4 பேரை குறிவைத்தே பிரசாரம்
நான்கு முக்கியஸ்தர்களைக் குறிவைத்தே இலங்கைக்கு எதிரான வெளிநாட்டு சக்திகள் சர்வதேச ரீதியில் பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.நாட்டின் ஜனாதிபதி பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ பொருளாதார அபிவிருத்தித் துறை அமைச்சர் பசில் ராஜபக்ஷ மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவை ஆகியோரை இலக்கு வைத்தே அந்த சக்திகள் செயற்படுகின்றனரென்றும் மற்ற அரசாங்கத் தலைவர்கள் மீது எவ்வித குற்றச்சாட்டும் சுமத்தப்படவில்லையென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
எங்களிடம் மறைக்கும் இரகசியங்கள் எவையும் இல்லை என்று தெரிவித்த
ஜனாதிபதி சிலகாலத்திற்கு முன்னர் இராணுவத்தினர் சிலர் பெண்கள் மீது பாலியல் துஷ்பிரயோகத்தை மேற்கொண்டார்கள் என்ற குற்றச்சாட்டின் மீது விசாரணை நடத்தி தண்டித்திருக்கிறோம் என்று சொன்னார்.
அது போன்று திருகோணமலையில் சில இளைஞர்களை சுட்டுக்கொன்ற ஒரு பொலிஸ் படைப்பிரிவையே தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் பல மாதங்கள் நாம் தடுத்து வைத்திருந்தோம். த.வி.கூ. தலைவர் ஆனந்தசங்கரி இவர்கள் நிரபராதிகள் என்று தெரிவித்ததை அடுத்தே என்னால் விடுவிக்கப்பட்டனர் என்றும் கூறினார்.
யுத்தம் நடந்து கொண்டிருந்த போது இராணுவத்தினர் பெண்களை மானபங்கப்படுத்தினார்கள் என்றும் சர்வதேச ரீதியில் குற்றங்கள் சுமத்தப்படுகின்றன. யுத்தம் நடந்து கொண்டிருக்கும் வேளையில் ஒரு இராணுவ வீரன் தனது உயிரை பணயம் வைத்து இத்தகைய கொடுமைகளில் ஈடுபடுவானா? என்று நாம் சற்று சிந்தித்து பார்க்க வேண்டும்.எனவே இவ்வாறாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை இராணுவத்தின் மீது சுமத்துபவர்கள் அது நடை முறையில் சாத்தியப்படுமா என அவதானித்த பின்னர் செயற்படுவது புத்திசாலித்தனமானது என்று ஜனாதிபதி ஊடக முக்கியஸ்தர்களுடனான சந்திப்பின் போது தெரிவித்தார் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக