வியாழன், 21 ஜூலை, 2011

இரு மொழிகளை தெரிந்து கொள்வதன் மூலமே அடுத்தவர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளலாம்’ : அமைச்சர் வாசுதேவநாணயக்கார!


இரு மொழிகளையும் தெரிந்து கொள்வதன் மூலமே அடுத்தவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடியும் என தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். அம்பாறை,மொனராகலை,பதுளை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சமூக சேவை நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்காக பதுளை ரிவர்சைட் ஹொலிடேஇன் ஹோட்டலில் நடைபெற்ற செயலமர்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அமைச்சின் மேலதிக செயலாளர் புத்தபிரிய நிகமுனியின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் ; மொழிச் சட்டங்கள் பற்றி பொதுமக்களுக்கு சரியான முறையில் விளக்கங்கள் வழங்கப்படாமையினாலேயே மக்கள் மொழிச் சட்டங்களை மீறுபவர்களுக்கு எதிராக எதையும் செய்யாமல் உள்ளனர். அரசாங்கம் எவ்வளவுதான் மொழிச் சட்டத்தை அமுல்படுத்த முயற்சித்தாலும் அரசாங்க அதிகாரிகளில் பலர் இதற்குத் தடையாக உள்ளதை நாம் ஏற்றுக் கொண்டேயாக வேண்டும்.
வடக்கு, கிழக்கில் தமிழ் மொழி அரசகரும மொழியாக அமுல்படுத்தப்படும் அதேவேளை சில பிரதேசங்களில் இன்னும் சிங்கள மொழியில் கருமங்கள் ஆற்றப்படுவது அந்த மொழி பேசும் மக்களுக்குச் செய்யப்படும் மிகப்பெரிய அநீதியாகும். இதில் விசேடமாக பொலிஸ் நிலையங்கள், மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள் என்பவற்றில் தமிழ் மொழியில் கருமங்கள் ஆற்றப்படுவதில்லையென எமக்கு அடிக்கடி எடுத்துக் கூறப்படுகின்றது. மலையகத்திலும் இன்னும் தமிழ் மொழி அமுலாக்கம் சரியாக பின்பற்றப்படுவதில்லை.இவற்றிற்காக உடனடியாக சிங்கள மொழி மூல பிரதேசங்களிலும் தமிழ்பேசும் அதிகாரிகள் நியமிக்கப்படவேண்டும் என நாம் அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதோடு, தமிழ் மொழி அமுலாக்கலில் அசிரத்தை காட்டும் அரச அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் இனி நாம் பின் நிற்கமாட்டோம்.
இதன் முதற்கட்டமாக நாட்டிலுள்ள சகல மாவட்டங்களிலும் மொழிச் சங்கங்களை உருவாக்கி அதன் மூலம் மொழி அமுலாக்கம் தொடர்பாக மக்களை விழிப்பூட்டுவதோடு இதனை மக்களின் கைகளில் விடவும் நாம் தீர்மானித்துள்ளோம். இதன் முதற்கட்டமாகவே நாம் இவ்வாறான செயலமர்வுகளை நாடு தழுவிய ரீதியில் செயற்படுத்த உத்தேசித்துள்ளோம். இதற்கு அடுத்த படியாக இரத்தினபுரி, வவுனியா, கொழும்பு ஆகிய மாவட்டங்களிலும் இதுபோன்ற செயலமர்வுகள் நடத்தப்படவுள்ளன.
30 வருட யுத்தத்திற்குப் பின்னர் நாட்டில் நீண்ட கால சமாதானம் ஏற்படவேண்டுமானால் அனைத்து மக்களின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும். மற்றைய இனத்தவர்களின் கலை,கலாசாரம், இலக்கியம், இலக்கணம் என்பவற்றை நாம் தெரிந்து கொள்ள வேண்டுமானால் நிச்சயம் ஏனைய இனத்தவர்களின் மொழியை நாம் கற்றுக் கொள்ள வேண்டும். உருவாக்கப்படவுள்ள சங்கத்தில் தமிழ்,சிங்கள,முஸ்லிம் இனங்களை உள்ளடக்கியதாக அங்கத்தவர்கள் இருப்பார்களேயானால் மொழியை தெரிந்து கொள்வதில் பாரியபங்களிப்பைச் செலுத்தலாம். இவற்றை எதிர்காலத்தில் பாரிய மக்கள் அலையாக முன்னெடுத்து நமது சக்தியை நாம் காட்ட முடியும்.
இரு மொழிகளினூடாக இதயபூர்வமாக இணைக்கப்பட்ட ஒரே இலங்கை மக்கள் என்ற தொனிப்பொருளில் இத் திட்டம் அமுல்படுத்தப்படுகின்றது. நாம் எந்த மொழி பேசினாலும் அடுத்த இனத்தின் மொழியை மதிப்பதன் மூலம் அந்த இனத்தின் கௌரவத்தையும், மதிப்பையும் நாம் பாதுகாப்பதன் மூலம் நமது நாட்டில் நிரந்தர சமாதானத்தை உருவாக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதில் ஊவா மாகாண சபை உறுப்பினர் கே.வேலாயுதம்,அமைச்சின் உதவிச் செயலாளர் சட்டத்தரணி மயூரிபெரேரா, திருமதி.ஜானி உட்பட பலர் உரையாற்றினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக