வியாழன், 28 ஜூலை, 2011

வியாபாரியை அரை நிர்வாணப்படுத்தி சித்ரவதை இன்ஸ்பெக்டர் ஆஜராக

மதுரை : நெல்லை அருகே நெல் வியாபாரியை அரை நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்ததாக தாக்கலான மனு குறித்து இன்று நேரில் ஆஜராக விக்கிரமசிங்கபுரம் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணனுக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.நெல்லை கல்லிடைகுறிச்சியை சேர்ந்த நெல் வியாபாரி சுப்ரமணியன்(45) தாக்கல் செய்த ரிட் மனு:
நான் மன்னார்குடியை சேர்ந்த பாலசந்திரனிடம் நெல் வாங்கி விற்பனை செய்கிறேன். நெல் வாங்கியதற்கான பணத்தை கொடுத்தும், கூடுதல் பணம் கேட்டு பாலசந்திரன் என்னை தொந்தரவு செய்தார். அவரது ஏஜன்ட் அந்தோணிராஜ் மூலம் பணத்தை கேட்டார். இதனால் பாலசந்திரனுக்கு எதிராக அம்பாசமுத்திரம் கோர்ட்டில் சிவில் வழக்கு தொடர்ந்தேன். ஆத்திரமுற்ற அந்தோணிராஜ், என் மீது விக்கிரமசிங்கபுரத்தில் பொய் புகார் ஒன்றை கொடுத்தார். இதுகுறித்து விசாரித்த இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், என்னிடம் பேப்பர்களில் எழுதி கையெழுத்து வாங்கினார். அவர் குறித்து நெல்லை எஸ்.பி.,யிடம் புகார் செய்தேன். ஆத்திரமுற்ற இன்ஸ்பெக்டர், ஜூலை 9ல் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து என்னை அரை நிர்வாணப்படுத்தி, ஸ்டேஷனுக்கு கைவிலங்கிட்டு அழைத்து சென்றார். அங்கு உணவு கொடுக்காமல், விசாரணை என சித்ரவதை செய்தனர். என்னை சந்திக்க உறவினர்களை அனுமதிக்கவில்லை. இதுகுறித்து டி.ஜி.பி.,க்கு ஜூலை 11ல் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும், என தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் சார்பில் வக்கீல்கள் ஆர்.அழகுமணி, பூமிநாதன் ஆஜராயினர். மனு குறித்து இன்று நேரில் வழக்கு ஆவணங்களுடன் ஆஜராகும்படி இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணனுக்கு நீதிபதி ஆர்.சுதாகர் உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக