ஞாயிறு, 17 ஜூலை, 2011

வைகோ: ஓட்டு போட்ட மக்கள் தலையில் பாறங்கல்லை போடலாமா?

வரிசையாக வரிகளை உயர்த்தி, ஓட்டு போட்ட மக்கள் தலையில் பாறங்கல்லை தூக்கி போடலாமா என்று மதிமுக பொது செயலாளர் வைகோ அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

திசையன்விளை அருகே இட்டமொழியில் மதிமுக சார்பில் நடந்த காமராஜர் பிறந்த நாள் விழாவில் மதிமுக பொது செயலாளர் வைகோ பேசியதாவது:

தற்போது பள்ளி, கல்லூரி மாணவர்கள் மதுகடையில் வரிசையில் நின்று மது வாங்குகிறார்கள். திருமணமா, தூக்க நிகழ்ச்சியா மது பிரதானம் ஆகிறது. 15 நாட்களில் 3 கொலைகள் மதுவினால் ஏற்பட்டுள்ளது.

உலகத்திற்கு மனிதபிமானம் சொல்லி கொடுத்த தமிழ்நாடு எங்கே செல்கிறது, காமராஜர் காலத்திலோ, அண்ணா காலத்திலோ மதுவினால் வருமானம் வரவில்லையே. தற்போது ஒரு தலைமுறை அழிந்து விடும் நிலை உள்ளது. வருமானத்தை பெருக்க விற்பனை வரி, வாட் வரி, துணிகளுக்கு வரி என்று ஓட்டு போட்ட மக்கள் தலையில் பாறாங்கல்லை தூக்கி போடுகின்றனர். இதனை நாங்கள் தட்டி கேட்போம்.

முல்லை பெரியார் பிரச்சனை, ஸ்டெர்லைட் பிரச்சனை, மீனவர் பிரச்சனை உள்பட மக்கள் பிரச்சனைக்காக நாங்கள் குரல் எழுப்புகிறோம். தமிழக அரசு உவரியில் உடனே தூண்டில் அமைத்து கொடுக்க வேண்டும்.

சமச்சீர் கல்வி திட்டத்தி்ல் சரியான கொள்கையை இந்த அரசு பின்பற்ற வில்லை. 15 நாட்கள் பள்ளி கூடம் திறக்கப்படவில்லை. இன்னும் எந்த பாடம் நடத்துவது என தெரியவில்லை. இந்த போக்கு தவறானது. கண்டனத்துக்குரியது.

சுப்ரீம் கோர்ட் ஆணையை மதிக்காமல் பெரியார் அணையை உடைப்போம் என கேரள அரசு சொல்கிறது. ஸ்டெர்லைட் ஆலையை நாங்கள் எதிர்த்து வருகிறோம். இதனால் புற்றுநோய் ஏற்படுகிறது. விவசாயம், மீன்பிடி தொழில் பாதிக்கிறது. உயர்நீதிமன்றம் இதனை மூட உத்தரவி்ட்டுள்ளது என்றார் அவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக