சனி, 30 ஜூலை, 2011

வீரபாண்டி ஆறுமுகம் மீண்டும் கைது; போலீசாருடன் தி.மு.க.வினர் மோதல்

சேலம் மாநகர் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் ஸ்டேஷனில், நேற்று 3வது நாளாக  
ஆஜரான முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தைப் போலீசார் மீண்டும் கைது செய்தனர். சுபம் மெட்ரிகுலேஷன் பள்ளிக்குச் சொந்தமான நிலத்தை வாங்கியது தொடர்பான வழக்கில் இவர் தற்போது கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது. போலீஸ் நிலையம் முன் கூடியிருந்த தி.மு.க.,வினர் இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். போலீசாருடன் தி.மு.க.,வினர் மோதலில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கைது செய்யப்பட்ட வீரபாண்டி ஆறுமுகம், உடனடியாக நீதி மன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

சேலம், அங்கம்மாள் காலனி நிலம் மற்றும் பிரீமியர் மில் நில அபகரிப்பு வழக்கில், முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள, முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்திடம், ஐகோர்ட் உத்தரவுப்படி, மாநகர் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் ஸ்டேஷனில், 3 நாள் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்குப் பின், சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, "மாநகர் மத்திய குற்றப்பிரிவு போலீஸில், தினமும் காலை 8 மணிக்கு நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்' என, நீதிபதி உத்தரவிட்டார். அந்த உத்தரவில், எத்தனை நாள் ஆஜராகி, கையெழுத்துப் போட வேண்டும் என்பது பற்றி குறிப்பிடப்படவில்லை.

அதன்படி, முதல் நாளான 28ம் தேதி காலை 8 மணிக்கு ஆஜராக வேண்டிய வீரபாண்டி ஆறுமுகம், 10 நிமிடம் காலதாமதமாக, காலை 8.10 மணிக்கு ஆஜரானார். இந்த காலதாமத்துக்கு எழுத்துப்பூர்வமாக விளக்கம் தரும்படி போலீசார் வலியுறுத்தினர். அதனால், வீரபாண்டி ஆறுமுகம் டென்ஷனானார். 2வது நாளான நேற்று, வீரபாண்டி ஆறுமுகம், 10 நிமிடத்துக்கு முன்னதாகவே, காலை 7.50 மணிக்கு, காரில் ஸ்டேஷனுக்கு வந்து இறங்கினார். 100 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். ஸ்டேஷனுக்குள், 7.51 மணிக்கு நுழைந்த வீரபாண்டி ஆறுமுகம், 9 நிமிடம் நாற்காலியில் அமர்ந்தபடி காத்திருந்தார். சரியாக 8 மணி ஆனதும், வருகைப் பதிவேட்டில் கையெழுத்துப் போட்டு விட்டு, 8.01 மணிக்கு வெளியே வந்தார். திரண்டிருந்த தி.மு.க.,வினர், வீரபாண்டி ஆறுமுகத்தை வாழ்த்தியும், அரசுக்கு எதிராகவும் கோஷமிட்டனர். அப்போது, சிரித்த முகத்தோடு போலீசார், 8.05 மணிக்கு வீரபாண்டி ஆறுமுகத்தை வழியனுப்பி வைத்தனர்.

3வது நாளாக அவர் கையெழுத்திட வந்தபோது அவரை போலீசார் கைது செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக