள் நகைகள்:மாநில அரசு விளக்கம் : திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில் பாதாள அறைகளில் இருந்து எடுக்கப்பட்ட நகைகள் கோவில் வசமே இருக்கும் என, கேரள அரசு தெரிவித்துள்ளது.திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில் பாதாள அறைகளிலிருந்து பல லட்சம் பெறுமானமுள்ள நகைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.இது குறித்து மாநில அறநிலையத்துறை அமைச்சர் சிவகுமார் குறிப்பிடுகையில், "பத்மநாப சுவாமி கோவிலில் கண்டெடுக்கப்பட்ட நகைகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. கோவிலுக்கு சொந்தமான நகைகள் என்பதால் இவை கோவில் வசமே இருக்கும். எனினும், சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பின் பேரில் இறுதி முடிவு எடுக்கப்படும்' என்றார்.
மன்னரின் சொத்துக்கள் நாட்டுக்கே உடமையாக்கப்படவேண்டும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக