சனி, 2 ஜூலை, 2011

ரேஷன் அரிசி கடத்தினால் குண்டர் சட்டம் பாயும்,

சென்னை:கடந்த ஒன்றரை மாதத்தில், தமிழக மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் ரேஷன் அரிசியை, வெளி மாநிலங்களுக்கு கடத்தி வந்த 29 கடத்தல்காரர்கள், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில், அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், ரேஷன் அட்டை தாரர்களுக்கு இலவசமாக மாதம் 20 கிலோ அரிசி வழங்கப்படும் என அறிவித்தது. இதைத் தொடர்ந்து, ரேஷன் அரிசி மொத்தமாக வாங்கப்பட்டு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு கடத்தப்படுவதை தடுக்க, அரசு உத்தரவிட்டது.குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையின் புதிய கூடுதல் டி.ஜி.பி.,யாக நியமிக்கப்பட்ட ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்றதும், கடத்தல்காரர்கள், அவர்களுக்கு துணையாக இருப்பவர்களை கைது செய்ய உத்தரவிட்டார்.

இதன்படி, கடந்த மாதம் 13ம் தேதி முதல், கண்காணிப்பு மற்றும் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது. இதன் பயனாக, நேற்று முன்தினம் வரை, ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு வந்த 683 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த ஒரு மாதத்தில், பல ஆண்டுகளாக ரைஸ் மில் நடத்தியும், பினாமி பெயர்களில் லாரிகளை வைத்துக் கொண்டும் வெளிமாநிலங்களுக்கு அதிகளவில் ரேஷன் அரிசியை கடத்தி, போலீசிடம் சிக்காமல் இருந்த முக்கிய அரிசி கடத்தல்காரர்களான, சென்னை புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த பிரபு, திருச்சி, மணப்பாறையைச் சேர்ந்த பாத்துமுத்து, ஷேக் மொய்தீன் உள்ளிட்ட 23 பேர் கைது செய்யப்பட்டு, குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர்.

தொடர்ந்து, கோவை, கரும்புக்கடையைச் சேர்ந்த அப்துல் ஹக்கீம், 27, உடுமலைப்பேட்டை, பூலவாடியைச் சேர்ந்த சுப்ரமணி, இவரது கூட்டாளியான, திருப்பூர் அனுப்பம்பாளையம் புதூரைச் சேர்ந்த சிவானந்தம், 39, கடலூர் மாவட்டம், பண்ருட்டியைச் சேர்ந்த மேகநாதன், சங்கரன் கோவில் வட்டம், ஆளடிப்பட்டியைச் சேர்ந்த காளிராஜ், 25, கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினத்தைச் சேர்ந்த ராஜா ஆகிய ஆறு பேருடன் சேர்த்து 29 பேர், குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.அரிசி கடத்தல் தொடர்பாக கடந்த ஒன்றரை மாதத்தில் 1,126 வழக்குகள் பதியப்பட்டு, கடத்தல்காரர்களிடம் இருந்து 4,526 குவிண்டால் அரிசி கைப்பற்றப்பட்டுள்ளது. இது தவிர, மண்ணெண்ணெய், காஸ் சிலிண்டர்களும் கடத்தல்காரர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து, கூடுதல் டி.ஜி.பி., ராதாகிருஷ்ணன் கூறும்போது, ""அரிசி கடத்தல்காரர்கள் 29 பேர் கைது செய்யப்பட்டு, குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளது புதிய சாதனை. தொடர்ந்து, அரிசி கடத்தலில் ஈடுபடுபவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். பிடிபடுபவர்கள் மீது, குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக