ஞாயிறு, 24 ஜூலை, 2011

ஒடிசா எம்.எல்.ஏ தலித் என்பதால் தனியாக உணவு வழங்கினர்

புவனேஸ்வர் : ஒடிசா மாநிலத்தில், தலித் சமூகத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ.,வுக்கு தனியாக உணவு வழங்கப்பட்ட விவகாரம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, சபாநாயகரிடம் எம்.எல்.ஏ., புகார் அளித்துள்ளார். ஒடிசா மாநிலம், தாசபல்லா சட்டசபைத் தொகுதி, பிஜூ ஜனதா தளம் எம்.எல்.ஏ., காசிநாத் மாலிக். தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். கடந்த 20 ம் தேதி, மாவட்ட ஊரக வளர்ச்சி அதிகாரிகளுடனான கூட்டம் நடந்தது. அதில், நாயகார் மாவட்டத்தைச் சேர்ந்த காசிநாத் மாலிக் உள்ளிட்ட ,4 எம்.எல்.ஏ.,க்கள், கந்தமால் எம்.பி., ருத்ரமாதவ் மற்றும் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது, உணவு இடைவேளையின் போது, அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டது. அதில், காசிநாத் தலித் என்பதால், அவருக்கு தனியாக வேறு அறையில் உணவு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, காசிநாத், ஒடிசா சட்டசபை சபாநாயகர் பிரதீப்குமார் அமத்திடம் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளார். இதுகுறித்து, காசிநாத் செய்தியாளர்களிடம் கூறுகையில், "மற்றவர்களுடன் எனக்கு உணவு அளிக்காமல், வெளியே வைத்து எனக்கு இலையில் உணவளித்தனர். இதனால், நான் மிகவும் அவமானமாக உணர்ந்தேன்' என்று தெரிவித்துள்ளார்.

ஆனால், நாயகார் கலெக்டர் அரவிந்த் அகர்வால், இதனை மறுத்துள்ளார். தங்களுடன் உணவு சாப்பிட, காசிநாத்தை அழைத்ததாகவும், அவர் வர மறுத்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். முன்னதாக, பொது இடத்தில், கந்தமால் எம்.பி., ருத்ர மாதவ், தன்னை சாதிப் பெயரைக் குறிப்பிட்டுத் திட்டியதாக காசிநாத் போலீசில் புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக