செவ்வாய், 19 ஜூலை, 2011

'வெங்காயம்'! போலிச்சாமியார்கள் பற்றி புதிய சினிமா

பெரியார் அடிக்கடி பிரயோகித்த வார்த்தை வெங்காயம். அது ஏதோ கெட்ட வார்த்தை என்று பலரும் நினைத்ததுண்டு. ஆனால் அந்த வெங்காயம் என்ற வார்த்தைக்குள் எத்தனை பெரிய தத்துவத்தை பெரியார் புரிய வைத்தார் என்பதை பின்னர்தான் அனைவரும் புரிந்து கொண்டனர்.

இன்றைய தலைமுறையினருக்கு பெரியாரின் கொள்கைகளை, புரட்சிக் கருத்துக்களை எடுத்துச் சொல்ல ஒரு படத்தை தயாரிக்கிறார்கள். அந்தப் படத்தின் தலைப்பு 'வெங்காயம்'. போலிச் சாமியார்களின் முகத்திரையைக் கிழிக்கும் காட்சிகள் இந்தப் படத்தில் ஏராளம் உள்ளனவாம்.

தமிழ் சினிமாவில் பெரியாரின் கொள்கைகளைப் பேசி வருபவரும், அவர் வேடத்தில் நடித்து பாராட்டுக்களைப் பெற்றவருமான சத்யராஜ்தான் இந்தப் படத்தின் நாயகன். சங்ககிரி ராஜ்குமார் இயக்குகிறார்.

இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது.

முதல் சிடியை துப்புரவு தொழிலாளர் ஜானய்யா வெளியிட, ஏழுமலை என்ற விவசாயி பெற்றுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் சத்யராஜ் பேசுகையில், "வெங்காயம்' படம், போலி சாமியார்களின் முகத்திரையை கிழிக்கிற படம்", என்றார்.

இயக்குநர் கவுதமன் பேசும்போது, "வெங்காயம், பெரியார் கொள்கைகளை சித்தரிக்கும் படம். பெரியார் படத்தை போட்டு கட்சி நடத்தும் அரசியல் கட்சிகள், இந்த படத்தை வாங்கி, திரைக்கு வருவதற்கு உதவ வேண்டும்'' என்றார்.

திராவிடர் இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன், படத்தின் தயாரிப்பாளர் எஸ்.எம்.மாணிக்கம், இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் ஆகியோரும் பேசினார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக