ஞாயிறு, 17 ஜூலை, 2011

புலிகளோடு சேர்ந்து பொது மக்கள் பலியானதால் புலிகள் பக்கசார்பாக இருந்த கருணாநிதியையே

இலங்கை தமிழர்கள் மேல் பாசம் கொண்டிருக்கும் அன்பார்ந்த தமிழ்நாட்டு தமிழர்களே!

சமீபகாலங்களில் தினமலர், தினமணி போன்ற வெப்சைட்களில் கருணாநிதி சம்பந்தமாகவோ அல்லது காங்கிரஸ் சம்பந்தமாகவோ செய்திகள் வரும் போது அதற்க்கான உங்கள் கருத்து பதிவுகளில் இலங்கையின் இறுதி யுத்தத்தின் போது கொல்லப்பட்ட தமிழ்மக்களுக்கு காரணம் முற்றுமுழுதாக கருணாநிதியையும், காங்கிரஸ்சையும் சாரும் என்பது போன்று உங்கள் ஆவேசம் தெரிகின்றது. நீங்கள் இலங்கை தமிழர்கள் மேல் வைத்திருக்கும் அன்பை பார்த்து பெரிதும் ஆச்சரியப்படும் அதே வேளையில் பல தவறான தகவல்களையும் உங்களிடத்தில் வைத்திருப்பதை எண்ணி கொஞ்சம் வேதனையும் படவைக்கிறது.
கிட்டதட்ட இருபத்தியொரு வருடங்களுக்கு முன்னால் தீர்ந்து போயிருக்க வேண்டிய இலங்கை தமிழர் பிரச்சனை தீர்ந்து போகாமல் போனதும் அதனால் பிற்ப்பாடு இறுதி யுத்தம் வரை இறந்து போன தமிழ்மக்களுக்கும் ஒருவகையில் கருணாநிதியே காரணம எனறாலும் அது புலிகள் பக்கசார்பாக இருந்த கருணாநிதியையே சேரும்.
இறுதி யுத்தத்தின் போது கொல்லப்பட்ட எமது உறவுகள் ஏராளம், அதை ஈடுகட்டமுடியாது என்பதும் உண்மைதான். ஆனால் அந்த இறுதி யுத்தத்தில் இறந்த மக்களின் ஒரு பாதியை நடத்தி முடித்த மகிந்தாவையும் அத்தருணத்தில் மௌனமாகி இருந்த கருணாநிதியையும் சரி உங்கள் திருப்திக்காக காங்கிரஸ்சையும் சாரும் என்று வைத்துக்கொண்டாலும் மிகுதிப்பாதியை தப்பிச்சென்ற மக்களை சுட்டுக்கொன்றதன் மூலமும், மனிதகுண்டை அனுப்பி, தப்பி வந்து நிம்மதி பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்த மக்களை கொத்தாக கொன்றதன் மூலமும், மனிதகேடயங்களாக பயன்படுத்தி எதிரியின் துப்பாக்கிகளுக்கு காவு கொடுத்ததன் மூலமும் புலிகள் செய்து முடித்தனர்.

இதில் ஒன்றை நீங்கள் நிச்சயம் உணரவேண்டும் இவர்கள் புலிகளால் துரோகி பட்டம் சூட்டப்பட்டவர்கள் அல்ல, மாறாக புலிகளோடு புலிகளாக ஒன்றாய் கலந்து கடைசி மூச்சு விடும் வரை புலிகள் தங்களை காப்பாற்றுவார்கள் என்று நம்பி சென்றவர்கள். (இதை எதற்கு சொல்ல வருகிறேன் என்றால் உங்களை பொறுத்தவரை புலிகளால் துரோகி பட்டம் சூட்டப்பட்டவர்கள் தமிழர்கள் என்றாலும் தண்டனைக்குரியவர்களே. இதை இலங்கை பிரச்சனையை பொறுத்தவரை உங்களை வழி நடத்தி வரும் 'சீச்சி இந்த பழம் புழிக்கும்' வை.கோ, 'சில்லறைக்கு சிறை செல்லும் சிங்காரக்கண்ணன்' சீமான், 'பக்கத்து வீடே அறியாத பரமாத்மா' பழ நெடுமாறன், 'அன்புமகன அனபுமணிக்கு அமைச்சர் பதவி கொள்கை வீரர்' மருத்துவர் ராமதாஸ் இவர்களை போன்றவர்களால் உங்கள் புத்திகளுக்கு அப்படித்தான் ஊட்டப்பட்டன.) சரி இறுதி யுத்தத்தில் இறந்தவர்களை விட்டு அதற்கு முந்திய காலகட்டத்தில் புலிகளால் கொல்லப்பட்ட தமிழ் பேசும் அரசியல்வாதிகளும், மாற்று இயக்க போராளிகளும், வேற்று மத மக்களும், கப்பம் கட்ட முடியாத அப்பாவிகளும், கட்டாய படை சேர்ப்புக்கு கட்டுப்பட விரும்பாத பாவி மக்களும், காட்டிக்கொடுத்தவர்கள் என்ற பெயரில் கொஞ்சமும், தங்கள் பிள்ளைகளை தங்களுக்கு காட்ட மறுத்த பெற்றோர்களையும், சிலரை சந்தோசப்படுத்த சிலரையும், தங்கள் ஆத்திரத்தை அடக்கமுடியாமல் கொன்ற பலரையும் கணக்கில் எடுத்தால் தமிழ் மக்கள் மகிந்தாவை தேரில் வைத்து மரியாதை செய்யலாம்.ஒருவேளை சரணடைந்தவர்களை புலிகள் எதுவும் செய்யவில்லை என்று கூறவரலாம், புலிகள் தேடிப்போயும் கொன்றிருக்கிறார்கள் தேடி வந்தவர்களையும் கொன்றிருக்கிறார்கள். கிழக்கில் சரணடைந்த அறுநூற்றுக்கு மேற்ப்பட்ட பொலிஸ்காரர்கள், விசாரணை என்ற பெயரில் புலிகளால் அழைக்கபட்டு தாமாகவே சமூகமளித்தவர்கள் இப்படி எவருமே மீண்டும் வீடு வந்த சேர்ந்ததில்லை.

இருக்கட்டும் சிங்கள படைகள் தமிழர்களை கொடூரமாக கொன்றதைப்போல் புலிகள் கொடூரமாக கொல்லவில்லை என்று நீங்கள் மனதிற்குள் நினைப்பது போல் தெரிகிறது, கொடூரத்தில் எத்தனை வகைப்படுமோ அத்தனையும் புலிகளால்தான் அரங்கேற்றப்பட்டன, உயிருடனேயே கழுத்தில் ரயரை மாட்டிவிட்டு கொழுத்துதல், வாகனத்தில் கட்டி வைத்து வீதிவீயாய் இழுத்து சென்று கொல்லுதல், நடுநிசியில் தூங்கிகொண்டிருந்தவாகளை கத்தி, வாள் கொண்டு வெட்டி கொல்லுதல், பச்சிளம் குழந்தைகுள் குண்டை ஊடுருவி அதை பெற்ற தாயை கொல்லுதல் இப்படி ஏராளம், இதைவிட விரட்டி துரத்திய, மிரட்டி துரத்திய தமிழ் பேசும் மக்களின் சோகக்கதைகளும் ஏராளம். சிங்கள காடையர்களுக்கு ஒரு 'வெலிக்கடை சிறை' நரவேட்டை போல், புலிக்காடையர்களுக்கு 'கந்தன் கருணை' நரவேட்டையும் சரிசமமாய் உண்டு. இதுவரை சொன்னதெல்லாம் புலிகளின் கொடூரமுகத்தின் ஒரு ஐந்து சதவிகுதம் கூட இருக்காது, இவையெல்லாம் என்றோ நடந்து முடிந்தவை தான், ஆனாலும் நீங்கள் இன்று வரை தெரிந்திருக்கவில்லை போல் தோணுவதால் சொல்ல வேண்டியதாயுள்ளது. ஏனெனின் உங்களுக்கு தெரிந்த இலங்கை தமிழர் வரலாறு புலிகளால் எழுதப்பட்டு அவர்களால் சம்பளத்திற்க்கு நியமிக்கபட்ட வை.கோ, சீமான், நெடுமாறன், ராமதாஸ் போன்றவர்களால் கக்கிவிடப்பட்டவை.

கருணாநிதியின் விடயத்திறக்கு மீண்டும் வருவோம், இலங்கைத்தமிழர்களின் துன்பவரலாற்றில் கருணாநிதிக்கு கணிசமான பங்குண்டு, அது நீங்கள் நினைப்பது போல் இறுதிநேர யுத்தத்தின் போதல்ல. இருபத்திரெண்டு வருடங்களுக்கு முன்பு தமிழ் பேசும் மக்களுக்கு ஒரு பொற்க்காலம் என்று சொல்லமுடியாவிட்டாலும் நிம்மதியான, அமைதியான வாழ்வுக்கு இலங்கை இந்தியா ஒப்பத்தின் மூலம் ஒரு தருணம் கிடைத்தது. அந்த மாகாணசபை ஆட்சி ஆரோக்கியமான பாதையில் செல்லத்தொடங்கி அதற்கு மேலும் அதிகாரங்களை பெற்றுத்தருவதற்கு முன்னாள் பிரதமர் அமரர் ராஜிவ்காந்தி அரசு சிறிலங்கா அரசுக்கு பெரும் அழுத்தத்தை கொடுத்துக்கொண்டிருந்தது.

மக்கள் தங்களை விட்டு விலகி செல்கிறார்கள் என்ற ஆத்திரத்தில் புலிகளும் இப்படியே போனால் இலங்கை தமிழர்கள் ஆகக்கூடுதலான அதிகாரங்களை பெற்றுவிடுவார்களோ என்ற பயத்தில் அன்றைய பிரதமர் பிரேமதாசாவும் ஓரணியில் திரண்டு மாகாணசபை ஆட்சியை குலைக்க தொடங்கினர். அந்தநேரத்தில் தான் தமிழ் மக்களின் நீணட துன்பவரலாற்றுக்கு வழிவகுத்து அமரர் ராஜிவ்காந்தி ஆட்சி போய் வி.பி சிங் ஆட்சி இந்தியாவில் ஆட்சிக்கு வந்தது. ஒரு ஆட்சி நல்லது செய்தாலும், மறு ஆட்சி வந்தால் அதை தொடர விடமாட்டோம் என்ற இந்தியாவின எழுதப்படாத சட்டத்திற்க்கு இணங்க இந்திய ராணுவம் இலங்கையிலிருந்நு வி.பி சிங் அரசால் திருப்பி அழைக்கபட்டது.

இந்த 'பொன்னான' தருணத்தை எதிர் பார்த்துக்கொண்டிருந்த புலிகளும் சிங்கள அரசும் மாகாணஅரசை ஸ்தம்பிக்க வைத்து அதை உருவாக்க பாடுபட்டவர்கள வேட்டையாட தொடங்கினர். இந்திய ராணுவம் இலங்கையில் கொடூரம் புரிந்ததாக காரணம் காட்டி கருணாநிதியும் வி.பி சிங்குடன் சேர்ந்து இலங்கை தமிழர்களின் இந்த 'பொன்னான' வரலாற்று பின்னணிக்கு கைகொடுத்தார். மீண்டும் ஒரு இரத்தக்களரியை காண விரும்பாத மாகாணசபையை உருவாக்க பெரும்பாடுபட்ட ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினுதும் அதன் தோழமை கட்சிகளினதும் தோழர்களும் அவர்கள் குடும்பத்தை சேர்ந்தவர்களும் கப்பல் மூலம் தமிழ்நாட்டிற்க்கு அகதிகளாக வந்தனர்

எங்கே இவர்களை தமிநாட்டில் இறங்க அனுமதிப்பதன் மூலம் புலிகளின் வெறுப்பை சம்பாதிக்க நேரிடுமோ என்ற நோக்கத்தில் இந்த தமிழ் அகதிகளை பெண்கள் குழந்தை குட்டிகள் உட்பட ஒரிசாவிற்க்கு துரத்தியடித்தவர் இந்த தமிழின காவலர் கருணாநிதி. அன்று தன் பதவியை தக்க வைத்துக்கொள்வதற்காக இந்தியா ராணுவம் இலங்கை தமிழர்கள் மீது கொடுமை புரிந்ததாக தமிழ்நாட்டு மண்ணில் எழுந்த ஆவேச அலைக்கு ஆதரவு தந்து இலங்கை தமிழர்களின் எதிர்காலத்தின் மீது கொஞ்சமும் கரிசனம் கொள்ளாமல் மாகாணசபை அரசு கலைந்து போவதற்கு காரணமானார். அது சரியில்லை, இவர்கள் சரியில்லை என்று சொன்னவரால் இந்த இருபது வருட காலத்தில் இலங்கை தமிழர்களுக்கு எதுவுமே சரியா செய்து தரமுடியவில்லை.இவரால் பெற்றுத்தர முடிந்ததெல்லாம் இந்த மாகாணசபை ஆட்சி கலைப்புக்கு பின்னால் நடந்த இலங்கை தமிழர்களின் எழுபத்தைந்து வீதத்திற்க்கு மேலான மரணங்களே.

கருணாநிதிக்கு பிரபாகரன் மீது கூடுதல் பற்றுதல் வைப்பதற்க்கும், மாகாணசபையை ஆட்சி செய்த ஈ.பி.ஆர்.எல்.எப் போன்ற இயக்கங்களை பிடிக்காமல் போனதிற்கும் இன்னொரு முக்கிய காரணம் உண்டு, அது இவர்கள் இருவரும் அடிப்படையில் ஒரே மனநிலை படைத்தவர்கள், அதாவது இவர்கள் இருவருக்கும் அறிவுபூர்வமான அரசியல் அறிவு கொண்டவர்களை பிடிக்காது.ஈ.பி.ஆர்.எல்.எப் போன்ற இயக்கங்களின் முற்போக்கான அரசியல் நடவடிக்கைகள் தான் ஆட்சி செய்யும் முறையை சிறுமைபடுத்திவிடுமோ என்ற அச்சமுமம் கருணாநிதிக்கு உண்டு. அதனால்தான் ஈ.பி.ஆர்.எல்.எப்பின் தலைவர் பத்மநாபா உட்பட பல தோழர்கள் சென்னையில் வைத்து புலிகளால் படுகொலை செய்வதற்க்கு மறைமுகமான ஆதரவு தந்து அந்த படுகொலை செய்த புலிகளை தப்பவிட்டு, ஈ.பி.ஆர்.எல்.எப் ஐயை சேர்ந்த ஏனைய தோழர்களை பிடித்து சிறையிலடைத்தார்.
பிராபாகரனுக்கோ வன்முறை அரசியலை தவிர வேறுதுவும் தெரியாது.
அந்த தாழ்வு மனப்பான்மையின் வெளிப்பாடே தன்னை விட அறிவு சார்ந்து சிந்திப்பவர்களை கொல்லப்புறப்பட்டது.

இந்த இறுதி நேர யுத்தத்தின் போது கருணாநிதியினால் இலங்கை தமிழர்களுக்கு துரோகம் இழைக்கபட்டதாக நீங்கள் நினைப்பது, விடுதலைப்புலிகளை பற்றி முழுமையாக அறிந்திராததும், அவர்களை தமிழினத்தின் காவலராக அடையாளப்படுத்தியதும் தான். புலிகளோடு சேர்ந்து பல அப்பாவி பொது மக்கள் பலியானதால் கருணாநிதி ஒரு தமிழினதுரோகி என்ற வாதம் ஓரளவுக்கு சரியானதாக இருந்தாலும், நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும், இருபத்திரண்டு வருடங்களுக்கு முன்னால் கருணாநிதி இலங்கை தமிழர்களுக்கு செய்த துரோகமும் பதவி ஆசையினால்தான், இறுதி நேர யுத்த்தின் போது செய்த துரோகமும் பதவி மோகத்தினால் தான், அன்று புலிகளை வாழ வைத்ததினால் பதவியை தக்கவைத்தார், இன்று காங்கிரஸ்சை பகைத்து கொள்ளாமல் பதவியை காப்பாற்றிக்கொண்டார். ஆனால் இரண்டு முறையின் போதும் விளைந்த விளைவுகள் வேறுபட்டது, அன்றைய துரோகத்தின் பின்னால் பல ஆயிரம் இலங்கை தமிழர்களின் மரணத்திற்க்கு வழிவகுத்தது, இன்றைய துரோகத்தின் பல ஆயிரம் இலங்கை தமிழர்கள் அழிவு தடுக்கப்பட்டுள்ளது. தெரிந்தோ தெரியாமலோ கருணாநிதியினால் இலங்கை தமிழர்களுக்கு நேர்ந்த ஒரே நல்ல விடயம் விடுதலைப்புலிகள் முற்றாக அழியும் வரை மௌனம் காத்ததுதான்.

காங்கிரஸ்சை பற்றிய உங்கள் வெறுப்பான மனோநிலை, சிங்கள அரசு புலிகளை அழிப்பதற்க்கு இந்திய மத்திய அரசு துணை போனது என்று நீங்கள் நம்புவதால் ஏற்பட்டது.
அதில் ஓரளவுக்கு உண்மையும் இருக்கின்றது, மேல் குறிப்பிட்ட படி நீங்கள் புலிகளை பற்றி விளங்கிக்கொள்ளாத வரைக்கும் காங்கிரஸ் மீதான உங்கள் கோபம் நியாயமாக தெரிந்திருக்கலாம் ஆனால் இலங்கை பிரச்சனைப்பற்றி வை.கோ போன்ற வகையறாக்களால் நீங்கள் தெரிந்து கொண்டது உண்மைக்கு புறம்பானது, ஆனால் இந்திய மத்திய அரசு புரிந்து கொண்டது யதார்தமானது புலிகளின் முற்றுமுழுதான அழிவுக்கு பின்னால்தான் இலங்கை தமிழர்களுக்கு நிலையான அமைதியும் நிம்மதியும் கிடைக்கும் என்பதை எங்களைப்போல இந்தியாவும் உணர்ந்து கொண்டது நியாமான ஒன்று. இறுதிநேர யுத்தத்தின் போது இந்தியாவின் தார்மீகமான ஆதரவை மகிந்தா தவறான வழியில் பயன்படுத்தி பல அப்பாவி மக்களின் உயிர்களையும் சேர்த்து அழித்திருக்கலாம் ஆனால் அந்த அப்பாவி மக்களின் அழிவை இந்திய மத்திய அரசு விரும்பியிருக்க எந்த தேவையும் இல்லை,

நடந்து முடிந்த இன்னல்களுக்கு யார் வேண்டுமானாலு எப்படி வேண்டுமானாலும் காரணமாக இருந்து விட்டு போகட்டும் ஆனால் இலங்கை தமிழர்களுக்கு இனிமேல் நடக்க வேண்டிய நல்லதற்கு யாரும் தடையாக இருக்கவேண்டாம். கோபமும், ஆத்திரமும், பழிவாங்கலும் இலங்கை தமிழர் வாழ்வில் மேலும் இன்னல்களுக்கே வழிவகுக்கும், இலங்கை தமிழர்களுக்கு ஒரு நிலையான, நியாயமான தீர்வு கிடைப்பது ஒன்றே அவர்கள் இதுவரை அனுபவித்து வந்த இன்னல்களுக்கு ஒரே முடிவு, அதை பெற்றுதரக்கூடிய வல்லமை இந்திய அரசுக்கு மட்டும் தான் உண்டு. ஆகவே இலங்கை தமிழர்கள் மேல் நீங்கள் வைத்திருக்கும் அன்பு ஆக்கபூர்வமானதாக அமைய வேண்டுமானால் அது நீங்கள் இந்திய அரசை வற்புறுத்தி இந்த தீர்வை பெற்றுத்தருவதே.

அன்புடன் மோகன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக