வியாழன், 28 ஜூலை, 2011

அதிமுக வழக்கறிஞர் ஒப்புதல் வாக்கு மூலம் அரசுக்கு சரியான ஆலோசனை இல்லை

ஜெயலலிதா அரசுக்கு சரியான ஆலோசனை இல்லை: உச்சநீதிமன்றத்தில் அதிமுக அரசு வழக்கறிஞர்

அதிமுக அரசுக்கு சரியான ஆலோசனை இல்லாததால் தான் சமச்சீர் கல்வியை ரத்து செய்யும் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டதாக, அதிமுக அரசின் வழக்கறிஞரே உச்சநீதிமன்றத்தில் கூறியுள்ளார்.

உச்சநீதிமன்றத்தில் சமச்சீர் கல்வி வழக்கின் இறுதி விசாரணை இரண்டாவது நாளாக 27.07.2011 அன்று நடைபெற்றது. அப்போது தமிழக அரசின் வழக்கறிஞர் பிபிராவ் வாதிட தொடங்கியதும், குறிக்கிட்ட நீதிபதிகள்,
திமுக அரசின் சமச்சீர் கல்வி திட்டம் செல்லும் என்று 2010ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னரும், சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்தி வைக்க தமிழக அரசு சட்ட திருத்தம் கொண்டு வந்தது ஏன். அதற்கான அவசியம் என்ன. நீதிமன்ற உத்தரவு இறுதி முடிவு எனத் தெரிந்தும், ஒவ்வொரு உத்தரவுக்குப் பிறகும் சட்டதிருத்தம் கொண்டு வருவீர்களா என்றும் கேள்வி எழுப்பினார்கள்.
இதற்கு பதில் அளித்த தமிழக அரசின் வழக்கறிஞர் பிபிராவ், தமிழக அரசு கொண்டு வந்த சட்ட திருத்தம் தேவையற்றது என்பதை தைரியத்துடனும், உரத்த குரலிலும் ஏற்றுக்கொள்கிறேன். இதுபோன்ற தவறுதலான சட்ட திருத்தம் தேவையில்லை என்று, சரியான ஆலோசனை தமிழக அரசுக்கு வழங்கப்படவில்லை. கல்வி மற்றும் சட்டத்துறையில் தமிழக அரசுக்கு உரிய ஆலோசனைகள் வழங்க தகுதியான நபர்கள் இல்லை. அவ்வாறு ஆலோசனைகள் வழங்காததால்தான், தமிழ்நாடு அரசு சட்ட திருத்தம் கொண்டு வந்துள்ளது. இது போன்ற தேவையற்ற ஒரு செயலால், தேவையற்ற சிக்கலில் நாங்கள் மாட்டிக் கொண்டு இருக்கிறோம்'' என்று தெரிவித்தார்.

தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.பி.ராவ் இது போன்ற கருத்தை தெரிவித்ததால், சுப்ரீம் கோர்ட்டில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் தனது வாதத்தின் முடிவில் அதற்கு விளக்கம் அளித்த பி.பி.ராவ், தான் ஏற்கனவே கூறியது தமிழக அரசின் கருத்து அல்ல என்றும், தனது சொந்த கருத்து என்றும் கூறி, இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
தொடர்ந்து வாதிட்ட ராவ், சமச்சீர் கல்வி திட்டத்தை நடப்பாண்டில் செயல்படுத்த முடியாது என்றும், அடுத்த ஆண்டு செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினா

பெற்றோர் சங்கம் சார்பில் இந்த வழக்கில் ஆஜரான வழக்கறிஞர், சட்ட திருத்தம் குறித்து வக்கீல் பி.பி.ராவ் குறிப்பிட்ட கருத்தை தமிழக அரசின் கருத்தாகவே கோர்ட்டு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், இந்த ஆண்டில் இருந்தே சமச்சீர் கல்வி திட்டத்தை அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என்றும் வற்புறுத்தினார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கேவியட் மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் பாலு, தமிழக அரசின் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராவ் அவர்கள், இது தேவையற்ற ஒரு சட்ட திருத்தம். சரியான, தைரியமான, நடுநிலையோடு ஒரு சட்ட ஆலோசனை வழங்கியிருந்தால், இந்த சட்ட திருத்தத்தை தவிர்த்திருக்கலாம். அதன் மூலம் தமிழகத்தில் ஏற்பட்டிருக்கிற பல்வேறு குழப்பங்களும், பல்வேறு சிரமங்களும், அரசுக்கு ஏற்பட்டிருக்கக் கூடிய நெருக்கடிகளையும் இன்றைக்கு தவிர்த்திருக்க முடியும் என்று தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞரே நீதிமன்றத்தில் எடுத்துரைத்தது விநோதமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக